English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Exodus Chapters

Exodus 26 Verses

1 {#1இறைசமுகக் கூடாரம் } இறைசமுகக் கூடாரத்தைப் பத்து மூடுதிரைகளைக் கொண்டு செய்யவேண்டும். அத்திரைகள் தரமாகத் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு நெய்யப்பட்டிருக்க வேண்டும். சிறந்த தொழில் வல்லுநரால் அதில் கேருபீன்களின் உருவம் சித்திர வேலையாய் செய்யப்படவேண்டும்.
2 எல்லா திரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் அளவுள்ளதாய் இருக்கவேண்டும்.
3 அதில் ஐந்து திரைகளை ஒன்றாக இணை, மற்ற ஐந்து திரைகளுக்கும் அப்படியே செய்யவேண்டும்.
4 இணைக்கப்பட்ட ஒரு தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பில் நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்யவேண்டும். மற்ற தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பிலும் அப்படியே செய்யவேண்டும்.
5 ஒரு திரையில் ஐம்பது வளையங்களைச் செய்; மற்றத் தொகுப்பு திரையின் கடைசியிலும் ஐம்பது வளையங்களைச் செய்யவேண்டும். அந்த வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிரெதிராய் இருக்கவேண்டும்.
6 பின்பு தங்கத்தினால் ஐம்பது கொக்கிகளைச் செய், இந்த இறைசமுகக் கூடாரம் ஒரே இணைப்பாக இருக்கும்படி, இரண்டு தொகுப்பு திரைகளையும் ஒன்றாக இணைப்பதற்கு இக்கொக்கிகளைப் பயன்படுத்து.
7 இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகக் கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரினால் பதினோரு திரைகளைச் செய்யவேண்டும்.
8 அந்த பதினோரு திரைகளும் ஒரே அளவாய் இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும் நான்கு முழம் அகலமும் உடையதாய் இருக்கவேண்டும்.
9 இவற்றில் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளையும் இன்னொரு தொகுப்பாக ஒன்றிணைக்கவேண்டும். ஆறாவது திரையை கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடித்துப்போடவேண்டும்.
10 ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், ஐம்பது வளையங்கள் செய்யவேண்டும். மற்ற தொகுப்பு திரையின் கடைசி விளிம்பு நெடுகிலும் அப்படியே செய்யவேண்டும்.
11 அதன்பின் ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கூடாரத்தை ஒரே பகுதியாக இணைப்பதற்கு அந்த வளையங்களில் அந்தக் கொக்கிகளைப் போடு.
12 கூடாரத்திரைகளின் மீதமுள்ள கூடுதலான நீளத்தைப் பொறுத்தவரையில், விடப்பட்ட பாதி திரையை இறைசமுகக் கூடாரத்தின் பின்பக்கத்தில் தொங்கவிட வேண்டும்.
13 கூடாரத்திரைகளின் நீளம் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு முழம் கூடுதலாக இருக்கும். மீதமிருப்பது இறைசமுகக் கூடாரத்தை மூடும்படியாக இரண்டு பக்கங்களிலும் தொங்கும்.
14 அக்கூடாரத்திற்காக மூடுதிரையை, சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக் கடாவின் தோலினால் செய்யவேண்டும். அதற்கு மேலாகப் போடுவதற்காக, கடல்பசுத் தோலினால் மற்றொரு மூடுதிரையைச் செய்யவேண்டும்.
15 இறைசமுகக் கூடாரத்திற்காக சித்தீம் மரத்தினால் நிமிர்ந்து நிற்கும் மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
16 ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாய் இருக்கவேண்டும்.
17 ஒவ்வொரு மரச்சட்டத்திலும் ஒன்றுக்கொன்று இணைந்ததாக அமைக்கப்பட்ட, இரண்டு முளைகள் இருக்கவேண்டும். இவ்விதமாக இறைசமுகக் கூடாரத்தின் எல்லா மரச்சட்டங்களும் செய்யப்படவேண்டும்.
18 இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் நிறுத்துவதற்காக இருபது மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
19 அந்த இருபது மரச்சட்டங்களை வைப்பதற்கு வெள்ளியினால் நாற்பது அடித்தளங்களைச் செய்யவேண்டும். ஒவ்வொரு முளைக்கும் கீழே ஒரு அடித்தளமாக ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் இரண்டு அடித்தளங்களைச் செய்யவேண்டும்.
20 மற்ற பக்கத்திற்கு, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கத்துக்கு அப்படியே இருபது மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
21 ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களையும் செய்யவேண்டும்.
22 இறைசமுகக் கூடாரத்தின் மேற்குப் பக்கமான கடைசியில் நிறுத்துவதற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
23 கடைசியில் உள்ள இரண்டு மூலைகளிலும் நிறுத்துவதற்கு இரண்டு மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
24 இந்த இரண்டு மூலைகளிலும் அவை கீழேயிருந்து மேலேவரை இரட்டைப் பலகைகளாக இணைக்கப்பட வேண்டும். அவைகள் ஒரு வளையத்திலே இணைக்கப்பட வேண்டும். இரண்டும் அவ்வாறே இருக்கவேண்டும்.
25 அப்பொழுது அந்த எட்டு மரச்சட்டங்களும் ஒவ்வொரு மரச்சட்டத்தின் கீழும், இரண்டிரண்டு வெள்ளி அடித்தளங்களாக, பதினாறு வெள்ளி அடித்தளங்களும் இருக்கும்.
26 அத்துடன் சித்தீம் மரத்தால் குறுக்குச் சட்டங்களைச் செய்யவேண்டும். இறைசமுகக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும்,
27 மறுபக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும், இறைசமுகக் கூடாரத்தின் பின்பக்கமான மேற்குப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும் செய்யவேண்டும்.
28 நடுவிலுள்ள குறுக்குச் சட்டம், மரச்சட்டங்களின் நடுவிலே ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நீண்டிருக்க வேண்டும்.
29 அந்த மரச்சட்டங்களைத் தங்கத்தகட்டால் மூடி, குறுக்குச் சட்டங்களை மாட்டுவதற்காக தங்க வளையங்களையும் செய்யவேண்டும். குறுக்குச் சட்டங்களையும் தங்கத்தகட்டால் மூடவேண்டும்.
30 மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே இறைசமுகக் கூடாரத்தை அமைக்கவேண்டும்.
31 நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞரைக்கொண்டு கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்யவேண்டும்.
32 அந்தத் திரையைத் தங்கத்தகட்டால் மூடப்பட்ட சித்தீம் மரத்தாலான நான்கு கம்பங்களில், தங்கக் கொக்கிகளால் தொங்கவிட வேண்டும். அந்த நான்கு கம்பங்களும் நான்கு வெள்ளி அடித்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
33 கொக்கிகளிலிருந்து திரையைத் தொங்கவிட்டுச் சாட்சிப்பெட்டியை திரைக்குப் பின்பாக வை. அத்திரை பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும்.
34 மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வை.
35 திரைக்கு வெளியே இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கத்தில் மேஜையையும், மேஜைக்கு எதிரே தென்புறமாகக் குத்துவிளக்கையும் வை.
36 கூடாரத்தின் வாசலுக்கு நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச் செய்யவேண்டும். அது ஒரு சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருக்கவேண்டும்.
37 அத்திரைக்குத் தங்கக் கொக்கிகளையும், சித்தீம் மரத்தால் ஐந்து கம்பங்களையும் செய்து, அதைத் தங்கத்தகட்டால் மூடவேண்டும். அந்தக் கம்பங்களுக்கு வெண்கலத்தால் ஐந்து அடித்தளங்களையும் செய்யவேண்டும்.
×

Alert

×