“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கிழக்கு நோக்கியிருக்கும் உள்முற்றத்து வாசல், ஆறு வேலை நாட்களும் மூடப்பட்டிருக்கவேண்டும். ஆனால், ஓய்வுநாட்களிலும், அமாவாசை தினங்களிலும் அது திறக்கப்பட்டிருக்க வேண்டும்.
அரசன் வெளியிலிருந்து இந்த நுழைவு வாசலின் மண்டபத்தின் வழியாக உள்ளே வந்து, வாசல் நிலையருகில் நிற்கவேண்டும். ஆசாரியர்கள் அவனுடைய தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். அவன் நுழைவு வாசலின் முகப்பில் நின்று வழிபாடு செய்தபின், வெளியே போகவேண்டும். ஆனால் சாயங்காலம்வரை வாசல் மூடப்படக்கூடாது.
ஓய்வுநாளில் அரசனால் யெகோவாவுக்கென்று கொண்டுவரப்படும் தகன காணிக்கையானது, பழுதற்ற ஆறு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுமாக இருக்கவேண்டும்.
செம்மறியாட்டுக் கடாவுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கையானது ஒரு எப்பா [*அதாவது, சுமார் 35 பவுண்டுகள் அல்லது சுமார் 16 கிலோகிராம்; மேலும் வசனங்கள் 7 மற்றும் 11 வசனங்களிலும் வருகிறது] அளவுடையதாக இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கை அரசன் விரும்பிய அளவினைக் கொண்டதாயிருக்க வேண்டும். அதோடு ஒவ்வொரு எப்பா அளவு தானியத்துடனும் ஒரு ஹின் [†அதாவது, சுமார் 1 கேலன் அல்லது சுமார் 3.8 லிட்டர்; 7 மற்றும் 11 வசனங்களிலும் வருகிறது] அளவு எண்ணெயும் செலுத்தப்படுதல் வேண்டும்.
அவன் ஒரு காளையுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும், செம்மறியாட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பிய அளவு தானிய காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். ஒவ்வொரு எப்பா தானிய காணிக்கைளுடனும் ஒரு ஹின் அளவு எண்ணெயையும் செலுத்தவேண்டும்.
“ ‘நாட்டு மக்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களில் வழிபாட்டுக்காக யெகோவாவுக்கு முன்வரும்போது வடக்கு வாசல் வழியாக உட்செல்வோர் தெற்கு வாசல்வழியாகவும், தெற்கு வாசல் வழியாக உட்செல்வோர் வடக்கு வாசல்வழியாகவும் வெளியேறவேண்டும். ஒருவரும் தான் உட்சென்ற வாசல் வழியாகத் திரும்பி வெளியேறக்கூடாது. ஒவ்வொருவரும் தாம் உட்சென்ற வாசலுக்கு எதிரே இருக்கும் வாசல்வழியாகவே வெளியேறவேண்டும்.
பண்டிகைகளிலும், நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களிலும் செலுத்தப்படும் தானிய காணிக்கை, ஒரு காளையோடே ஒரு எப்பா அளவுடையதாகவும், ஒரு செம்மறியாட்டுக் கடாவோடே ஒரு எப்பா அளவுடையதாகவும் இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளோடு, அவரவர் விரும்பிய அளவு தானியமும் இருக்கவேண்டும். அத்துடன் ஒவ்வொரு எப்பா அளவு தானியத்திற்கு ஒரு ஹின் அளவு எண்ணெயும் கொண்டதாயிருக்க வேண்டும்.
“ ‘அரசன் தகன காணிக்கையையோ, சமாதான காணிக்கையையோ யெகோவாவுக்கு மனப்பூர்வமான காணிக்கையாகச் செலுத்த வரும்போது, கிழக்கு நோக்கியிருக்கும் வாசல் அவனுக்காகத் திறக்கப்படவேண்டும். ஓய்வுநாளில் செய்வதுபோலவே, தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளையும் அவன் செலுத்தவேண்டும். பின்பு அவன் வெளியே போகவேண்டும். அவன் வெளியே போனபின் வாசல் மூடப்படவேண்டும்.
“ ‘நீங்கள் ஒவ்வொரு நாளும் பழுதற்ற ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஒன்றை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். காலைதோறும் அதைக் கொடுக்கவேண்டும்.
அதனோடு தானிய காணிக்கையாக ஆறில் ஒரு எப்பா அளவு தானிய மாவையும் அதில் தெளிப்பதற்காக மூன்றில் ஒரு ஹின் எண்ணெயையும் காலைதோறும் கொடுக்கவேண்டும். யெகோவாவுக்குக் கொடுக்கப்படவேண்டிய இத்தானிய காணிக்கைகள் ஒரு நித்திய கட்டளையாயிருக்கும்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அரசன் தன் உரிமைச்சொத்திலிருந்து தன் மகன்களில் ஒருவனுக்கு அன்பளிப்பொன்றைக் கொடுப்பானாயின், அது அவனுடைய சந்ததிகளுக்கும் சொந்தமாகும். அது அவர்களின் உரிமைச் சொத்தாகவேண்டும்.
ஆயினும், அவன் தன் உரிமைச்சொத்திலிருந்து தனது வேலைக்காரரில் ஒருவனுக்கு ஒரு அன்பளிப்பைச் செய்திருப்பின் அவ்வேலைக்காரன் விடுதலை வருடம்வரை அதை அனுபவிக்கலாம். பின்பு அது அரசனையே சாரும். அவனுடைய உரிமைச்சொத்தோ அவனுடைய மகன்களுக்கு மட்டுமே சொந்தமாயிருக்கும். அது அவர்களுடையதே.
அரசன் மக்களுடைய உரிமைச்சொத்துக்களில் எதையேனும் எடுத்துக்கொண்டு அவர்களை அவர்களுடைய இருப்பிடத்திலிருந்து துரத்திவிடக்கூடாது. அவன் தன் சொந்த நில உரிமைகளிலிருந்தே தன் மகன்களுக்கான உரிமைச்சொத்துக்களைக் கொடுக்கவேண்டும். அப்பொழுது என் மக்கள் எவருமே தங்கள் நில உரிமைகளிலிருந்து வேறுபிரிக்கப்பட மாட்டார்கள்.’ ”
பின்பு அந்த மனிதன், என்னை வடக்கு நோக்கியிருந்த ஆசாரியருடைய பரிசுத்த அறைகளுக்குப்போகும் வாசலின் பக்கமாயிருந்த, நுழைவு வாசல்வழியாகக் கொண்டுவந்தான். அங்கே அவன் மேற்கு இருபுறத்திலும் ஒரு இடத்தை எனக்குக் காண்பித்தான்.
அவன் என்னிடம், “ஆசாரியர்கள் குற்றநிவாரண காணிக்கையையும், பாவநிவாரண காணிக்கையையும் சமைத்து, தானிய காணிக்கையை வேகவைக்கும் இடம் இதுவே. அவர்கள் இவற்றை வெளிமுற்றத்துக்குக் கொண்டுவரக்கூடாது. ஏனெனில் மக்கள் அவற்றினால் தாங்கள் பரிசுத்தமாக்கப்படுவோம் என எண்ணித் தங்களுக்குத் தீங்குவருவதை தவிர்த்துக்கொள்வதற்காக இப்படிச் செய்வார்கள்.”
வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும், நாற்பது முழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான அடைக்கப்பட்ட முற்றங்கள் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவினதாய் இருந்தது.
நான்கு முற்றங்களின் உட்புற சுவர்களில் சுற்றிலும் கல்லால் செய்யப்பட்ட பக்க விளிம்புகள் இருந்தன. அங்கே சுவர் விளிம்பின் கீழ் அடுப்புகளுக்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன.