English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 12 Verses

1 யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது:
2 “மனுபுத்திரனே, நீ கலகம் செய்யும் குடும்பத்தாரின் மத்தியில் வாழ்கிறாய். அவர்களுக்கு பார்ப்பதற்குக் கண்கள் இருந்தும் காண்பதில்லை, கேட்பதற்குக் காதுகள் இருந்தும் கேட்பதில்லை. ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தார்.
3 “ஆகையால் மனுபுத்திரனே, நீ நாடுகடத்தப்படுவதற்காக உனது பயண பொருட்களை ஆயத்தப்படுத்து. அவர்கள் காணத்தக்கதாக பகல் வேளையிலே உன் இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு, வேறு இடத்திற்குப் போ. அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தாராய் இருப்பினும் ஒருவேளை இதை விளங்கிக்கொள்வார்கள்.
4 பகல் வேளையிலே அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், நாடுகடத்தப்படுவதற்காக நீ ஆயத்தப்படுத்திய உன் உடைமைகளை வெளியே எடுத்து வா. அதன்பின் மாலை வேளையிலே அவர்கள் முன்னிலையில் நாடுகடத்தப்பட்டுப் போகிறவர்கள்போலப் புறப்படு.
5 அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலே, சுவரில் ஒரு துளையிட்டு அதின் வழியாக உனது பயண பொருட்களை வெளியே கொண்டுபோக வேண்டும்.
6 இருள்சூழும் வேளையில் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவைகளை உன் தோள்மீது வைத்தபடி கொண்டுபோ. நாட்டைப் பார்க்க முடியாதபடி நீ உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நான் உன்னை ஒரு அடையாளமாக்கியிருக்கிறேன்” என்றார்.
7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்ட எனது உடைமைகளை, பகல் வேளையிலே வெளியே கொண்டுவந்து வைத்தேன். பின்பு மாலைவேளையில் எனது கைகளினால் சுவரில் துவாரமிட்டேன். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் இருள்சூழும் வேளையிலே, அதை வெளியே எடுத்து என் தோள்மீது வைத்துக்கொண்டு போனேன்.
8 காலையிலே யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது.
9 “மனுபுத்திரனே, அந்தக் கலகம் செய்பவர்களாகிய இஸ்ரயேல் குடும்பத்தார், ‘நீ என்ன செய்கிறாய்?’ எனக் கேட்டார்கள் அல்லவா.
10 “நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, இது எருசலேமின் அரசனையும் அங்கிருக்கும் இஸ்ரயேலரின் முழுக் குடும்பத்தையும் குறித்த இறைவாக்கு ஆகும்.
11 நான் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கிறேன்.’ “நான் செய்து காட்டியது போலவே உங்களுக்கும் செய்யப்படும், நீங்கள் சிறைக்கைதிகளாக நாடுகடத்தப்பட்டுப் போவீர்கள் என்று அவர்களுக்குச் சொல்.
12 “அவர்கள் மத்தியிலிருக்கும் அரசன் இருள்சூழும் வேளையிலே தனது உடைமைகளைத் தன் தோளில் சுமந்தபடி புறப்படுவான். அவன் போவதற்காக சுவரிலே ஒரு துளை இடப்படும். அவன் நாட்டைப் பார்க்க முடியாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.
13 நான் அவனுக்காக என் வலையை விரிப்பேன். அவன் எனது கண்ணியில் சிக்குவான். கல்தேயரின் நாடாகிய பாபிலோனுக்கு அவனைக் கொண்டுசெல்வேன். ஆனால் அவன் அதைக் காணமாட்டான். அங்கேயே அவன் செத்துப்போவான்.
14 அவனைச்சுற்றிலும் இருக்கும் உதவியாளர்களையும், இராணுவங்களையும் எல்லா திசைகளிலும் சிதறிப்போகப் பண்ணுவேன். உருவிய வாளோடு அவர்களைப் பின்தொடர்வேன்.
15 “நான் அவர்களை மக்கள் கூட்டத்திற்குள் கலைந்துபோகச் செய்து, நாடுகளுக்குள் சிதறடிக்கும்போது, நானே யெகோவா என அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
16 ஆனால் நான் அவர்களில் சிலரை வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றிலிருந்து தப்புவிப்பேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் நாடுகளுக்கிடையில் வெறுக்கத்தக்க தங்கள் பழக்கவழக்கங்களைத் தவறு என்று ஒத்துக்கொள்வார்கள்; அப்பொழுது நானே யெகோவா என்பதையும் அறிந்துகொள்வார்கள் என்று சொல்” என்றார்.
17 மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
18 “மனுபுத்திரனே, நீ நடுக்கத்தோடே உன் உணவை சாப்பிடு. பயத்துடன் நடுங்கிக்கொண்டு தண்ணீரைக்குடி.
19 பின்பு நாட்டின் குடிகளிடம் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேல் நாட்டிலும் எருசலேமிலும் வாழும் மக்களைக் குறித்து ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: அவர்கள் தங்கள் உணவை ஏக்கத்தோடு சாப்பிட்டு, மனச்சோர்வுடன் தண்ணீரைக் குடிப்பார்கள். ஏனெனில் அவர்களுடைய நாடு அங்கு குடியிருக்கும் அனைவரது கொடுமையினிமித்தம் அழித்துப் பாழாக்கப்படும்.
20 அவர்கள் குடியேறியிருக்கும் பட்டணங்கள் சீர்குலையும்; நாடு பாழாகும். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று சொல்’ ” என்றார்.
21 மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
22 “மனுபுத்திரனே, ‘நாட்களோ கடந்துபோய்க் கொண்டிருக்கின்றன; தரிசனம் ஒன்றும் நிறைவேறவில்லையே’ என்பதாக இஸ்ரயேல் நாட்டிலே உங்களுக்குள் வழங்கப்படும் இப்பழமொழி என்ன?
23 ஆகையால் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் இப்பழமொழிக்கு ஒரு முடிவைக் கொண்டுவரப் போகிறேன். இஸ்ரயேலில் இனி அதைக் கூறமாட்டார்கள். எல்லாத் தரிசனங்களும் நிறைவுபெறும் காலம் நெருங்கிவிட்டது’ என்று அவர்களுக்குச் சொல்.
24 பொய்த் தரிசனங்களோ அல்லது சாதகமாய்க் குறிசொல்லுதலோ இனி ஒருபோதும் இஸ்ரயேலரிடம் இருப்பதில்லை.
25 ஆகவே யெகோவாவாகிய நான், திட்டமிட்டதையே பேசுவேன். அது தாமதமின்றி நிறைவேறும். கலகக்கார வீட்டாரே, ‘நான் கூறியது எதுவோ அதை உங்கள் நாட்களிலேயே நிறைவேற்றுவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”
26 மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
27 “மனுபுத்திரனே, ‘இவன் காணும் தரிசனம் நிறைவேற இப்பொழுதிலிருந்து அநேக வருடங்கள் செல்லும் அநேக காலங்களுக்குப்பின் வரப்போகும் எதிர்காலம் பற்றியே இவன் இறைவாக்கு உரைக்கின்றான்’ என்று இஸ்ரயேல் குடும்பத்தார் கூறுகின்றார்கள்.
28 “ஆகையால் நீ அவர்களிடம், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘இனி ஒருபோதும் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் தாமதிப்பதில்லை. நான் சொல்வது எதுவோ அது நிறைவேற்றப்படும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்’ ” என்றார்.
×

Alert

×