“மனுபுத்திரனே, எருசலேமைக்குறித்து, ‘ஆகா, நாடுகளுக்குரிய வாசல் உடைந்திருக்கிறது. அதன் கதவுகள் திறந்து ஊசலாடுகின்றன. இப்பொழுது அவள் பாழானாள்: நான் செழிப்பேன்’ என்று தீரு சொல்லியிருக்கிறாள்.”
ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. தீருவே நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன். கடல் தன் அலைகளை எழும்பப்பண்ணுவதுபோல், நான் அநேக நாடுகளை உனக்கு விரோதமாய்க் கொண்டுவருவேன்.
அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அவர்களுடைய கோபுரங்களை வீழ்த்தி விடுவார்கள். நான் அவளது இடிபாடுகளை வழித்தெடுத்து, அவளை ஒரு வெறும் பாறையாக்கிவிடுவேன்.
கடலின் நடுவே ஒரு தீவாய் இருக்கும் குடியேற்றமில்லாத அவள், மீன் வலைகளை உலர்த்தும் இடமாவாள். நானே இதைச் சொன்னேன், என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அவள் நாடுகளின் கொள்ளைப் பொருளாவாள்.
“ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் அரசருக்கெல்லாம் அரசனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், பெரும் இராணுவப்படை ஆகியவற்றோடு வடக்கேயிருந்து தீருவுக்கு விரோதமாய்க் கொண்டுவரப் போகிறேன்.”
அவன் நாட்டின் உட்பகுதியிலுள்ள உங்கள் குடியிருப்புகளை வாளினால் சூறையாடுவான். அவன் உனக்கு விரோதமாய் முற்றுகையிட்டு, உன் மதில்களுக்கு எதிராக முற்றுகை அரணைக் கட்டி, உனக்கு விரோதமாய் தனது கேடயங்களை உயர்த்துவான்.
அவனுடைய குதிரைகள் அநேகமாயிருப்பதனால், அவை எழுப்பும் தூசி உன் நகரத்தையும் மூடத்தக்க அளவு இருக்கும். மதில்கள் உடைக்கப்பட்ட பட்டணத்திற்குள் மனிதர் நுழைவதுபோல், அவன் உன் வாசலில் நுழைவான். அப்பொழுது போர்க்குதிரைகளும், வண்டிகளும், தேர்களும் இரைகிற சத்தத்தினால் உன் மதில்கள் அதிரும்.
அவர்கள் உன் செல்வங்களைச் சூறையாடி, உன் வியாபாரப் பொருட்களைக் கொள்ளையிடுவார்கள். அவர்கள் உன் மதில்களை இடித்து, உன் அருமையான வீடுகளை நொறுக்கி, அவைகளிலுள்ள கற்களையும், மரங்களையும் அவைகளின் இடிபாடுகளையும் கடலுக்குள் எறிந்துவிடுவார்கள்.
நான் உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலைகளை உலர்த்தும் இடமாக மாறுவாய். நீ ஒருபோதும் திரும்பக் கட்டப்படமாட்டாய். ஏனெனில், யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ஆண்டவராகிய யெகோவா தீருவுக்குக் கூறுவது இதுவே. உன்னில் காயப்பட்டோர் அழுகிறபோதும், படுகொலைகள் நடக்கும்போதும், நீ விழும் சத்தத்தினால் கரையோர நாடுகள் நடுங்காதோ?
அப்பொழுது கடற்கரை வாசிகளின் இளவரசர்கள் அனைவரும் தங்கள் அரியணைகளிலிருந்து இறங்கி, தங்கள் சித்திரத்தையலாடைகளை கழற்றி, தங்கள் வேலைப்பாடுகளமைந்த உடைகளையும் கழற்றிப்போடுவார்கள். திகிலை உடையாக உடுத்திய வண்ணம் அவர்கள் நிலத்தில் உட்காருவார்கள். ஒவ்வொரு வினாடியும், நடுக்கத்தோடு உன்னைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்.
பின்பு அவர்கள் உன்னைக்குறித்து புலம்பல் வைத்து, “ ‘கடல் மனிதர்களால் நிறைந்து பேர்பெற்ற நகரமே, நீ எவ்வளவாய் அழிந்துபோனாய்? நீயும் உன் குடிமக்களும் கடலில் வலிமையுடையவர்களாய் இருந்தீர்கள். அங்கு வாழ்ந்தவர்களையெல்லாம் நீங்கள் திகிலடையச் செய்தீர்களே!
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் உன்னைக் குடியற்ற நகரங்களைப்போல் பாழ் நகரம் ஆக்குவேன். சமுத்திரத்தின் ஆழங்களை உன்மேல் கொண்டுவருவேன். அதன் பெருவெள்ளத்தால் உன்னை மூடுவேன்.
பின்பு நான் உன்னை குழியில் இறங்குகிற மக்களோடு பூர்வீக மக்களிடம் இறங்கச்செய்வேன். நான் உன்னைப் பூமியின் அடியில் பூர்வகால இடிபாடுகள் இருக்கும் இடங்களில், குடியிருக்கப்பண்ணுவேன். குழியில் இறங்குகிறவர்களோடு நீயும் போவாய். திரும்பி வரவுமாட்டாய். வாழ்வோர் நாட்டில் உனக்குரிய இடத்தைப் பெற்றுக்கொள்ளவுமாட்டாய்.
நான் உனக்குப் பயங்கர முடிவைக் கொண்டுவருவேன். இனிமேல் நீ இருக்கப்போவதில்லை. நீ தேடப்படுவாய். ஆனால் மறுபடியும் நீ காணப்படமாட்டாய், என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”