தங்கத்தினால் நான்கு வளையங்கள் வார்ப்பித்து, அவற்றை அதன் நான்கு கால்களிலும் பொருத்து. அவைகள் ஒரு பக்கத்தில் இரண்டும், மறுபக்கத்தில் இரண்டும் பொருத்தப்பட வேண்டும்.
ஒரு கேருபீனை ஒரு முனையிலும், இன்னொன்றை மறு முனையிலும் செய்யவேண்டும். கிருபாசனத்தின் இரண்டு முனைகளிலும் கேருபீன்கள் அமையும்படி, ஒரே தகட்டினாலேயே அவற்றைச் செய்யவேண்டும்.
அந்தக் கேருபீன்களின் சிறகுகள் கிருபாசனத்தை மூடியபடி மேல்நோக்கி விரிந்திருக்க வேண்டும். அந்த கேருபீன்கள் கிருபாசனத்தைப் பார்த்தபடி ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கவேண்டும்.
அங்கே கிருபாசனத்தின் மேலும் சாட்சிப்பெட்டியின்மேலும் இருக்கும் இரண்டு கேருபீன்களுக்கிடையில் நான் உன்னைச் சந்தித்து, இஸ்ரயேலருக்கான எல்லா கட்டளைகளையும் உன்னிடம் கொடுப்பேன்.
“சுத்தத் தங்கத்தினால் ஒரு குத்துவிளக்கைச் செய்யவேண்டும். அதன் அடிப்பாகமும், தண்டும், பூ வடிவமான அதன் கிண்ணங்களும், மொட்டுகளும், பூக்களும் அடிக்கப்பட்ட சுத்தத் தங்கத்தினாலேயே செய்யப்படவேண்டும்.
ஒரு கிளையில் வாதுமை பூக்கள் வடிவமான மூன்று கிண்ணங்கள் அதன் மொட்டுகளுடனும், மலர்களுடனும் இருக்கவேண்டும். அப்படியே அடுத்த கிளையிலும் மூன்று கிண்ணங்கள் இருக்கவேண்டும். இவ்விதமாக அந்த குத்துவிளக்கிலிருந்து விரிந்துபோகும் ஆறுகிளைகளிலும் இருக்கவேண்டும்.
குத்துவிளக்கிலிருந்து விரியும், முதல் ஜோடிக்கிளைகளுக்குக் கீழே, ஒரு மொட்டு இருக்கவேண்டும். இரண்டாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே இரண்டாவது மொட்டு இருக்கவேண்டும். மூன்றாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே மூன்றாவது மொட்டு இருக்கவேண்டும். எல்லாமுமாக ஆறு கிளைகள் இருக்கவேண்டும்.
குத்துவிளக்கையும், அதற்குரிய உபகரணங்கள் யாவற்றையும் செய்ய ஒரு தாலந்து [§அதாவது, சுமார் 75 பவுண்டுகள் அல்லது 34 கிலோகிராம்] சுத்தத்தங்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.