யெகோவாவே, உம்முடைய புகழைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், யெகோவாவே, நீர் நடப்பித்த உம்முடைய செயல்களின் நிமித்தம் நான் வியப்படைந்து நிற்கிறேன். எங்கள் நாட்களிலும் அவற்றைப் புதுப்பியும், எங்கள் காலத்திலும் அவற்றை அனைவரும் அறியும்படி செய்யும்; உமது கோபத்திலும், எங்களுக்கு இரக்கத்தை நினைத்தருளும்.
இறைவன் தேமானிலிருந்தும் [*யூதான் தெற்கு திசையில் இருந்த ஏதோம் நாட்டின் ஒரு மாவட்டம் தேமன்] , பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் [†பரான் மலை சீனாயின் பிரதேசத்தில் ஒரு தரிசு இடமாக இருந்தது] வந்தார். அவரது மகிமை, வானங்களை மூடியது; அவரது துதி, பூமியை நிரப்பியது.
அவர் நின்று பூமியை அளந்தார்; அவருடைய பார்வையைக் கண்டு நாடுகள் நடுங்கின. பூர்வீக மலைகள் நொறுங்கின, என்றுமுள்ள குன்றுகள் வீழ்ந்தன; அவருடைய வழிகளோ நித்தியமானவை.
உமது மக்களை விடுதலை செய்யவும், அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர். நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர். நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர்.
மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் நிர்கதியானவர்களை விழுங்க வருவதுபோல, அவனுடைய இராணுவவீரர் எங்களைச் சிதறடிக்கும்படி புயலைப்போல் வந்தார்கள். அப்பொழுது நீர் அவனுடைய சொந்த ஈட்டியினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர்.
நான் அந்த சத்தங்களைக் கேட்டபோது என் இருதயம் படபடத்தது. அந்தச் சத்தத்தில் என் உதடு துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் கால்கள் நடுங்கின. எனினும் எங்கள்மேல் படையெடுத்த, நாட்டின்மேல் வரப்போகும் பேரழிவின் நாளுக்காக, நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும், ஒலிவமரம் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும், ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும், மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும்,