நீங்கள், இம்மாதத்தின் பத்தாம்நாள் ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தன்தன் குடும்பத்திற்காக வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று முழு இஸ்ரயேல் சமுதாயத்திற்கும் நீங்கள் சொல்லுங்கள்.
எந்த குடும்பமாவது ஒரு முழு ஆட்டுக்குட்டியை சாப்பிட முடியாத அளவுக்குச் சிறியதாயிருந்தால், அவர்கள் தங்களுக்கு மிக அருகிலுள்ள அண்டை வீட்டாருடன் சேர்ந்து, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அக்குட்டியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சாப்பிடும் அளவுக்கு ஏற்ப ஆட்டுக்குட்டியின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும்.
அவற்றை மாதத்தின் பதினான்காம் தேதிவரை, வீட்டில் கவனமாகப் பராமரிக்க வேண்டும். பின்பு இஸ்ரயேல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் தங்கள் ஆட்டுக்குட்டியை சாயங்கால வேளையில் கொல்லவேண்டும்.
இவ்விதமாகவே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும்: உங்கள் அங்கிகளை இடுப்புப்பட்டியால் கட்டிக்கொண்டு, கால்களில் செருப்புகளைப் போட்டுக்கொண்டு, உங்கள் கோலை உங்கள் கையில் பிடித்தபடி, அதை அவசரமாக [*அவசரமாக என்பது புறப்பட ஆயத்தம் எனப்படும்] சாப்பிடவேண்டும். இதுவே யெகோவாவின் கடந்துசெல்லுதல், யெகோவாவின் பஸ்கா [†இஸ்ரயேல் மக்களை விடுவிப்பதற்காக அழிவின் தூதன் கடந்து சென்றார்.] .
“அதே இரவில் நான் எகிப்து வழியாகக் கடந்துசென்று, அங்குள்ள மனிதர் மற்றும் மிருகங்களின் தலையீற்றுகளையும் சாகடிப்பேன். எகிப்திய தெய்வங்கள் எல்லாவற்றின் மீதும் [‡எகிப்திய தெய்வங்கள் பொய்யான தெய்வங்கள் என்பதை நான் சோதித்துக் காண்பிப்பேன் அல்லது நிரூபிப்பேன்.] நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். நானே யெகோவா.
இந்த இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளின்மேல் உங்களுக்கான ஒரு அடையாளமாயிருக்கும். நான் அந்த இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்தியரைச் சாகடிக்கும்போது, அழிவின் வாதை எதுவும் உங்களைத் தொடமாட்டாது.
புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாட்களுக்கு நீங்கள் சாப்பிடவேண்டும். முதலாம் நாளில் புளிப்பாக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டிலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில், முதலாம் நாள் தொடங்கி, ஏழாம் நாள்வரை புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடுகிறவன் எவனோ, அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும்.
முதலாம் நாள் ஒரு பரிசுத்த சபையையும், ஏழாம்நாளில் இன்னுமொரு பரிசுத்த சபையையும் கூட்டுங்கள். அந்நாட்களில் எந்தவித வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் சாப்பிடுவதற்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். இதை மட்டுமே நீங்கள் செய்யலாம்.
“புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கொண்டாடவேண்டும். ஏனெனில், அந்நாளில்தான் உங்கள் கோத்திரப்பிரிவுகளை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். நீங்களும், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமாக அந்நாளைக் கொண்டாடுங்கள்.
புளிப்பூட்டும் பொருட்கள் எதுவும் ஏழுநாட்களுக்கு உங்கள் வீடுகளில் காணப்படக்கூடாது. புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடும் எவனும், அவன் பிறநாட்டினனானாலும் சொந்த இஸ்ரயேலரானாலும் இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து அகற்றப்படவேண்டும்.
பின்பு ஒரு கட்டு ஈசோப்புக் குழையை எடுத்து, அதைக் கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் தோய்த்து, அதில் சிறிதளவு இரத்தத்தைக் கதவு நிலையின் மேற்சட்டத்திலும், அதன் இரண்டு நிலைக்கால்களிலும் பூசுங்கள். காலைவரை உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைக் கடந்து வெளியே போகக்கூடாது.
யெகோவா எகிப்தியரை அழிப்பதற்காகத் தேசத்தின் வழியாகக் கடந்துசெல்வார்; அப்பொழுது உங்கள் கதவின், மேல்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் இரத்தத்தைக் காணும்போது, அவர் அந்த வாசலைக் கடந்துபோவார், அழிப்பவன் உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்க அவர் அனுமதிக்கமாட்டார்.
அப்பொழுது நீங்கள் அவர்களிடம், ‘யெகோவா எகிப்தியரை அழிக்கும்போது எகிப்திலுள்ள இஸ்ரயேலரின் வீடுகளைக் கடந்துசென்று எங்கள் வீடுகளைத் தப்பவிட்டார். எனவே இது யெகோவாவுக்குச் செலுத்தும் பஸ்கா பலி’ என்று சொல்லுங்கள்” என்று மோசே சொன்னான். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து இறைவனை வழிபட்டார்கள்.
பார்வோனும், அவன் அதிகாரிகள் யாவரும், எகிப்தியர் அனைவரும் அன்றிரவில் விழித்து எழுந்தனர். எகிப்தில் ஒரு பெரிய ஓலம் உண்டாயிற்று. ஏனெனில் சாவு இல்லாத ஒரு வீடும் இருக்கவில்லை.
இரவிலேயே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து அவர்களிடம், “எழும்புங்கள்! என் மக்களை விட்டுவிடுங்கள், உடனே போங்கள். நீங்களும், இஸ்ரயேலரும் நீங்கள் கேட்டுக்கொண்டபடியே போய் யெகோவாவை வழிபடுங்கள்.
அன்று இஸ்ரயேல் மக்கள் ராமசேஸை விட்டு சுக்கோத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, ஆண்கள் மட்டும் ஆறுலட்சம் பேர் இருந்தார்கள்.
எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவினால் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டார்கள். அந்த மாவு புளிப்பில்லாதிருந்தது, ஏனெனில் அவர்கள் தங்களுக்கான உணவைத் தயாரிக்கும் முன்பே எகிப்திலிருந்து துரத்தப்பட்டார்கள்.
எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவதற்கு, அந்த இரவு யெகோவா விழித்திருந்தபடியால், யெகோவாவை மகிமைப்படுத்தும்படி, இந்த இரவில் தலைமுறைதோறும் இஸ்ரயேலர் விழித்திருக்க வேண்டும்.
“அது ஒரு வீட்டிற்குள்ளே சாப்பிடப்பட வேண்டும்; அந்த இறைச்சியில் சிறிதளவைக்கூட வீட்டுக்கு வெளியே கொண்டுபோகக்கூடாது. எலும்புகளில் எதையாவது முறிக்கவும் கூடாது.
“யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பும் உங்களுடன் வாழும் பிறநாட்டினன், தன் வீட்டிலுள்ள ஆண்களையெல்லாம் விருத்தசேதனம் செய்விக்க வேண்டும்; அதன்பின் அந்நாட்டு குடிமகனைப்போல், அதில் பங்குபெறலாம். ஆனால் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஒரு ஆணும் அதைச் சாப்பிடக்கூடாது.