எஸ்றா விண்ணப்பம் செய்துகொண்டும், பாவங்களை அறிக்கை செய்துகொண்டும், அழுதுகொண்டும் இறைவனின் ஆலயத்தில் விழுந்து கிடக்கையில் இஸ்ரயேல் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் பெரிய கூட்டமாக வந்து அவனைச்சுற்றி நின்றார்கள். அவர்களும் மனங்கசந்து அழுதார்கள்.
அப்பொழுது ஏலாமின் வழித்தோன்றலில் ஒருவனான யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவிடம், “நாங்கள் எங்களைச் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் இருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்ததினால் எங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களானோம். ஆனாலும் இது நடந்தும்கூட இஸ்ரயேலருக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு.
இப்பொழுதும் நாங்கள் எங்கள் தலைவனாகிய உமது ஆலோசனைப்படியும், இறைவனின் கட்டளைகளுக்குப் பயப்படுகிறவர்களின் ஆலோசனையின்படியும் அந்நிய மனைவிகளையும், அவர்களிடத்தில் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிடுவோம் என, எங்கள் இறைவனுக்கு முன்பாக ஒரு உடன்படிக்கை செய்வோம். இதை நாங்கள் சட்டத்தின்படியே செய்வோம்.
எனவே எஸ்றா எழுந்து பிரதான ஆசாரியர்களையும், லேவியர்களையும், எல்லா இஸ்ரயேலர்களையும் அவர்கள் சொன்னதைச் செய்யும்படி ஆணையிடச் செய்தான். அவர்கள் அப்படியே ஆணையிட்டார்கள்.
பின்பு எஸ்றா இறைவனின் ஆலயத்தின் முன்னிருந்து எழுந்து சென்று எலியாசீப்பின் மகன் யோகனானின் அறைக்குப் போனான். ஆனால் அவன் அங்கிருக்கையில் உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ இல்லை. ஏனெனில், அவன் தொடர்ந்து சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் துரோகச் செயலுக்காகத் துக்கப்பட்டுக் கொண்டிருந்தான்.
அதிகாரிகள் மற்றும் முதியவர்களின் தீர்மானத்தின்படி, மூன்று நாட்களுக்குள் வந்துசேரத் தவறுகிறவனுடைய எல்லாச் சொத்தும் பறிக்கப்பட்டு, சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையில் இருந்து அவன் வெளியேற்றப்படுவான்.
எனவே யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கும் எல்லா மக்களும் இந்த மூன்று நாட்களுக்குள் எருசலேமிலே கூடினார்கள். ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதி எல்லா மக்களும் இறைவனின் ஆலயத்தின் முன்னால் உள்ள சதுக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள். இந்த சம்பவத்தினாலும் மழை பெய்தபடியாலும் மக்கள் மிகவும் சோர்வாக இருந்தனர்.
அப்பொழுது ஆசாரியன் எஸ்றா எழுந்து நின்று அவர்களிடம், “நீங்கள் உண்மையற்றவர்களானீர்கள்; நீங்கள் அந்நிய பெண்களைத் திருமணம் செய்ததினால் இஸ்ரயேலின் குற்றத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தீர்கள்.
இப்பொழுது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பாவ அறிக்கைசெய்து, அவரது திட்டத்தைச் செய்யுங்கள். அத்துடன் உங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களிடமிருந்தும், உங்கள் அந்நிய மனைவிகளிடமிருந்தும் உங்களை விலக்குங்கள்” என்றான்.
எனினும் இங்கு அநேக மக்கள் இருக்கிறார்கள்; இது மழை காலமாகவும் இருக்கிறது. ஆகவே எங்களால் வெளியே நிற்கமுடியாது; இது ஓரிரு நாட்களில் செய்து முடிக்கக்கூடிய காரியமும் அல்ல. ஏனெனில் இந்தக் காரியத்தில் எங்களில் அநேகர் பெரிதாய் பாவம்செய்தோம்.
எனவே இந்தக் காரியத்தில் எங்கள் அதிகாரிகள் முழுச் சபைக்காகவும் செயல்படட்டும். இதினிமித்தம் நம்முடைய இறைவனின் கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் அந்நிய பெண்ணைத் திருமணம் செய்த ஒவ்வொருவனும் அந்தந்தப் பட்டணத்தைச் சேர்ந்த முதியவர்களுடனும், நீதிபதிகளுடனும் குறிப்பிட்ட நேரத்தில் வரட்டும்” என்றார்கள்.
ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்வாவின் மகன் யக்சியாவும் மாத்திரமே இதை எதிர்த்தார்கள். அவர்களுக்கு உதவியாக மெசுல்லாமும், லேவியனான சபெதாயிவும் இருந்தார்கள்.
எனவே நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர்கள் தாங்கள் முன் தீர்மானித்த திட்டத்தின்படி செய்தார்கள். ஆசாரியன் எஸ்றா ஒவ்வொரு குடும்பப் பிரிவிலுமிருந்து குடும்பத் தலைவர்களைத் தெரிவு செய்தான். அவர்கள் எல்லோரின் பெயரும் குறிக்கப்பட்டது. பத்தாம் மாதம் முதலாம் தேதியிலே வழக்குகளை விசாரணை செய்ய அமர்ந்தார்கள்.
ஆசாரியர்களின் வழித்தோன்றலிலிருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்: யோசதாக்கின் மகன் யெசுவாவினுடைய மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
இவர்கள் எல்லோரும் தங்கள் மனைவியரை விலக்கிவிடுவதாக கையடித்து வாக்குக் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் குற்றத்திற்கென குற்றநிவாரண காணிக்கையாக மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தினார்கள்.
மற்ற இஸ்ரயேலருக்குள் இருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்: பாரோஷின் வழித்தோன்றலிலிருந்து ரமீயா, இசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கியா, பெனாயா.