English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Genesis Chapters

Genesis 31 Verses

1 {#1யாக்கோபும் லாபானும் பிரிதல் } “யாக்கோபு எங்கள் தகப்பனின் சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுக்குச் சொந்தமானவற்றிலிருந்தே யாக்கோபு செல்வந்தனாகிவிட்டான்” என்றும் லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேள்விப்பட்டான்.
2 அத்துடன் தன்னைக் குறித்த லாபானின் அணுகுமுறை முன்புபோல் இல்லாதிருப்பதையும் யாக்கோபு கவனித்தான்.
3 அப்பொழுது யெகோவா யாக்கோபிடம், “நீ உன் தந்தையரின் நாட்டிற்கும் உன் உறவினரிடத்திற்கும் திரும்பிப்போ; நான் உன்னுடன் இருப்பேன்” என்றார்.
4 எனவே யாக்கோபு ராகேலையும், லேயாளையும் தன் மந்தைகள் இருக்கும் வயல்வெளிக்கு வரும்படி சொல்லியனுப்பினான்.
5 அவன் அவர்களிடம், “உங்கள் தகப்பனின் அணுகுமுறை என்னிடம் முன்போல் இல்லையென நான் காண்கிறேன்; ஆனால் என் தந்தையின் இறைவன் என்னுடன் இருக்கிறார்.
6 நான் உங்கள் தகப்பனுக்காக என் முழுப்பெலத்துடனும் வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
7 ஆனால் உங்கள் தகப்பனோ பத்துமுறை என் கூலியை மாற்றி என்னை ஏமாற்றினார். அப்படியிருந்தும், அவர் எனக்குத் தீங்குசெய்ய இறைவன் அவரை அனுமதிக்கவில்லை.
8 ‘கலப்பு நிற ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளை ஈன்றன. ‘வரியுடைய ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளையே ஈன்றன.
9 இவ்விதமாக இறைவன் உங்கள் தகப்பனின் வளர்ப்பு மிருகங்களை எல்லாம் எடுத்து அவற்றை எனக்குக் கொடுத்துவிட்டார்.
10 “ஒருமுறை ஆடுகள் சினைப்படும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன்; அதில் நான் ஏறெடுத்துப் பார்க்கும்பொழுது மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் வரியும், கலப்பு நிறமும், புள்ளிகளும் உள்ளதாயிருந்தன.
11 இறைவனின் தூதன் அந்தக் கனவில், ‘யாக்கோபே’ என்று என்னைக் கூப்பிட்டார். ‘இதோ, நான் இருக்கிறேன்’ என்று நான் பதிலளித்தேன்.
12 அப்பொழுது அவர் என்னிடம், ‘இதோ பார், மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் எல்லாம் வரிகளும், கலப்பு நிறமும், புள்ளிகளுமுள்ளனவாய் இருக்கின்றன. ஏனெனில் உனக்கு லாபான் செய்வதெல்லாவற்றையும் நான் கண்டேன்.
13 நீ ஒரு தூணை அபிஷேகம் செய்து, என்னுடன் பொருத்தனை செய்துகொண்ட இடமான, பெத்தேலின் இறைவன் நானே; உடனே இந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டு, உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போ’ என்றார்” என்றான்.
14 அதற்கு ராகேலும் லேயாளும் யாக்கோபிடம், “எங்கள் தகப்பனுடைய குடும்பச் சொத்தின் உரிமையிலே எங்களுக்கு இன்னும் பங்கு உண்டோ?
15 அவர் எங்களை அந்நியராய் நினைக்கவில்லையா? எங்களை விற்றது மட்டுமல்ல; எங்களுக்காகச் செலுத்தப்பட்ட கூலியையும் அபகரித்து விட்டாரே!
16 இறைவன் எங்கள் தகப்பனிடமிருந்து எடுத்துக்கொண்ட செல்வங்களெல்லாம், நிச்சயமாக எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்குமே சொந்தம். ஆகையால் இறைவன் உமக்குச் சொன்னவற்றையெல்லாம் செய்யும்” என்றார்கள்.
17 பின்பு யாக்கோபு தன் பிள்ளைகளையும் மனைவிகளையும் ஒட்டகங்களில் ஏற்றி,
18 தனக்குச் சொந்தமான வளர்ப்பு மிருகங்களையும் தனக்கு முன்னால் ஓட்டிக்கொண்டு, தான் பதான் அராமிலே சம்பாதித்த தன் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, கானான் நாட்டிலுள்ள தன் தகப்பன் ஈசாக்கிடம் போகப் புறப்பட்டான்.
19 லாபான் தன் செம்மறியாடுகளுக்கு மயிர்கத்தரிக்கச் சென்றிருந்த வேளை, ராகேல் தன் தகப்பன் வீட்டு சிலைகளைத் திருடி மறைத்து வைத்துக்கொண்டாள்.
20 அதுமட்டுமல்ல, யாக்கோபு அரமேயனான லாபானுக்குச் சொல்லாமலே ஓடிப்போனதினால் அவனை ஏமாற்றினான்.
21 இவ்வாறு யாக்கோபு தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஐபிராத்து ஆற்றைக் கடந்து தப்பியோடி, கீலேயாத் மலைநாட்டை நோக்கிப் போனான்.
22 {#1லாபான் யாக்கோபைப் பின்தொடர்தல் } யாக்கோபு தப்பி ஓடிவிட்டான் என்று மூன்றாம் நாளில் லாபானுக்குச் சொல்லப்பட்டது.
23 லாபான் தன் உறவினர்களோடு ஏழு நாட்களாக யாக்கோபைப் பின்தொடர்ந்து சென்று கீலேயாத் மலையில் அவனிருந்த இடத்தை அடைந்தான்.
24 அன்றிரவு இறைவன் அரமேயனான லாபானின் கனவிலே தோன்றி, “நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ தீமையானவற்றையோ பேசக்கூடாது” என எச்சரித்தார்.
25 லாபான் யாக்கோபைக் கண்டபோது, அவன் கீலேயாத் மலைநாட்டிலே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தான். லாபானும் அவன் உறவினர்களும் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கினார்கள்.
26 அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என்ன செய்துவிட்டாய்? நீ என்னை ஏமாற்றி, என் மகள்களை போர் கைதிகளைப்போல் கொண்டு வந்திருக்கிறாயே!
27 எனக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமாய் ஓடிவந்து என்னை ஏமாற்றியது ஏன்? நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் மேளதாளம், யாழிசையோடு கூடிய பாடலுடனும் மகிழ்ச்சியாய் உன்னை வழியனுப்பியிருப்பேனே.
28 என் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு வழியனுப்பக்கூட நீ விடவில்லை. நீ மூடத்தனமாய் நடந்துகொண்டாய்.
29 உனக்குத் தீங்குசெய்ய என்னால் இயலும்; ஆனால், கடந்த இரவு உன் தகப்பனுடைய இறைவன், ‘நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ, தீமையானவற்றையோ பேசாதபடி கவனமாயிரு’ என்று எனக்குச் சொன்னார்.
30 நீ உன் தகப்பனுடைய வீட்டிற்குப் போவதற்கு ஆவலாயிருந்தபடியாலேயே இப்படிப் புறப்பட்டு வந்துவிட்டாய். ஆனால், ஏன் என் வீட்டுச் சிலைகளைத் திருடினாய்?” என்று கேட்டான்.
31 அதற்கு யாக்கோபு லாபானிடம், “உம்முடைய மகள்களை என்னிடமிருந்து பலாத்காரமாய் எடுத்துப்போடுவீரென்று பயந்தே இப்படிச் செய்தேன்.
32 ஆனால் உம்முடைய வீட்டுச் சிலைகளை வைத்திருப்பவன் எவனையாவது நீர் கண்டுபிடித்தால், அவன் உயிரோடிருக்கமாட்டான். உம்முடைய பொருள்களில் ஏதாவது என்னிடத்திலிருக்கிறதா என்று நீர் எனது உறவினர் முன்னிலையில் சோதித்துப்பாரும்; அப்படியிருந்தால், அவற்றை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் வீட்டுச் சிலைகளைத் திருடியதை யாக்கோபு அறியாதிருந்தான்.
33 அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள்ளும், லேயாளின் கூடாரத்துக்குள்ளும், இரண்டு பணிப்பெண்களின் கூடாரத்துக்குள்ளும் தேடிப்பார்த்தும் ஒன்றையும் காணவில்லை. அவன் லேயாளின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியே வந்து, பின் ராகேலின் கூடாரத்துக்குள் போனான்.
34 அங்கு ராகேல், லாபானின் வீட்டுச் சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் வைத்து அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுதும் தேடியும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
35 ராகேல் தன் தகப்பனிடம், “ஐயா, உமக்குமுன் நான் எழுந்து நிற்கவில்லையென்று கோபிக்க வேண்டாம்; பெண்களுக்குரிய மாதவிடாய் எனக்கு உண்டாயிருக்கிறது” என்றாள். ஆகவே அவன் தேடியும் வீட்டுச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
36 யாக்கோபு கோபமடைந்து லாபானுடன் வாதாடி, “நான் செய்த குற்றமென்ன? நீர் என்னைத் துரத்தி வருவதற்கு நான் செய்த பாவமென்ன?
37 இப்பொழுது என் வீட்டுப் பொருட்களை எல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உமது வீட்டுக்குரிய பொருட்களில் எதையேனும் கண்டெடுத்தீரோ? அவற்றை உமக்கும் எனக்கும் உறவினர்களான, இவர்கள்முன் இங்கே வையும்; இவர்கள் நம் இருவருக்கும் இடையில் நியாயம் தீர்க்கட்டும்.
38 “நான் உம்முடன் இருபது வருடங்கள் இருந்துவிட்டேன். உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், சினையழியவில்லை; உமது மந்தையிலிருந்த கடாக்களை நான் சாப்பிடவுமில்லை.
39 காட்டு மிருகங்களால் கிழித்துக் கொல்லப்பட்டவற்றை உம்மிடத்தில் கொண்டுவராமல், அந்த அழிவை நானே ஈடுசெய்தேன்; ஆனால் நீரோ இரவிலோ, பகலிலோ திருட்டுப்போன எவ்வேளையிலும் என்னிடமிருந்தே நஷ்டஈட்டைக் கேட்டு வாங்கிக்கொண்டீர்.
40 பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என்னை வாட்டின, என் கண்கள் நித்திரையின்றி இருந்தன. இதுவே என் நிலைமையாய் இருந்தது.
41 இவ்விதமாக நான் உமது வீட்டில் இருபது வருடங்கள் இருந்தேன். உமது இரு மகள்களுக்காக பதினாலு வருடங்களும், உம்முடைய மந்தைக்காக ஆறு வருடங்களும் உம்மிடம் வேலைசெய்தேன். நீரோ என் கூலியை பத்துமுறை மாற்றினீர்.
42 என் தகப்பனின் இறைவனும், ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் பயபக்திக்கு உரியவருமானவர் என்னோடு இருந்திராவிட்டால், நீர் என்னை நிச்சயமாய் வெறுங்கையுடனேயே அனுப்பியிருப்பீர். ஆனால் இறைவனோ என் கஷ்டங்களையும், என் கையின் வேலைகளையும் கண்டு, நேற்றிரவு உம்மைக் கண்டித்தார்” என்றான்.
43 அதற்கு லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தையும் என்னுடையதே. நீ காண்பவையெல்லாம் என்னுடையவை. ஆனாலும் என் மகள்களுக்காகவும், அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்காகவும் நான் என்ன செய்யமுடியும்?
44 இப்பொழுது நீ வா; நீயும் நானும் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம். அது நம் இருவருக்கும் இடையே சாட்சியாக இருக்கட்டும்” என்றான்.
45 எனவே யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை ஒரு தூணாக நிறுத்தினான்.
46 அவன் தன் உறவினரிடம், “கற்களைக் குவியுங்கள்” என்றான்; அப்படியே அவர்கள் கற்களை எடுத்து ஒரு குவியலாய்க் குவித்து, அதனருகில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
47 அவ்விடத்திற்கு லாபான், ஜெகர் சகதூதா என்றும், யாக்கோபு, கலயெத் என்றும் பெயரிட்டார்கள்.
48 அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “இக்குவியல் உனக்கும் எனக்குமிடையே இன்று சாட்சியாக இருக்கிறது” என்றான். அதினாலேயே அது கலயெத் என அழைக்கப்பட்டது.
49 அது மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் அவன் யாக்கோபிடம், “நாம் ஒருவரையொருவர் விட்டுத் தூரமாய் போகும்போது, யெகோவா எனக்கும் உனக்கும் இடையே கண்காணிப்பாராக.
50 நீ என் மகள்களைத் துன்பப்படுத்தினாலோ அல்லது அவர்களைவிட்டு வேறு பெண்களைத் திருமணம் செய்தாலோ, அதற்கு வேறு யாரும் சாட்சியாக இல்லாவிட்டாலும், இறைவனே உனக்கும் எனக்கும் இடையில் சாட்சியாயிருக்கிறார் என்று நினைவில் வைத்துக்கொள்” என்றான்.
51 மேலும் லாபான் யாக்கோபிடம், “இதோ இக்குவியலும், எனக்கும் உனக்கும் இடையில் நான் வைத்த தூணும் இங்கே இருக்கின்றன.
52 நான் இக்குவியலைக் கடந்து உனக்குத் தீங்குசெய்ய உன் பக்கம் வரமாட்டேன் என்பதற்கும், நீயும் இக்குவியலையும், தூணையும் கடந்து என் பக்கமாய் எனக்குத் தீங்குசெய்ய வரமாட்டாய் என்பதற்கும் இக்குவியல் ஒரு சாட்சி; இந்தத் தூணும் ஒரு சாட்சி.
53 ஆபிரகாமின் இறைவனும், நாகோரின் இறைவனும், அவர்கள் தகப்பனின் இறைவனுமாய் இருக்கிறவர் நமக்கிடையில் நியாயம் தீர்ப்பாராக” என்றான். அப்படியே யாக்கோபும் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவரின் பெயரால் ஆணையிட்டான்.
54 பின்பு யாக்கோபு அந்த மலைநாட்டில் பலிசெலுத்தி, தன் உறவினர்களைச் சாப்பாட்டுக்கு அழைத்தான். அவர்கள் சாப்பிட்டபின் அன்றிரவு அவ்விடத்தில் தங்கினார்கள்.
55 லாபான் மறுநாள் காலையில் தன் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின்பு அவன் புறப்பட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
×

Alert

×