மேலும் யெகோவா மோசேயிடம், “நீ முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன்.
மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அதிகாலையில் எழுந்து, அந்த இரண்டு கற்பலகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலைக்கு ஏறிப்போனான்.
அவர் மோசேயின் முன்னால் கடந்து போகையில், “யெகோவா! யெகோவா! மன இரக்கமும், கிருபையும் உள்ள இறைவன். கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர். அன்பிலும், உண்மையிலும் நிறைந்தவர்.
ஆயிரம் தலைமுறைகளுக்கு அசையாத அன்பைக் காட்டுகிறவர். கொடுமையையும், கலகத்தையும், பாவத்தையும் மன்னிக்கிறவர். அப்படியிருந்தும் அவர் குற்றவாளிகளைத் தண்டியாமல் தப்பவிடுகிறவர் அல்ல. பெற்றோரின் பாவத்திற்காக பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறைவரைக்கும் தண்டிக்கிறவர்” என்று பிரசித்தப்படுத்தினார்.
அவன், “யெகோவாவே, நான் உம்முடைய கண்களில் தயவு பெற்றிருந்தேன் என்றால், யெகோவாவாகிய நீர் எங்களுடன் வாரும். மக்கள் பிடிவாத குணமுள்ளவர்களாய் இருந்தாலும் எங்கள் கொடுமைகளையும், பாவத்தையும் மன்னித்து, எங்களை உமது உரிமைச்சொத்தாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
அதற்கு யெகோவா, “நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன். முழு உலகத்திலும், எந்த நாட்டினரின் மத்தியிலும் முன் ஒருபோதும் செய்யப்படாத அதிசயங்களை உன் மக்களுக்கு முன்பாகச் செய்வேன். யெகோவாவாகிய நான் உனக்காகச் செய்யப்போகும் செயல் எவ்வளவு பிரமிப்புக்குரியதாய் இருக்கும் என்பதை உன்னோடுகூட வாழும் மக்கள் காண்பார்கள்.
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதற்கு நீ கீழ்ப்படி. நான் எமோரியர், கானானியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை உனக்கு முன்பாக வெளியே துரத்திவிடுவேன்.
“நீ அந்நாட்டிலுள்ள மக்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்க கவனமாயிரு. ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்திப் பாவம் செய்யும்போது, பலிகளைச் சாப்பிடும்படி உங்களை அழைத்தால், ஒருவேளை நீங்கள் அவர்களுடன் சேர்ந்து அதைச் சாப்பிடுவீர்கள்.
நீங்கள் உங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை மனைவிகளாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடைய மகள்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்தி பாவம் செய்து, அதைச் செய்யும்படி உங்கள் மகன்களையும் தூண்டுவார்கள்.
“புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும். குறித்த காலமான ஆபீப் மாதத்திலே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தீர்கள்.
“கர்ப்பத்திலிருந்து வரும் முதற்பேறானவைகள் எல்லாம் எனக்கே சொந்தம். உனக்குரிய கால்நடையில் உள்ள ஆட்டு மந்தையிலிருந்தோ மாட்டு மந்தையிலிருந்தோ பிறக்கும் தலையீற்றான எல்லா கடாக்களும் காளைகளும் எனக்கே உரியவை.
ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுத்து கழுதையின் தலையீற்றை மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்து விடவேண்டும். உன் மகன்களில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்ள வேண்டும். “ஒருவரும் வெறுங்கையோடு என்முன் வரக்கூடாது.
நான் நாடுகளை உங்களுக்கு முன்பாக வெளியே துரத்தி, உங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்துவேன். ஒவ்வொரு வருடமும் மூன்றுமுறை நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கப் போகும்போது, ஒருவனும் உங்கள் நாட்டை அபகரிக்க ஆசைகொள்ளமாட்டான்.
“உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். “வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.
அதன்பின் யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை எழுது. ஏனெனில் இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரயேலரோடும் நான் உடன்படிக்கை செய்திருக்கிறேன்” என்றார்.
அங்கே மோசே இரவும் பகலும் அப்பம் சாப்பிடாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாட்கள் யெகோவாவோடு இருந்தான். அவர் பத்துக் கட்டளைகளான உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கற்பலகைகளில் எழுதினார்.
மோசே, சாட்சியின் பலகைகளைத் தனது கையில் வைத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான். அவன் யெகோவாவோடு பேசியதனால் அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. ஆனால் அவனோ அதை அறியாதிருந்தான்.
ஆனாலும் மோசே, யெகோவாவுடன் பேசும்படி அவர் முன்னிலையில் போகும்போதெல்லாம், அவன் அங்கிருந்து திரும்பி வரும்வரை முகத்திரையை நீக்கிவிடுவான். அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டதை வெளியே வந்து இஸ்ரயேலருக்குச் சொல்லும்போது,
இஸ்ரயேலர் அவன் முகம் பிரகாசிப்பதைக் கண்டார்கள். எனவே மோசே, தான் யெகோவாவுடன் பேசுவதற்கு உள்ளே போகும்வரை, அந்த முகத்திரையைத் திரும்பவும் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்வான்.