Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 32 Verses

1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதித்ததை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனைச் சுற்றி ஒன்றுகூடி அவனிடம், “எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஆகையால் நீர் வந்து, எங்களை வழிநடத்தும்படி தெய்வங்களை எங்களுக்காகச் செய்யும்” என்றார்கள்.
2 அப்பொழுது ஆரோன் அவர்களிடம், “உங்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் அணிந்திருக்கும் தங்கக் காதணிகளைக் கழற்றி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான்.
3 அப்படியே அனைவரும் தங்கள் காதணிகளைக் கழற்றி ஆரோனிடம் கொண்டுவந்தார்கள்.
4 அவர்கள் தன்னிடம் கொடுத்ததை அவன் எடுத்து கன்றுக்குட்டி வடிவில் அதை வார்ப்பித்து, ஒரு கருவியினால் அதை வடிவமைத்து அதை ஒரு விக்கிரகமாகச் செய்தான். அப்பொழுது அவர்கள், “இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள். இவைகளே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன” என்றார்கள்.
5 அதைக்கண்ட ஆரோன் அந்தக் கன்றுக்குட்டிக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்கு யெகோவாவுக்கு ஒரு பண்டிகை கொண்டாடப்படும்” என அறிவித்தான்.
6 மறுநாள் அதிகாலையில் மக்கள் எழுந்து தகன காணிக்கைகளைப் பலியிட்டு, சமாதான காணிக்கைகளைச் செலுத்தினார்கள். அதன்பின் மக்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்து களியாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
7 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ கீழே இறங்கிப்போ. ஏனெனில், எகிப்திலிருந்து நீ வெளியே கொண்டுவந்த உன் மக்கள் சீர்கெட்டுப் போனார்கள்.
8 நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி நடக்காமல், விரைவில் வழிதவறி கன்றுக்குட்டி உருவமுடைய ஒரு விக்கிரகத்தைத் தங்களுக்காக செய்திருக்கிறார்கள். அவர்கள் அதை வணங்கி, பலிசெலுத்தி, ‘இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள், இவையே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
9 மேலும் யெகோவா மோசேயிடம், “இந்த மக்களை நான் கவனித்துப் பார்த்தேன். அவர்களோ பிடிவாத குணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
10 அவர்களுக்கு எதிராக என் கோபம் எரியும்படியும், நான் அவர்களை அழிக்கும்படியும் என்னை விட்டுவிடு; அதன்பின் நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார்.
11 ஆனால் மோசேயோ தன் இறைவனாகிய யெகோவாவின் தயவை நாடினான். அவன் அவரிடம், “யெகோவாவே, நீர் மகா வல்லமையினாலும், பலமுள்ள கரத்தினாலும், எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு எதிராக உமது கோபம் ஏன் எரியவேண்டும்?
12 ‘இஸ்ரயேலரை மலைகளில் கொன்று, பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்து ஒழிக்கும்படியான தீய நோக்கத்துடனே, அவர் அவர்களை வெளியே கொண்டுவந்தார்’ என எகிப்தியர் ஏன் சொல்லவேண்டும்? ஆகவே உமது கோபத்தின் உக்கிரத்தைத் தணித்து, மனமிரங்கி, மக்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவராதிரும்.
13 உமது அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரை நினைவிற்கொள்ளும். ‘உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகப்பண்ணி, நான் உங்கள் சந்ததியினருக்கு வாக்குப்பண்ணிய இந்த நாடு முழுவதையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அந்த நாடு என்றும் அவர்களுக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்’ என்று நீர் உம்மைக் கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்றான்.
14 அப்பொழுது யெகோவா மனமிரங்கி, தன் மக்கள்மேல் தான் கொண்டுவருவதாக அச்சுறுத்திய பேராபத்தைக் கொண்டுவரவில்லை.
15 மோசே மலையிலிருந்து தனது கைகளில் இரண்டு சாட்சி கற்பலகைகளுடன் கீழே இறங்கிப் போனான். அந்தக் கற்பலகைகளில் முன்னும் பின்னுமாக இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தன.
16 அந்தக் கற்பலகைகள் இறைவனின் கைவேலையாயிருந்தன. அதில் இறைவனால் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
17 ஆரவாரம் செய்யும் மக்களின் சத்தத்தை யோசுவா கேட்டபோது, அவன் மோசேயிடம், “முகாமில் யுத்த சத்தம் கேட்கிறது” என்றான்.
18 அதற்கு மோசே சொன்னது: “அது வெற்றியின் சத்தமும் அல்ல; தோல்வியின் சத்தமும் அல்ல; நாம் கேட்பது பாடலின் சத்தம்.”
19 மோசே முகாமுக்குக் கிட்டவந்தபோது, கன்றுக்குட்டியையும் மக்களின் ஆட்டத்தையும் கண்டான். அதைக்கண்ட மோசே கடுங்கோபம் கொண்டு, தன் கையில் இருந்த கற்பலகைகளை மலையடிவாரத்தில் எறிந்து துண்டுகளாக உடைத்தான்.
20 அத்துடன் அவர்கள் செய்துவைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து, அதை நெருப்பில்போட்டு எரித்து தூளாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, இஸ்ரயேலரைக் குடிக்கச் செய்தான்.
21 அதன்பின் மோசே ஆரோனிடம், “இந்த மக்கள் உனக்கு என்ன செய்தார்கள்? நீ அவர்களை இவ்வளவு பெரிய பாவத்தைச்செய்ய வழிநடத்துவதற்கு அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.
22 அதற்கு ஆரோன், “என் ஆண்டவனே, கோபங்கொள்ள வேண்டாம். இவர்கள் எவ்வளவாய் தீமையின் பக்கம் சார்ந்து நடக்கின்ற மக்கள் என்பதை நீர் அறிவீர்தானே!
23 அவர்கள் என்னிடம், ‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்களை வழிநடத்த எங்களுக்கு தெய்வங்களைச் செய்துகொடும்’ என்றார்கள்.
24 ஆகவே நான் அவர்களிடம், ‘தங்க நகைகள் இருப்பவர்கள் அதைக் கழற்றுங்கள்’ என்றேன். அப்படியே அவர்கள் அந்த தங்க நகைகளை என்னிடம் கொடுத்தார்கள். நான் அதை நெருப்பில் போட்டேன். அதிலிருந்து இந்த கன்றுக்குட்டி வந்தது” என்றான்.
25 மக்கள் கட்டுக்கடங்காமல் திரிவதையும், அவர்களுடைய பகைவர்களுக்கு முன்பாக அவர்கள் கேலிப்பொருளாகும்படி, ஆரோன் அவர்களை கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதையும் மோசே கண்டான்.
26 அப்பொழுது மோசே முகாமின் வாசலில் நின்று, “யெகோவாவின் பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் வாருங்கள்” என்றான். லேவியர் எல்லோரும் அவனிடம் வந்து சேர்ந்தார்கள்.
27 மோசே அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ஒவ்வொருவரும் உங்கள் இடுப்பில் ஒரு வாளைக் கட்டிக்கொள்ளுங்கள். முகாமெங்கும் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை அங்குமிங்குமாகச் சென்று ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும், நண்பனையும், அயலானையும் கொல்லுங்கள்” என்றான்.
28 லேவியர்கள் மோசே கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்று மக்களில் மூவாயிரம்பேர்வரை செத்தார்கள்.
29 அப்பொழுது மோசே அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் சொந்த மகன்களுக்கும், சகோதரர்களுக்கும் விரோதமாய் இருந்தபடியால், இன்று நீங்கள் யெகோவாவினுடைய பணிக்கென்று வேறுபிரிக்கப்பட்டிருக்கிறீர்கள். யெகோவா இன்றைக்கு உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்” என்றான்.
30 மறுநாள் மோசே மக்களிடம், “நீங்கள் பெரிய பாவம் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது நான் யெகோவாவிடம் ஏறிப்போவேன். ஒருவேளை உங்களுடைய பாவத்திற்காக நான் பாவநிவிர்த்தி செய்யலாம்” என்றான்.
31 அவ்வாறே மோசே திரும்பவும் யெகோவாவிடம் போய், “இந்த மக்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக தங்கத்தினால் தெய்வங்களைச் செய்திருக்கிறார்கள்.
32 ஆனாலும் அவர்களுடைய பாவத்தை இப்பொழுது மன்னியும்; இல்லாவிட்டால் நீர் எழுதிய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடும்” என்றான்.
33 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரையே என் புத்தகத்திலிருந்து அழிப்பேன்.
34 இப்பொழுது நீ போய் நான் உனக்கு சொன்ன இடத்துக்கு மக்களை அழைத்துக்கொண்டு போ. இதோ! என் தூதன் உனக்குமுன் செல்வான். ஆனாலும், நான் தண்டிக்கும் காலம் வரும்போது, அவர்கள் பாவத்திற்காக நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார்.
35 ஆரோன் செய்து கொடுத்த கன்றுக்குட்டியை வணங்கியதற்காக யெகோவா மக்களைப் பெரும் கொள்ளைநோயினால் வாதித்தார்.
×

Alert

×