{#1ஆபிராமும் லோத்தும் பிரிதல் } ஆகையால், ஆபிராம் தன் மனைவியுடனும் தன் எல்லா உடைமைகளுடனும், எகிப்திலிருந்து நெகேப்புக்குப் போனான்; லோத்தும் அவனுடன் போனான்.
அவன் நெகேப்பிலிருந்து இடம்விட்டு இடம்பெயர்ந்து பெத்தேலுக்கு வந்து, அங்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் தான் முன்பு கூடாரம் போட்டிருந்த இடத்துக்கு வந்தான்.
அதனால் ஆபிராமின் மந்தை மேய்ப்பர்களுக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாயின. அக்காலத்தில் கானானியரும், பெரிசியரும் அதே நாட்டில் குடியிருந்தார்கள்.
இதனால் ஆபிராம் லோத்திடம், “எனக்கும் உனக்கும் இடையிலோ அல்லது எனது மந்தை மேய்ப்பருக்கும் உனது மந்தை மேய்ப்பருக்கும் இடையிலோ சச்சரவுகள் வேண்டாம்; ஏனெனில் நாம் நெருங்கிய உறவினர்கள்.
இதோ நாடு முழுவதும் உனக்கு முன்பாக இருக்கிறது அல்லவா? நாம் இருவரும் பிரிந்து போவோம். நீ இடது பக்கம் போனால், நான் வலதுபக்கம் போவேன்; நீ வலதுபக்கம் போனால் நான் இடது பக்கம் போவேன்” என்றான்.
லோத்து சுற்றிலும் பார்த்தபோது, சோவார் வரையுள்ள யோர்தான் சமபூமி முழுவதும் நீர்வளம் நிறைந்திருந்ததைக் கண்டான்; அது யெகோவாவினுடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்குமுன் அவ்வாறு இருந்தது.
ஆபிராம் தன் கூடாரங்களைக் கழற்றிக்கொண்டு, எப்ரோனில் இருக்கும் மம்ரேயின் கருவாலி மரங்களின் அருகே குடியிருக்கச் சென்றான். அங்கே அவன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.