ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் என்னைவிட்டுத் தூரமானார்கள். அவர்கள் பாகால் தெய்வங்களுக்குப் பலியிட்டு, உருவச் சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள்.
நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும் மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன். ஒரு சிறு குழந்தையை கன்னத்தில் தூக்கும் ஒருவரைப்போல இருந்தேன், அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன், அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன்.
நிச்சயமாக அவர்களுடைய தீமையான திட்டங்களினால் வாள் அவர்களுடைய பட்டணங்களுக்குள் பாய்ந்து, வாசல் கதவுகளின் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டு, அவர்களை அழிக்கும்.
“ஆனாலும் எப்பிராயீமே, எப்படி நான் உன்னைக் கைவிடுவேன்? இஸ்ரயேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் எப்படி உன்னை அத்மா பட்டணத்தைப்போல் அழிக்கமுடியும்? நான் எப்படி உன்னை செபோயீமைப்போல் ஆக்கமுடியும்? என் இருதயமோ எனக்குள் மாற்றமடைந்திருக்கிறது; என் கருணை பொங்குகிறது.
ஆகவே எனது கடுங்கோபத்தை செயல்படுத்தமாட்டேன்; நான் திரும்பி எப்பிராயீமை அழிக்கமாட்டேன். ஏனெனில் எப்படியிருந்தும் உங்கள் மத்தியில் வாழ்கின்ற பரிசுத்தரான நான் மனிதனல்ல; நான் இறைவன். எனவே நான் கடுங்கோபத்துடன் வரமாட்டேன்.
ஒருகாலத்தில் அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கர்ஜிப்பார். அவர் கர்ஜிக்கும்போது, அவருடைய பிள்ளைகள் மேற்குத் திசையிலிருந்து நடுக்கத்துடன் வருவார்கள்.
எகிப்திலிருந்து பறவைகள் வருவதுபோலவும், அசீரியாவிலிருந்து புறாக்கள் வருவதுபோலவும் அவர்கள் நடுக்கத்துடன் வருவார்கள். நான் அவர்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்துவேன்” என யெகோவா அறிவிக்கிறார்.