English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 2 Verses

1 லேவி வம்சத்திலுள்ள ஒரு மனிதன் ஒரு லேவியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான்.
2 அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள்; அவன் ஒரு அழகான குழந்தையென அவள் கண்டபோது, அவனை மூன்று மாதங்களாக ஒளித்து வைத்தாள்.
3 ஆனால் அதற்கு மேலும் அவனை மறைத்துவைக்க முடியாமல், அவள் ஒரு நாணல் பெட்டியை எடுத்து அதற்கு தார் மற்றும் நிலக்கீல் பூசினாள். குழந்தையை அதற்குள் கிடத்தி, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள்.
4 அந்த குழந்தையின் சகோதரி அதற்கு என்ன நடக்குமென அறியும்படி, தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
5 அப்பொழுது பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்குப் போனாள்; அவளுடன் வந்த தோழியர்கள் நதிக்கரையில் உலாவினார்கள். பார்வோனின் மகள், நாணல்களுக்கிடையில் கிடந்த கூடையைக் கண்டு, அதை எடுத்துவரும்படி தன் வேலைக்காரப் பெண்ணை அனுப்பினாள்.
6 அவள் அக்கூடையைத் திறந்தபோது, ஒரு குழந்தையைக் கண்டாள். அது அழுது கொண்டிருந்தது, அவள் அக்குழந்தைமேல் அனுதாபப்பட்டாள். அவள், “இது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று” என்றாள்.
7 அந்நேரத்தில் அங்கு வந்த குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளிடம், “உமக்காக இந்தப் பிள்ளைக்குப் பால்கொடுத்து வளர்க்க, எபிரெயப் பெண்களில் ஒருத்தியை போய்க்கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.
8 அதற்குப் பார்வோனின் மகள், “ஆம், போய் அழைத்து வா” என்றாள். அவள் உடனேபோய் குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
9 பார்வோனின் மகள் அவளிடம், “இக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்காகப் பாலூட்டி வளர்த்து வா; நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன்” என்றாள். எனவே அப்பெண் அவனைக் கொண்டுபோய்ப் பாலூட்டி வளர்த்தாள்.
10 குழந்தை வளர்ந்து பெரியவனானபோது, அவன் தாய் அவனைப் பார்வோனின் மகளிடம் ஒப்படைத்தாள்; அவன் அவளுடைய மகனானான். பார்வோனின் மகள் இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே [*மோசே என்பதற்கு வெளியே எடுக்கப்பட்டவன் என்று அர்த்தம்.] என்று பெயரிட்டாள்.
11 மோசே வளர்ந்தபின் ஒரு நாள், தன் சொந்த எபிரெய மக்கள் இருக்கும் இடத்திற்குப் போய், அங்கு அவர்கள் கடினமான வேலைசெய்வதைப் பார்த்தான். அவன் தன் சொந்த மக்களில் ஒருவனான ஒரு எபிரெயனை ஒரு எகிப்தியன் அடிப்பதையும் கண்டான்.
12 அவன் இங்கும் அங்கும் சுற்றி பார்த்துவிட்டு, ஒருவரையும் காணாததினால், அந்த எகிப்தியனைக் கொன்று மணலில் புதைத்துவிட்டான்.
13 மோசே மறுநாளும் வெளியே போனபோது, எபிரெயர் இருவர் சண்டையிடுவதைக் கண்டான். அப்பொழுது அவன் தவறு செய்தவனிடம், “நீ உன் சகோதரனான எபிரெயனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டான்.
14 அதற்கு அந்த மனிதன், “எங்களுக்கு மேலாக உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல, என்னையும் கொல்ல நினைக்கிறாயோ?” என்று கேட்டான். மோசே, “நான் செய்தது மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதே” என்று அறிந்து பயந்தான்.
15 பார்வோன் இதைப்பற்றி கேள்விப்பட்டதும் மோசேயைக் கொலைசெய்ய முயன்றான்; ஆனால் மோசே பார்வோனிடம் இருந்து தப்பியோடி, மீதியானில் வாழும்படி போய், அங்கே ஒரு கிணற்றருகே உட்கார்ந்திருந்தான்.
16 மீதியானிலுள்ள ஒரு ஆசாரியருக்கு ஏழு மகள்கள் இருந்தனர்; அவர்கள் தங்கள் தகப்பனின் மந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும்படி தண்ணீரை எடுத்துத் தொட்டிகளை நிரப்புவதற்காக அங்கே வந்தார்கள்.
17 அப்பொழுது சில மேய்ப்பர்கள் அங்கே வந்து அவர்களைத் துரத்தினார்கள். மோசே எழுந்துவந்து, அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய மந்தைக்குத் தண்ணீர் அள்ளிக்கொடுத்தான்.
18 அப்பெண்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுயேலிடம் வந்தபோது, அவன் அவர்களிடம், “ஏன் இன்றைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள்” என்று கேட்டான்.
19 அதற்கு அவர்கள், “எகிப்தியன் ஒருவன் எங்களை மேய்ப்பரிடமிருந்து காப்பாற்றினான்; அவன் எங்களுக்காகத் தண்ணீரும் அள்ளி, எங்கள் மந்தைக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்றார்கள்.
20 அப்பொழுது அவன் தன் மகள்களிடம், “அவன் எங்கே? ஏன் அவனை விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று கேட்டு, “ஏதாவது சாப்பிடும்படி அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான்.
21 மோசே அந்த மனிதனுடன் தங்கியிருப்பதற்குச் சம்மதித்தான்; சிறிது காலத்தின்பின் அவன் தன் மகள் சிப்போராளை மோசேக்கு திருமணம் செய்துகொடுத்தான்.
22 சிப்போராள் ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது மோசே, “நான் வேற்று நாட்டில் பிறநாட்டினனாய் இருக்கிறேன்” என்று சொல்லி அவனுக்கு கெர்சோம் [†கெர்சோம் என்பதற்கு பிறநாட்டினன் என்று அர்த்தம்.] என்று பெயரிட்டான்.
23 அந்த நீண்ட காலப்பகுதிக்குள் எகிப்திய அரசன் இறந்தான்; இஸ்ரயேலர் தங்கள் அடிமைத்தனத்தில் வேதனைப்பட்டுக் கதறினார்கள். தங்கள் அடிமைத்தனத்தின் நிமித்தம் உதவிவேண்டிய அவர்களுடைய அழுகுரல் இறைவனுக்கு எட்டியது.
24 இறைவன் அவர்களுடைய அழுகையைக் கேட்டார், ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் தான் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25 எனவே இறைவன் இஸ்ரயேலரின் பரிதாப நிலையைக் கண்டு, அவர்களைக் குறித்துக் கரிசனைகொண்டார்.
×

Alert

×