அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இப்பொழுது நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ காண்பாய்: என் பலத்த கரத்தின் நிமித்தம் அவன் அவர்களைப் போகவிடுவான்; அவன் என் கரத்தின் வல்லமையின் நிமித்தம் அவர்களைத் தன் நாட்டிலிருந்து துரத்தியே விடுவான்” என்றார்.
ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் எல்லாம் வல்ல இறைவனாக [*எல்லாம் வல்ல இறைவனாக என்பது எபிரெயத்தில் எல்ஷடாய் எனப்படும்] நானே காட்சியளித்தேன். ஆனாலும் யெகோவா என்ற என் பெயரால் நான் என்னை அவர்களுக்கு அறியச்செய்யவில்லை.
“ஆகையால், நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘நானே யெகோவா, நான் எகிப்தியரின் நுகத்தின் கீழிருந்து உங்களை வெளியே கொண்டுவருவேன். நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து உங்களை விடுதலையாக்குவேன்; நான் பலத்த கரத்தினாலும், தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களினாலும் உங்களை மீட்பேன்.
உங்களை என் சொந்த மக்களாக்கி, நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்பொழுது எகிப்திய நுகத்தின் கீழிருந்து, உங்களை விடுவித்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்று அறிந்துகொள்வீர்கள்.
ஆனால் மோசே யெகோவாவிடம், “இஸ்ரயேலரே எனக்குச் செவிகொடுக்கவில்லை என்றால், பார்வோன் ஏன் செவிகொடுக்கவேண்டும்? நானோ பண்படாத உதடுகளுள்ளவன்” [†பண்படாத உதடுகளுள்ளவன் என்றால் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்பதாகும் வசனம் 30] என்றான்.
யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேலரைப் பற்றியும், எகிப்திய அரசன் பார்வோனைப் பற்றியும் பேசி, எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமான எலிசபாளை ஆரோன் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
ஆரோனின் மகன் எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள். வம்சம் வம்சமாக லேவிய குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே.