மோசே மக்களிடம்போய் யெகோவாவினுடைய எல்லா வார்த்தைகளையும், சட்டங்களையும் அவர்களுக்குச் சொன்னான். அவர்கள் அனைவரும் ஒரே குரலில், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்றார்கள்.
அப்பொழுது யெகோவா சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதிவைத்தான். மறுநாள் அதிகாலையில் அவன் எழுந்து, மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் விதமாக பன்னிரண்டு கல் தூண்களை நிறுத்தினான்.
பின்பு மோசே உடன்படிக்கைப் புத்தகத்தை எடுத்து மக்கள் கேட்கும்படி வாசித்தான். அவர்கள் அதைக்கேட்டு, “யெகோவா சொன்னபடியெல்லாம் நாங்கள் செய்வோம்; நாங்கள் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.
அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து அவர்களிடம், “இந்த எல்லா வார்த்தைகளுக்கும் இணங்க யெகோவா உங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான்.
அவர்கள் இறைவனைக் கண்டார்கள். அப்படியிருந்தும் இறைவன் இஸ்ரயேலின் தலைவர்களுக்கு விரோதமாகத் தன் கரத்தை உயர்த்தவில்லை. அவர்கள் இறைவன் முன்னிலையில் சாப்பிட்டுக் குடித்தார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறி வந்து இங்கேயே இரு. நான் அவர்களுடைய அறிவுறுத்தலுக்காக எழுதிய சட்டமும், கட்டளைகளும் அடங்கிய கற்பலகைகளை உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
அப்பொழுது மோசே இஸ்ரயேலின் சபைத்தலைவர்களிடம், “நாங்கள் மறுபடியும் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இங்கேயே காத்திருங்கள். ஆரோனும், ஊரும் உங்களோடு இருக்கிறார்கள். யாராவது ஒரு வழக்கில் ஈடுபட்டால் அவன் அவர்களிடம் போகலாம்” என்றான்.