English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Hebrews Chapters

Hebrews 10 Verses

1 மோசேயின் சட்டம் வரப்போகின்ற நன்மைகளின் ஒரு நிழல் மாத்திரமே, அதன் நிஜமல்ல. இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும், திரும்பத்திரும்ப தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்ட பலிகளின் மூலமாய், வழிபாட்டிற்கு வருகிறவர்களை ஒருபோதும் முழுமை பெறச்செய்ய, மோசேயின் சட்டத்தால் இயலாதிருக்கிறது.
2 அவ்வாறு முடியுமாயிருந்தால், பலிகள் செலுத்துவதும் நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில் இறைவனை ஆராதிக்கிற மக்கள், ஒரே முறையாகத் தங்களுடைய பாவங்களிலிருந்து உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவத்தைக்குறித்துத் தொடர்ந்து குற்ற உணர்வுடையவர்களாய் இருந்திருக்கமாட்டார்களே!
3 ஆனால் அந்த பலிகள் ஒவ்வொரு வருடமும், பாவங்களை நினைப்பூட்டுவதாகவே இருந்தன.
4 ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிப்போட முடியாது.
5 இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது, அவர் சொன்னதாவது: “பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்;
6 தகன காணிக்கைகளிலும், பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை.
7 புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடி, ‘இதோ நான் இருக்கிறேன்; இறைவனே, அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன் என்றேன்.’ ” [*சங். 40:6-8 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)]
8 முன்பு கிறிஸ்து, “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரணக் காணிக்கைகளையும் நீர் விரும்பவுமில்லை, அவற்றில் நீர் பிரியப்படவுமில்லை” என்றார். ஆனால் மோசேயின் சட்டத்தின்படி அவை செலுத்தப்பட்டன.
9 பின்பு அவர், “இதோ, நான் இருக்கிறேன், அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலாவதை நீக்கிவிட்டு, இரண்டாவதை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார்.
10 இவ்விதமாக, இயேசுகிறிஸ்து ஒரேதரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதின் மூலம் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றினதினால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார்.
11 ஒவ்வொரு ஆசாரியனும் நாள்தோறும் இறைசமுகத்தில் நின்று, தனது பணிகளைச் செய்கிறான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத்திரும்ப செலுத்துகிறான்.
12 ஆனால் கிறிஸ்துவாகிய இந்த ஆசாரியன், பாவங்களுக்கான ஒரே பலியை எல்லாக் காலத்திற்குமாக செலுத்தி, பின் இறைவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார்.
13 அந்தவேளைமுதல், கிறிஸ்து தமது பகைவர்கள் தமது பாதபீடமாக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
14 ஏனெனில் கிறிஸ்து ஒரே பலியினாலே, பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
15 பரிசுத்த ஆவியானவரும் இதைக்குறித்து நமக்கு சாட்சி கொடுக்கிறார். அவர் முதலில் சொல்கிறதாவது:
16 “அந்த நாட்களுக்குப்பின்பு, நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: நான் எனது சட்டங்களை அவர்களுடைய இருதயங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய மனங்களில் நான் எழுதுவேன் [†எரே. 31:33] என்று கர்த்தர் சொல்கிறார்.”
17 பின்னும் அவர் சொல்லுகிறதாவது: “நான் அவர்களுடைய பாவங்களையும் சட்டமீறுதல்களையும் ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.” [‡எரே. 31:34]
18 எனவே, எங்கே பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அங்கே பாவங்களை நீக்குவதற்கான எவ்வித பலியும் இனிமேல் தேவையில்லை.
19 ஆகையால் பிரியமானவர்களே, இயேசுவினுடைய இரத்தத்தின் மூலமாய் மகா பரிசுத்த இடத்திற்குள் செல்வதற்கு தைரியம் நமக்கு உண்டு.
20 அவர் திரைச்சீலையின் மூலமாக ஒரு புதிதாக வாழும் வழியை நமக்குத் திறந்திருக்கிறார். அதுவே அவருடைய மாம்சம்.
21 இப்பொழுது இறைவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாக நமது பிரதான ஆசாரியர் இருக்கிறபடியால்,
22 நாம் குற்றமனசாட்சி நீக்கப்பட்ட, சுத்த இருதயத்துடனும், சுத்தமான தண்ணீரினால் கழுவப்பட்ட உடலுடனும், பரிபூரண விசுவாசமுள்ள உண்மையான உள்ளத்துடனும், இறைவனை அணுகி சேருவோமாக.
23 நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் வாக்குமாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகிற நம்பிக்கையை வழுவாது உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம்.
24 அத்துடன் நாம் அன்பாயிருப்பதிலும் நற்செயல்களைச் செய்வதிலும் எப்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம் என்பதைப்பற்றி சிந்திப்போம்.
25 சிலர் சபையாக ஒன்றுகூடி வருவதை விட்டுவிடுகிறதுபோல, நாமும் செய்யாமல் கர்த்தருடைய நாள் நெருங்கி வருவதைக் காண்கிறதினால் நாம் ஒருவரையொருவர் இன்னும் அதிகமாய் ஊக்குவிப்போம்.
26 நாம் சத்தியத்தை அறியும் அறிவைப் பெற்ற பின்னும், வேண்டுமென்றே பாவம் செய்துகொண்டு இருப்போமானால், இனிமேலும் பாவங்களை நீக்குவதற்கான பலி வேறொன்றும் இருக்காது.
27 ஆனால் பயப்படத்தக்கதான நியாயத்தீர்ப்பையும், இறைவனின் பகைவர்களைச் சுட்டெரிக்கின்றதான பற்றியெரியும் நெருப்பையுமே எதிர்நோக்க வேண்டும்.
28 மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்த எவரும், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தினாலே இரக்கம் காட்டப்படாமல் மரித்தார்கள்.
29 அப்படியானால் இறைவனின் மகனை காலின்கீழ் மிதித்தவன், தன்னைப் பரிசுத்தமாக்கிய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமாக எண்ணியவன், கிருபையைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரை அவமானப்படுத்தியவன் இன்னும் எவ்வளவு கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்று யோசித்துப் பாருங்கள்.
30 ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே ஏற்றபடி பதில் செய்வேன்” [§உபா. 32:35] என்றும், “கர்த்தர் தமது மக்களை நியாயந்தீர்ப்பார்” [*உபா. 32:36; சங். 135:14] என்றும் சொல்லியிருக்கிறவரை நமக்குத் தெரியும்.
31 ஜீவனுள்ள இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே.
32 வெளிச்சத்தை நீங்கள் பெற்ற ஆரம்ப நாட்களில் நீங்கள் பல வேதனைகளின் மத்தியில், பெரும் போராட்டத்தில் நிலைத்து நின்ற உங்கள் நிலையை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
33 சில சமயங்களில் நீங்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள். இன்னும் வேறுசில சமயங்களில், இவ்விதம் துன்புறுத்தப்பட்டவர்களுடன் தோள்கொடுத்து நின்றீர்கள்.
34 சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காண்பித்தீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, அவற்றைவிடச் மேன்மையானதும், என்றும் நிலைத்திருக்கிறதுமான உரிமைச்சொத்து உங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்திருந்ததினால் அதை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டீர்கள்.
35 ஆகையால் உங்களுக்கிருக்கும் அந்த மனவுறுதியை நீங்கள் இழந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு ஒரு பெரிதான வெகுமதியைக் கொண்டுவரும்.
36 நீங்கள் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே நீங்கள் இறைவனுடைய சித்தத்தைச் செய்து முடித்தபின், அவர் வாக்குக்கொடுத்ததைப் பெற்றுக்கொள்வீர்கள்.
37 ஏனெனில், “வருகிறவர் கொஞ்சக் காலத்திலே, வந்துவிடுவார். அவர் தாமதிக்கமாட்டார். [†ஏசா. 26:20; ஆப. 2:3]
38 ஆனால், “எனது நீதிமான்கள் [‡சில கையெழுத்துப் பிரதிகளில் எனது நீதிமான்கள் என்பது நீதிமான்கள் என்றுள்ளது] விசுவாசத்தினாலே பிழைப்பார்கள். அவர்களில் ஒருவனாவது பின்வாங்கிப்போனால், நான் அவனில் பிரியமாயிருக்கமாட்டேன்” [§ஆப. 2:4 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)] என்ற உற்சாகமூட்டும் வேதவசனங்களை நாம் அறிவோம்.
39 நாமோ விசுவாசத்திலிருந்து பின்வாங்கி, அழிந்துபோகிறவர்களோடு அல்ல. விசுவாசித்து, இரட்சிக்கப்படுகிறவர்களோடே சேர்ந்தவர்களாயிருக்கிறோம்.
×

Alert

×