English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Exodus Chapters

Exodus 4 Verses

1 மோசே மறுமொழியாக, “அவர்கள் என்னை நம்பாமலும், நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும், ‘யெகோவா உனக்கு காட்சி அளிக்கவில்லை’ என்று சொல்வார்களானால் நான் என்ன செய்வேன்?” என்றான்.
2 அதற்கு யெகோவா அவனிடம், “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். “ஒரு கோல்” என்றான்.
3 “அதைத் தரையில் எறிந்துவிடு” என்று யெகோவா சொன்னார். மோசே அதைத் தரையில் எறிந்தபோது அது பாம்பாக மாறியது, மோசே விலகி ஓடினான்.
4 அப்பொழுது யெகோவா, “உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடித்துத் தூக்கு” என்று சொன்னார். மோசே கையை நீட்டி பாம்பைப் பிடித்தான்; அது அவன் கையில் கோலாக மாறியது.
5 “ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான அவர்களின் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உனக்கு காட்சியளித்திருக்கிறார் என்பதை அவர்கள் நம்பும்படி இதுவே அடையாளம்” என்று யெகோவா சொன்னார்.
6 மேலும் யெகோவா மோசேயிடம், “உன் கையை உன் மேலங்கியினுள் வை” என்றார். எனவே மோசே தன் கையை மேலங்கிக்குள் வைத்தான்; அவன் அதை வெளியே எடுத்தபோது, அவனுடைய கை உறைபனியைப்போல் குஷ்டமாகியிருந்தது.
7 “இப்பொழுது திரும்ப உனது கையை மேலங்கிக்குள் வை” என்றார். அப்படியே மோசே, மறுபடியும் அங்கிக்குள் கையை வைத்தான். திரும்பவும் கையை வெளியே எடுத்தபோது, அது சுகமடைந்து உடலின் மற்ற பகுதிகளைப்போல் மாறினது.
8 பின்பு யெகோவா, “அவர்கள் உன்னை நம்பாமல் அல்லது முதல் அற்புத அடையாளத்தைக் கவனிக்காமல் விட்டிருந்தாலும், இரண்டாவதை நம்பக்கூடும்.
9 இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமல் அல்லது உனக்குச் செவிகொடுக்காமல் போனால், நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதைக் காய்ந்த தரையில் ஊற்று; நீ நதியிலிருந்து எடுக்கிற தண்ணீர் தரையில் இரத்தமாய் மாறிவிடும்” என்றார்.
10 அதற்கு மோசே யெகோவாவிடம், “யெகோவாவே, கடந்த காலத்திலோ அல்லது நீர் உமது அடியானுடன் பேசியதிலிருந்தோ, நான் ஒருபோதும் பேச்சுத்திறன் உடையவனாய் இருக்கவில்லை; என் வாய் திக்கும், என் நாவு குழறும்.”
11 அப்பொழுது யெகோவா அவனிடம், “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? அவனை ஊமையாகவோ செவிடாகவோ ஆக்குகிறவர் யார்? அவனுக்கு பார்வையைக் கொடுப்பதோ, அவனைக் குருடனாக்குவதோ யார்? யெகோவாவாகிய நான் அல்லவா?
12 இப்பொழுதே நீ போ; பேசுவதற்கு நான் உனக்கு உதவிசெய்து, நீ சொல்ல வேண்டியதையும் உனக்குப் போதிப்பேன்” என்றார்.
13 அதற்கு மோசேயோ, “யெகோவாவே, தயவுசெய்து இதைச் செய்வதற்கு வேறொருவனை அனுப்பும்” என்றான்.
14 அதனால் மோசேக்கு எதிராக யெகோவாவின் கடுங்கோபம் மூண்டது; அவர், “அப்படியானால் லேவியனாகிய உன் சகோதரன் ஆரோன் இருக்கிறான் அல்லவா? அவன் நன்றாகப் பேசுவான் என்பதை நான் அறிவேன். அவன் உன்னைச் சந்திப்பதற்கு வந்துகொண்டிருக்கிறான், உன்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைவான்.
15 நீ அவனுடன் பேசி, அவன் சொல்லவேண்டிய வார்த்தைகளை அவனுக்குச் சொல்வாய்; அப்பொழுது நான் உங்கள் இருவருக்கும் பேசுவதற்கு உதவிசெய்து, நீங்கள் செய்யவேண்டியதையும் உங்களுக்குப் போதிப்பேன்.
16 அவன் உனக்காக மக்களிடம் பேசுவான், அவன் உனக்கு வாய் போலிருப்பான்; நீ அவனுக்கு இறைவன்போல் இருப்பாய்.
17 ஆனாலும் நீ இந்தக் கோலை கையில் கொண்டுபோ; இதைக்கொண்டு அற்புத அடையாளங்களை உன்னால் செய்யமுடியும்” என்றார்.
18 அதன்பின் மோசே தன் மாமனார் எத்திரோவிடம் திரும்பிப்போய் அவனிடம், “நான் எகிப்திலுள்ள என் சொந்த மக்களிடம் மறுபடியும்போய், அவர்களில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா, என்று பார்க்க என்னைப் போகவிடும்” என்றான். அதற்கு எத்திரோ, “என் நல்வாழ்த்துகள்; நீ போய்வா” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தான்.
19 மீதியான் தேசத்தில் யெகோவா மோசேயிடம், “உன்னைக் கொலைசெய்ய எண்ணியிருந்தவர்களான எல்லோரும் இறந்துவிட்டார்கள். ஆகையால், நீ எகிப்திற்குத் திரும்பவும் போ” என்று சொல்லியிருந்தார்.
20 எனவே மோசே தன் மனைவியையும், மகன்களையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்திற்குப் போகப் புறப்பட்டான். மோசே இறைவனின் கோலை தன்னுடன் எடுத்துச் சென்றான்.
21 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்திற்குத் திரும்பிப் போனபின்பு, நான் உனக்குக் கொடுத்த அற்புதங்களை எல்லாம் என் வல்லமையைக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாகச் செய்துகாட்டு; ஆனால் நானோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன். அதனால் அவன் மக்களைப் போகவிடமாட்டான்.
22 அப்பொழுது நீ பார்வோனிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேல் எனது முதற்பேறான மகன்,
23 என் மகனை என்னை வழிபடும்படி போகவிடு என்று நான் உனக்குச் சொன்னேன்; ஆனால் நீயோ, அவனைப் போகவிட மறுத்தாய்; ஆகையால் நான் உன்னுடைய முதற்பேறான மகனைக் கொல்லுவேன்’ என்கிறார் என்று சொல்” என்றார்.
24 மோசே பயணம் செய்யும் வழியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் யெகோவா மோசேயை எதிர்த்து, அவனைக் கொல்ல முயன்றார்.
25 உடனே சிப்போராள் ஒரு கூர்மையானக் கல்லை எடுத்து, தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து, அதனால் மோசேயின் பாதங்களைத் [*பாதங்களை என்பதற்கான எபிரெய சொல் ஆண் பாலின உறுப்பை இங்கே குறிக்கலாம்.] தொட்டு, “நிச்சயமாக நீர் எனக்கு இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்றாள்.
26 எனவே யெகோவா அவனை விட்டுவிட்டார். “இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்று விருத்தசேதனத்தைக் குறித்தே அந்நேரத்தில் அவள் சொன்னாள்.
27 யெகோவா ஆரோனிடம், “மோசேயைச் சந்திப்பதற்காகப் பாலைவனத்திற்குப் போ” என்றார். அதன்படியே ஆரோன் இறைவனின் மலையில் மோசேயைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான்.
28 அப்பொழுது மோசே யெகோவா தன்னை அனுப்பிச் சொல்லும்படிச் சொன்ன எல்லாவற்றையும் ஆரோனிடம் கூறினான். அத்துடன் அவர் தனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட அற்புத அடையாளங்களைப் பற்றியும் சொன்னான்.
29 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் எல்லோரையும் கூடிவரச் செய்தார்கள்.
30 அப்பொழுது யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்த எல்லாவற்றையும் ஆரோன் அவர்களிடம் கூறினான், அவன் அந்த அடையாளங்களையும் மக்களுக்குமுன் செய்துகாட்டினான்.
31 அவர்கள் நம்பினார்கள். யெகோவா இஸ்ரயேலர்களில் கரிசனையாய் இருக்கிறார் என்றும், தங்கள் அவலத்தைக் கண்டிருக்கிறார் என்றும் அவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் தலைகுனிந்து வழிபட்டார்கள்.
×

Alert

×