பிரியமானவர்களே, யாராவது ஒரு பாவம் செய்து அகப்பட்டுக்கொண்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனை சாந்தமாக நல்வழிப்படுத்த வேண்டும். நீங்களும் கவனமாயிருங்கள். ஏனெனில், நீங்களும்கூட சோதனைக்கு உள்ளாகலாம்.
ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களைத் தானே சோதித்துப் பார்க்கவேண்டும். அப்பொழுது மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல், தன்னுடைய செயலின் தன்மையிலேயே ஒருவன் பெருமைப்பட முடியும்.
ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்.
ஆகவே நமக்குத் தருணம் கிடைக்கும்போதெல்லாம், எல்லா மக்களுக்கும் நன்மையைச் செய்வோமாக. முக்கியமாக விசுவாசிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.
விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களும், மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளாமல் இருக்கிறார்களே; அப்படியிருக்க உங்கள் விருத்தசேதனத்தைக் குறித்துத் தாங்கள் பெருமிதம் கொள்வதற்காகவே, நீங்களும் அதைச் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைத் தவிர, வேறு எதைக் குறித்தும் பெருமைகொள்வது வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில், அந்தச் சிலுவையில், உலகத்தின் கவர்ச்சிகரமான யாவும் அறையப்பட்டவைகளாக இருக்கின்றன. இந்த உலகத்தின் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நானும் சிலுவையில் அறையப்பட்டவனாகவே இருக்கிறேன்.