Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 38 Verses

1 அவர்கள் சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான தகன பலிபீடத்தைச் செய்தார்கள். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமுமுள்ள சதுரமாய் இருந்தது.
2 அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பை வைத்து, பீடத்தோடு ஒரே அமைப்பாய் இருக்கும்படி அவற்றை அமைத்தார்கள். அப்பீடத்தை வெண்கலத் தகட்டால் மூடினார்கள்.
3 பீடத்திற்குத் தேவையான சாம்பல் அள்ளும் பானைகள், வாரிகள், தெளிக்கும் கிண்ணங்கள், இறைச்சியை எடுக்கும் முட்கரண்டிகள், நெருப்புச் சட்டிகள் ஆகிய பாத்திரங்களையெல்லாம் வெண்கலத்தால் செய்தார்கள்.
4 அதற்கு வெண்கலக் கம்பியினால் சல்லடையைச் செய்து, அதை அதன் விளிம்புக்குக் கீழே, பீடத்தின் உள்ளே அதன் பாதி உயரத்தில் இருக்கும்படி வைத்தார்கள்.
5 அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும், கம்புகள் மாட்டுவதற்கு நான்கு வெண்கல வளையங்களைச் செய்து பொருத்தினார்கள்.
6 கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து, அவற்றை வெண்கலத் தகட்டால் மூடினார்கள்.
7 அந்தக் கம்புகள் பீடத்தை தூக்கிச் சுமப்பதற்காக இரண்டு பக்கங்களிலும் இருக்கும்படி அவற்றை மாட்டினார்கள். அந்த பீடம் நான்கு பக்கமும் பலகையால் செய்யப்பட்டிருந்தது. அதன் உட்புறம் இடைவெளிவிட்டு வெறுமையாய் இருந்தது.
8 சபைக் கூடாரத்தின் வாசலில், கூடி நின்று பணிசெய்த பெண்கள் கண்ணாடியாகப் பயன்படுத்தும் வெண்கலத்தை அவர்களிடமிருந்து பெற்று, வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும் உண்டாக்கினார்கள்.
9 அதன்பின் அவர்கள் முற்றத்தை அமைத்தார்கள். அது தெற்குப் பக்கம் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கு திரித்த மென்பட்டு நூலினால் நெய்யப்பட்ட திரைகள் இருந்தன.
10 அத்திரையைத் தொங்கவிடுவதற்கு இருபது கம்பங்களும், அதற்கு இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன.
11 அதன் வடக்குப் பக்கமும் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கும் திரைகள் இருந்ததால், இருபது கம்பங்களும், இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றிற்கும் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன.
12 முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருந்தது. அதற்குத் திரைகளும் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான பத்து கம்பங்களும், பத்து அடித்தளங்களும் இருந்தன. அத்துடன் அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், கம்பங்களில் பூண்களும் இருந்தன.
13 சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருந்தது.
14 வாசலின் ஒரு பக்கத்திற்கு பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருந்தன.
15 முற்றத்து வாசலின் மற்றப் பக்கத்திற்கு பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கு மூன்று கம்பங்களும் மூன்று அடித்தளங்களும் இருந்தன.
16 முற்றத்தைச் சுற்றிலும் இருந்த திரைகளெல்லாம் திரிக்கப்பட்ட மென்பட்டுநூலால் நெய்யப்பட்டிருந்தன.
17 அங்கிருந்த எல்லா கம்பங்களின் அடித்தளங்களும் வெண்கலத்தாலும், அக்கம்பங்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகள் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன. இவ்வாறு முற்றத்தின் எல்லா கம்பங்களும் வெள்ளிப் பூண்கள் உடையதாய் இருந்தன.
18 முற்றத்தின் நுழைவு வாசலுக்கு போடப்பட்ட திரை, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் நெய்யப்பட்ட சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருந்தது. அது இருபது முழம் நீளமும், முற்றத்தின் திரைகளைப்போல் ஐந்து முழம் உயரம் உடையதுமாய் இருந்தது.
19 அதைத் தொங்கவிடுவதற்கு நான்கு கம்பங்களும், நான்கு வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றின் கொக்கிகளும், பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகளும் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன.
20 இறைசமுகக் கூடாரத்தையும், அதன் முற்றத்தையும் சுற்றியிருந்த கூடார முளைகள் வெண்கலத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன.
21 சாட்சிக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தொகைகள் இவையே: அவைகள் மோசேயின் கட்டளைப்படி, ஆசாரியன் ஆரோனின் மகன் இத்தாமாரின் மேற்பார்வையின்கீழ் லேவியர்களால் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
22 யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதை எல்லாம் செய்தான்.
23 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகன் அகோலியாபும் அவனோடு இருந்தான். அவன் கலைஞனும், ஓவியனும், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் வேலைசெய்யும் சித்திரத் தையல்காரனுமாயிருந்தான்.
24 பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும் என்று, அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்தத்தொகை, பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி 29 தாலந்துகளும் [*அதாவது, 29 தாலந்துகளும் என்பது சுமார் 991 கிலோகிராம்.] 730 சேக்கலுமாயிருந்தது [†730 சேக்கலுமாயிருந்தது என்பது சுமார் 9 கிலோகிராம்.] .
25 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எண்ணப்பட்ட மக்கள் சமுதாயத்திலிருந்து பெறப்பட்ட வெள்ளி, பரிசுத்த இடத்தின் நிறையின்படி 100 தாலந்துகளும், 1,775 சேக்கலுமாயிருந்தது.
26 இருபது வயதிற்கும் அதற்கு மேற்பட்டவர்களும் கணக்கிடப்பட்டு கடந்து செல்லும்போது ஒவ்வொருவரிடமிருந்தும் ஆளுக்கு ஒரு பெக்கா வசூலிக்கப்பட்டது. ஒரு பெக்கா என்பது பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி அரைச்சேக்கலாகும். எண்ணப்பட்ட மனிதரின் மொத்தத்தொகை 6,03,550 பேர்கள்.
27 கொடுக்கப்பட்ட அந்த 100 தாலந்து வெள்ளியும் பரிசுத்த இடத்திற்கான அடித்தளங்களையும், திரைக்கான அடித்தளங்களையும் செய்ய உபயோகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அடித்தளத்துக்கும் ஒரு அடித்தளத்துக்கு ஒரு தாலந்து என்ற கணக்கின்படி 100 அடித்தளங்களுக்கு 100 தாலந்துகள் பயன்படுத்தப்பட்டன.
28 அவர்கள் 1,775 சேக்கல் வெள்ளியை கம்பங்களுக்கான கொக்கிகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான மேற்பரப்பைத் தகட்டால் மூடுவதற்கும், கம்பங்களுக்கான பூண்களைச் செய்வதற்கும் உபயோகித்தார்கள்.
29 அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பெறப்பட்ட வெண்கலத்தின் அளவு 70 தாலந்துகளும், 2,400 சேக்கலுமாகும்.
30 அந்த வெண்கலத்தை சபைக் கூடாரத்தின் நுழைவு வாசலின் அடித்தளங்களையும், வெண்கலபீடத்தையும், அதற்கான வெண்கலச் சல்லடையையும், பீடத்திற்குரிய எல்லா பாத்திரங்களையும் செய்ய உபயோகித்தார்கள்.
31 அத்துடன் முற்றத்தைச் சுற்றியிருந்த அடித்தளங்களையும், வாசலின் அடித்தளத்தையும், இறைசமுகக் கூடாரத்திற்கும் அதைச் சுற்றியிருந்த முற்றத்திற்குமான கூடார முளைகளையும் செய்ய உபயோகித்தார்கள்.
×

Alert

×