English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Genesis Chapters

Genesis 49 Verses

1 பின்பு யாக்கோபு தன் மகன்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி நில்லுங்கள், இனிவரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.
2 “யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பன் இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள்.
3 “ரூபன், நீ என் முதற்பேறானவன், நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன், நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன்.
4 தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்; ஏனெனில், நீ உன்னுடைய தகப்பனின் படுக்கைக்குப்போய், என் கட்டிலைத் தீட்டுப்படுத்தினாய்.
5 “சிமியோனும், லேவியும் சகோதரர்கள். அவர்களின் வாள்கள் வன்முறையின் ஆயுதங்கள்.
6 நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும், அவர்களுடைய கூட்டத்தில் சேராமலும் இருப்பேனாக. ஏனெனில், அவர்கள் தங்கள் கோபத்தினால் மனிதரைக் கொன்றார்கள், தாங்கள் விரும்பியவாறு எருதுகளை முடமாக்கினார்கள்.
7 அவர்களுடைய பயங்கரமான கோபமும், கொடூரமான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; நான் அவர்களை யாக்கோபிலே பிரியச்செய்து, இஸ்ரயேலிலே சிதறப்பண்ணுவேன்.
8 “யூதா, உன் சகோதரர் உன்னைப் புகழ்வார்கள்; உன் பகைவர்களின் கழுத்தின்மேல் உன்னுடைய கை இருக்கும்; உன் தகப்பனின் மகன்கள் உன்முன் பணிவார்கள்.
9 யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி; என் மகனே, நீ இரைதின்று திரும்புகிறாய். அவன் சிங்கத்தைப்போலும் பெண் சிங்கத்தைப்போலும் மடங்கிப் படுக்கிறான்; அவனை எழுப்பத் துணிபவன் யார்?
10 செங்கோலுக்குரியவர் வரும்வரை செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது, ஆளுநரின் கோல் அவனுடைய பாதங்களைவிட்டு விலகாது; நாடுகளின் கீழ்ப்படிதல் அவருக்கே உரியது.
11 அவன் தன் கழுதையை திராட்சைச் செடியிலும், தன் கழுதைக் குட்டியைச் சிறந்த திராட்சைக் கொடியிலும் கட்டுவான்; அவன் தன் உடைகளைத் திராட்சை இரசத்திலும், அங்கிகளைத் திராட்சைப்பழச் சாற்றிலும் கழுவுவான்.
12 அவனுடைய கண்கள் திராட்சை இரசத்தைவிட கருமையும், பற்கள் பாலைவிட வெண்மையுமாய் இருக்கும்.
13 “செபுலோன் கடற்கரையில் குடியிருந்து, கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரை பரந்திருக்கும்.
14 “இசக்கார் இரண்டு பொதிகளுக்கிடையே படுத்திருக்கும் பலமுள்ள கழுதை.
15 அவன் தன் இளைப்பாறும் இடம் எவ்வளவு நல்லதென்றும், தனது நாடு எத்தகைய மகிழ்ச்சிக்குரியது என்றும் கண்டு, சுமைக்குத் தன் தோளை சாய்ப்பான்; கட்டாய வேலைக்கும் இணங்குவான்.
16 “தாண் இஸ்ரயேலின் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாயிருந்து, தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
17 தாண், குதிரைமீது போகிறவன் இடறிவிழும்படி பாதையோரம் கிடந்து, குதிரைகளின் குதிங்காலைக் கடிக்கிற பாம்பைப்போலவும், வழியிலே கிடக்கும் விரியன் பாம்பைப்போலவும் இருப்பான்.
18 “யெகோவாவே, நான் உம்முடைய மீட்புக்காகக் காத்திருக்கிறேன்.
19 “காத் கொள்ளைக் கூட்டத்தாரால் தாக்கப்படுவான், ஆனாலும் இறுதியில் அவன் அவர்களைத் தாக்குவான்.
20 “ஆசேருடைய உணவு கொழுமையானதாய் இருக்கும்; அரசனுக்குத் தகுந்த சுவையான உணவை அவன் கொடுப்பான்.
21 “நப்தலி [*நப்தலி என்றால் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசுவான் என்று அர்த்தம்.] அழகான குட்டிகளை ஈனும் விடுதலை பெற்ற பெண்மான்.
22 “யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றருகில் கனிதரும் திராட்சைக்கொடி. அவனுடைய கிளைகள், மதில்களில் ஓங்கி வளரும்.
23 வில்வீரர் அவனைக் கொடூரமாகத் தாக்கினார்கள்; பகைமையுடன் அவன்மேல் எய்தார்கள்.
24 ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவனுடைய பெலமுள்ள புயங்கள் சுறுசுறுப்பாயிருந்தன; யாக்கோபின் வல்லவரின் கரத்தினாலும், மேய்ப்பராலும், இஸ்ரயேலுடைய கற்பாறையாலும்,
25 உனக்கு உதவிசெய்யும் உன் தகப்பனின் இறைவனாலும் இப்படியாகும். அவர் மேலேயுள்ள வானங்களின் ஆசீர்வாதங்களினாலும், கீழேயுள்ள ஆழங்களின் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களின், கருப்பையின் ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிக்கும் எல்லாம் வல்லவராய் இருக்கிறார்.
26 உன் தகப்பனின் ஆசீர்வாதங்கள் நித்திய மலைகளின் ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும், பழைமை வாய்ந்த குன்றுகளின் செழிப்பைப் பார்க்கிலும் பெரிதானவை. இவைகளெல்லாம் யோசேப்பின் தலையின்மேலும், தன் சகோதரருக்குள் பிரபுவாய் இருக்கிறவனின் நெற்றியிலும் தங்குவதாக.
27 “பென்யமீன் ஒரு பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பேராவலுடன் பட்சிப்பான். மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்.”
28 இஸ்ரயேலின் பன்னிரு கோத்திரங்களும் இவர்களே, அவர்களுடைய தகப்பன் அவனவனுக்குத் தகுந்த ஆசீர்வாதங்களைச் சொல்லி, அவர்களை ஆசீர்வதிக்கும்போது சொன்னவை இவையே.
29 பின்பு அவன் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “நான் என் முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்படப் போகிறேன். ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வாங்கிய நிலத்திலே, என் தந்தையர்களை அடக்கம்பண்ணிய குகையிலேயே என்னையும் அடக்கம்பண்ணுங்கள்.
30 அந்தக் குகை கானானிலுள்ள மம்ரேக்கு அருகில் மக்பேலா என்னும் வயல்வெளியில் இருக்கிறது; ஆபிரகாம் அதை ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வயலையும் சேர்த்து கல்லறை நிலமாக வாங்கினார்.
31 அங்கேயே ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும், ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்; என் மனைவி லேயாளையும் நான் அங்கேயே அடக்கம்பண்ணினேன்.
32 அந்த நிலமும் குகையும் ஏத்தியரிடமிருந்து வாங்கப்பட்டவை” என்றான்.
33 யாக்கோபு தன் மகன்களுக்கு அறிவுரை கூறிமுடித்ததும், அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் தூக்கிவைத்து, இறுதி மூச்சை விட்டான். இவ்வாறு அவன் தனது முன்னோருடன் சேர்க்கப்பட்டான்.
×

Alert

×