English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Exodus Chapters

Exodus 17 Verses

1 இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, யெகோவாவின் கட்டளைப்படி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்தார்கள். பின்பு ரெவிதீம் என்னும் இடத்திற்கு வந்து அங்கே முகாமிட்டார்கள். அங்கே அவர்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.
2 அதனால் இஸ்ரயேலர் மோசேயுடன் வாக்குவாதம் செய்து, “குடிப்பதற்கு எங்களுக்குத் தண்ணீர் தாரும்” என்றார்கள். அப்பொழுது மோசே அவர்களிடம், “என்னோடு ஏன் வாக்குவாதம் செய்கிறீர்கள்? யெகோவாவை ஏன் சோதிக்கிறீர்கள்?” என்றான்.
3 ஆனால் மக்கள் மிகவும் தாகமாயிருந்ததினால் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அவர்கள் அவனிடம், “எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் வளர்ப்பு மிருகங்களையும் தாகத்தினால் சாகும்படி, ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர்?” என்று கேட்டார்கள்.
4 அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்கு என்ன செய்வேன்? அவர்கள் என்னைக் கல்லெறிய ஆயத்தமாயிருக்கிறார்களே” என்றான்.
5 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இஸ்ரயேலின் சபைத்தலைவர்களில் சிலரை உன்னுடன் கூட்டிக்கொண்டு மக்களுக்கு முன்பாக நட. நீ நைல் நதியை அடித்த கோலை கையில் எடுத்துக்கொண்டு போ.
6 நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் அருகே உனக்கு முன்பாக அங்கே நிற்பேன். நீ கற்பாறையை அடி. அப்பொழுது மக்கள் குடிப்பதற்கு அதிலிருந்து தண்ணீர் வெளிவரும்” என்றார். மோசே அவ்விதமே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் முன்னிலையில் செய்தான்.
7 இஸ்ரயேலர்கள், “யெகோவா எங்களுடன் இருக்கிறாரா? இல்லையா?” என்று கேட்டு யெகோவாவைப் சோதித்தபடியால் அந்த இடத்திற்கு மாசா [*மாசா என்றால் சோதனை என்று அர்த்தம்.] என்றும், அவர்கள் வாதாடினபடியால் மேரிபா [†மேரிபா என்றால் வாதாடுவது அல்லது புகார் செய்வது என்று அர்த்தம்.] என்றும் மோசே பெயரிட்டான்.
8 அதன்பின் அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரயேலரைத் தாக்கினார்கள்.
9 அப்பொழுது மோசே யோசுவாவிடம் [‡யோசுவா என்பவர் மோசேயின் கட்டளையின்கீழ் இராணுவத் தலைவராக இருந்தார்.] , “எங்கள் மனிதரில் சிலரைத் தெரிந்துகொண்டு அமலேக்கியரோடு சண்டை செய்ய வெளியே போ. நான் நாளை என் கையில் இறைவனின் கோலைப் பிடித்துக்கொண்டு மலையுச்சியில் நிற்பேன்” என்றான்.
10 மோசே உத்தரவிட்டபடியே யோசுவா அமலேக்கியருடன் போரிட்டான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலையுச்சிக்குப் போனார்கள்.
11 மோசே தன் கைகளை உயர்த்திக்கொண்டிருக்கும்வரை, இஸ்ரயேலர் வென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே தன் கைகளைக் கீழே விடும்பொழுதோ, அமலேக்கியர் வெல்லத்தொடங்கினார்கள்.
12 மோசேயின் கைகள் தளர்ந்துபோயின. அப்போது ஆரோனும், ஊரும் ஒரு கல்லை எடுத்து அவனுக்குக் கீழே வைத்தார்கள். அவன் அதன்மேல் உட்கார்ந்தான். ஆரோனும், ஊரும் ஒரு பக்கம் ஒருவனும், மறுபக்கம் மற்றவனுமாக அவனுடைய கைகளை உயர்த்தித் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள். அதனால் சூரியன் மறையும்வரை அவன் கைகள் உறுதியாயிருந்தன.
13 எனவே யோசுவா வாளினால் அமலேக்கியப் படையை மேற்கொண்டான்.
14 அதன்பின் யெகோவா மோசேயிடம், “இன்று நடந்தது நினைவிற்கொள்வதற்காக இதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, அதை யோசுவா கேட்கும்படி சொல். ஏனெனில், நான் வானத்தின் கீழிருந்து அமலேக்கியரைப் பற்றிய நினைவையே இல்லாது போகும்படி அழித்துவிடுவேன் என்று சொல்” என்றார்.
15 மோசே அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி அவ்விடத்திற்கு யெகோவா என் வெற்றிக்கொடி [§வெற்றிக்கொடி அல்லது யெகோவா நிசி எனப்படும்.] என்று பெயரிட்டான்.
16 பின்பு மோசே, “யெகோவாவினுடைய அரியணைக்கு விரோதமாக அமலேக்கின் கரங்கள் உயர்த்தப்பட்டிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் யெகோவா அமலேக்கியருக்கு எதிராக யுத்தம் செய்வார்” என்றான்.
×

Alert

×