English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Habakkuk Chapters

Habakkuk 2 Verses

1 நான் போய் என் காவல் கோபுரத்தில் நிற்பேன். காவல் அரண்கள்மேல் நான் நிலைகொள்வேன், யெகோவா எனக்கு என்ன சொல்வார் என்று அறியும்படி நான் பார்த்திருப்பேன். நான் கண்டிக்கப்பட்டால், என்ன மறுமொழி சொல்வேன் எனவும் சிந்தித்துக் கொண்டிருப்பேன்.
2 அப்பொழுது யெகோவா பதிலளித்துச் சொன்னதாவது: “இந்த வெளிப்படுத்துதலை எழுதிவை, அதை கற்பலகையில் தெளிவாய் பொறித்து வை. தூதுவன் அதனுடன் விரைவாய் ஓடி அறிவிக்கக்கூடியதாக இருக்கட்டும்.
3 இந்த வெளிப்படுத்தல், அதற்கு நியமிக்கப்பட்ட காலத்தில் நிறைவேறக் காத்திருக்கிறது. அது முடிவு காலத்தைப்பற்றிச் சொல்கிறது, அது பொய்யாய் போகமாட்டாது. அது வருவதற்குக் காலம் தாழ்த்தினாலும், அதற்காகக் காத்திரு, அது நிச்சயமாய் வரும், அது தாமதிக்காது.
4 “பார், தற்பெருமை கொண்டிருக்கிறானே, அவனுடைய ஆசைகள் நேர்மையானவை அல்ல; ஆனால் நீதிமானோ விசுவாசத்தினாலே வாழ்வான்.
5 உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது; அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கிறான். ஏனெனில் அவன் பாதாளத்தைப்போல் பேராசை உள்ளவனாயும், சாவைப்போல் திருப்தி அற்றவனாயும் இருக்கிறான். அதனால் அவன் எல்லா நாடுகளையும் தனக்கெனச் சேர்த்துக்கொள்கிறான். எல்லா மக்கள் கூட்டங்களையும் கைதிகளாகக் கொண்டுபோகிறான்.
6 “அவர்கள் எல்லோரும் அவனை நிந்தித்து அவதூறு செய்து, “ ‘இவ்வாறு பழிசொல்லமாட்டார்களோ: ஐயோ, களவாடிய பொருட்களைக் குவித்து, பலவந்தமாய் பணம் பறித்து செல்வந்தனாகிற உனக்குக் கேடு, எவ்வளவு காலத்துக்கு இது நடக்கப்போகிறது?’
7 உன் கடன்காரர்கள் திடீரென்று எழும்பமாட்டார்களோ? அவர்கள் எழுந்து உன்னை நடுங்கவைக்கமாட்டார்களோ? அப்பொழுது நீ அவர்களுடைய தண்டனைக்கு ஆளாவாயே.
8 பல நாடுகளை நீ கொள்ளையடித்ததினால், மீந்திருக்கும் மக்கள் கூட்டங்கள் உன்னைக் கொள்ளையடிப்பார்கள். ஏனெனில் நீ மனிதர்களின் இரத்தத்தைச் சிந்தினாய்; நாடுகளையும், நகரங்களையும் அங்குள்ள அனைவரையும் அழித்தாயே.
9 “ஐயோ, அநியாயமான ஆதாயத்தினால் தன் வீட்டைக் கட்டுகிறவனுக்குக் கேடு, அவன் அழிவின் பிடியிலிருந்து தப்பும்படி தன் கூட்டை உயரத்தில் கட்டப் பார்க்கிறானே!
10 நீ அநேக மக்கள் கூட்டங்களை அழிக்கும்படி சூழ்ச்சி செய்தாய். அதனால் உன் வீட்டிற்கு வெட்கத்தையும், உன் உயிருக்கு ஆபத்தையும் தேடிக் கொண்டாய்.
11 உன் வீட்டுச் சுவரின் கற்கள் கூக்கூரலிடும். மரவேலைப்பாடுகள் உள்ள உத்திரங்கள் எதிரொலிக்கும்.
12 “ஐயோ, இரத்தம் சிந்துவதினால் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்பி, குற்றச் செயலால் ஒரு பட்டணத்தை நிலைநிறுத்துகிற பாபிலோனுக்குக் கேடு!
13 சேனைகளின் யெகோவா, மக்களின் உழைப்பு நெருப்புக்கான விறகாகும் என்றும், நாடுகளின் முடிவில்லாத உழைப்பு பயனற்றதாய் போகும் என்றும் அறிவிக்கிறாரே.
14 கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பதுபோல, பூமி யெகோவாவின் மகிமையைப்பற்றிய அறிவினால் நிறைந்திருக்கும்.
15 “ஐயோ, தன் அயலவர்களுக்கு அவர்கள் வெறிக்கும்வரை தோல் குடுவையிலிருந்து மதுவை ஊற்றிக் கொடுக்கிறவனுக்குக் கேடு, அவன் அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படி இப்படிச் செய்கிறானே!
16 நீ மகிமைக்குப் பதிலாய் வெட்கத்தினால் நிரப்பப்படுவாய். இப்பொழுது உன்னுடைய முறை வந்துவிட்டது! நீயும் குடித்து உன் நிர்வாணத்தை வெளியே காட்டு! யெகோவாவின் வலதுகையிலுள்ள தண்டனையின் கிண்ணம் உன்மேல் வருகிறது, அப்பொழுது உன் மகிமையை அவமானம் மூடிவிடும்.
17 நீ லெபனோனுக்குச் செய்த கொடுமைகள் உன்னை மேற்கொள்ளும். நீ மிருகங்களுக்குச் செய்த பேரழிவு உனக்குத் திகிலூட்டும். ஏனெனில் நீ மனிதனுடைய இரத்தத்தைச் சிந்தினாய்; நாடுகளையும், நகரங்களையும் அங்குள்ள அனைவரையும் அழித்தாயே.
18 “ஒரு விக்கிரகத்திற்கு என்ன மதிப்பு உண்டு, அதை மனிதன்தானே செதுக்கினான்? பொய்களை போதிக்கும் ஒரு உருவச்சிலைக்கு என்ன மதிப்பு உண்டு? ஏனென்றால் அதை செய்பவன், தான் உருவாக்கியதிலேயே நம்பிக்கையை வைக்கிறான்; அவன் பேசமுடியாத விக்கிரகங்களைச் செய்கிறான்.
19 ஐயோ, மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து, ‘உயிர் பெறு’ என்றும், உயிரற்ற சிலையைப்பார்த்து, ‘எழுந்திரு’ என்றும் சொல்கிற பாபிலோனுக்குக் கேடு! இவற்றினால் வழிகாட்ட முடியுமா? இவை தங்கத்தினாலும் வெள்ளியினாலும் மூடப்பட்டிருக்கின்றன; இவற்றிலே சுவாசம் இல்லை.”
20 ஆனால் யெகோவாவோ தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமி முழுவதும் அவருக்குமுன் மவுனமாய் இருப்பதாக.
×

Alert

×