English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Exodus Chapters

Exodus 10 Verses

1 அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போ; நான் இந்த அற்புத அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்வதற்காகத்தான் அவன் இருதயத்தையும், அவன் அதிகாரிகளுடைய இருதயங்களையும் கடினப்படுத்தியிருக்கிறேன்.
2 மேலும், நான் எப்படி எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எப்படி என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லும்படியும், இதனால் நானே யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியுமே இப்படிச் செய்தேன்” என்றார்.
3 எனவே, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் அவனிடம், “எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நீ எவ்வளவு காலத்திற்கு எனக்கு முன்பாக உன்னைத் தாழ்த்த மறுப்பாய்? என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போகவிடு.
4 நீ அவர்களைப் போகவிட மறுத்தால், நாளைக்கு உன் நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டுவருவேன்.
5 அவை நிலமே தெரியாதபடி தரையின் மேற்பரப்பு முழுவதையும் மூடும். அவை வயல்வெளியில் பனிக்கட்டிக்குத் தப்பியிருக்கும் தாவரங்கள் உட்பட, முளைக்கும் எல்லா மரங்களையும் தின்றுவிடும்.
6 அவை உன் வீடுகளையும், உன் அதிகாரிகளின் வீடுகளையும், எகிப்தியருடைய எல்லா வீடுகளையும் நிரப்பும். உன் தந்தையரோ, முற்பிதாக்களோ அவர்கள் இங்கு குடியேறிய காலத்திலிருந்து இன்றுவரை அப்படிப்பட்டதை ஒருபோதும் கண்டதில்லை’ என்று சொல்லி” மோசே பார்வோனை விட்டுத் திரும்பிப்போனான்.
7 பார்வோனின் அதிகாரிகள் அவனிடம், “எதுவரை இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்ய அந்த மனிதரைப் போகவிடும். எகிப்து நாடு பாழாய் போனதை நீர் இன்னும் உணரவில்லையா?” என்றார்கள்.
8 எனவே மோசேயும் ஆரோனும் திரும்பவும் பார்வோனிடம் அழைத்துவரப்பட்டார்கள். அவன் அவர்களிடம், “நீங்கள் போய் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால் போகிறவர்கள் யார்?” என்று கேட்டான்.
9 அதற்கு மோசே, “எங்கள் வாலிபரோடும், முதியோரோடும், எங்கள் மகன்கள், மகள்கள் எங்கள் ஆட்டு மந்தைகளோடும், மாட்டு மந்தைகளோடும் நாங்கள் போவோம். எங்கள் யெகோவாவுக்கு நாங்கள் பண்டிகை கொண்டாடவேண்டும்” என்றான்.
10 அதற்குப் பார்வோன் அவனிடம், “என்ன! உங்கள் பெண்களோடும், பிள்ளைகளோடும் உங்களைப் போகவிட்டு, ‘யெகோவா உங்களோடுகூட இருப்பாராக’ என்று சொல்லச் சொல்கிறாயா? நிச்சயமாக நீ தீயநோக்கமே கொண்டுள்ளாய்.
11 இல்லை! ஆண்கள் மட்டும் போகட்டும்; போய் உங்கள் யெகோவாவை வழிபடட்டும். அதைத்தானே நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்” என்றான். பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோன் முன்னிலையிலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.
12 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்தின்மேல் உன் கையை நீட்டு. அப்பொழுது நாட்டின்மேல் வெட்டுக்கிளிக் கூட்டம் வந்து ஆலங்கட்டி மழைக்குத் தப்பி, வயல்வெளிகளில் முளைக்கும் எல்லாவற்றையும் தின்றுவிடும்” என்றார்.
13 மோசே தன் கோலை எகிப்தின்மேல் நீட்டினான். அப்பொழுது யெகோவா, அன்று பகலும் இரவும் கொண்டல் காற்றை கிழக்கிலிருந்து நாட்டின்மேல் வீசச்செய்தார். காலையில் அக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
14 அவை எகிப்தின்மேல் படையாக வந்து, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெருந்தொகையாக இறங்கின. வெட்டுக்கிளிகளினால் உண்டான இப்படிப்பட்ட வாதை இதற்குமுன் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை.
15 அவை நாட்டின் மேற்பரப்பு முழுவதையும் மூடியதனால் நிலம் கருமையாயிற்று. ஆலங்கட்டி மழைக்குப்பின், தப்பிய எல்லா பயிர்களையும், மரங்களிலுள்ள பழங்களையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடு முழுவதிலும் உள்ள மரங்களிலோ, செடிகளிலோ பச்சையானது ஒன்றும் மீந்திருக்கவில்லை.
16 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாய் அழைப்பித்து, அவர்களிடம், “நான் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாய்ப் பாவம் செய்துவிட்டேன்.
17 ஆகையால் இன்னொருமுறை என் பாவத்தை மன்னித்து, இந்த மரண வாதையை என்னைவிட்டு எடுத்துப்போடும்படி உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடுங்கள்” என்றான்.
18 அப்பொழுது மோசே பார்வோனைவிட்டுப் போய், யெகோவாவிடம் மன்றாடினான்.
19 யெகோவா காற்றைப் பலத்த காற்றாக மேற்கு பக்கத்திற்குத் திருப்பி வீசச்செய்தார். அக்காற்று வெட்டுக்கிளிகளை வாரிக் கொண்டுபோய் செங்கடலுக்குள் சேர்த்தது. எகிப்தின் எல்லைக்குள் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீந்திருக்கவில்லை.
20 ஆனாலும் யெகோவா பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினார். அவன் இஸ்ரயேலரைப் போகவிடவில்லை.
21 அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “உன் கையை வானத்துக்கு நேராக நீட்டு. அப்பொழுது எல்லோரும் உணரக்கூடிய இருள் எகிப்தின்மேல் உண்டாகும்” என்றார்.
22 மோசே தன் கையை வானத்தை நோக்கி நீட்டினான். அப்பொழுது மூன்று நாட்கள் முழுமையான இருள் எகிப்து முழுவதையும் மூடியது.
23 மூன்று நாட்களுக்கு யாரும் வேறொருவரைப் பார்க்கவோ அல்லது தங்கள் இடத்திலிருந்து புறப்படவோ முடியாதிருந்தது. ஆனாலும் இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் அவர்களுக்கு வெளிச்சம் இருந்தது.
24 அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து அவனிடம், “நீங்கள் போய் உங்கள் யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். உங்களுடன் உங்கள் பெண்களும், பிள்ளைகளும் போகலாம். ஆனால் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் இங்கே விட்டுவிட்டுப் போங்கள்” என்றான்.
25 அதற்கு மோசே, “எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிகளையும், தகன காணிக்கைகளையும் நாம் எடுத்துச்செல்ல நீர் எங்களை அனுமதிக்கவேண்டும்.
26 எங்கள் மிருகங்களும் எங்களோடு வரவேண்டும். ஒரு மிருகத்தையாவது விட்டுச்செல்லக் கூடாது. எங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபடுவதற்கு அவைகளிலிருந்து சிலவற்றை எடுக்கவேண்டும். நாங்கள் அங்கேபோய்ச் சேருமட்டும், நாங்கள் எதைக்கொண்டு யெகோவாவை வழிபடுவோம் என்று எங்களுக்குத் தெரியாது” என்றான்.
27 யெகோவாவோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை.
28 பார்வோன் மோசேயிடம், “நீ என் கண்முன் நில்லாதே, போ! திரும்பவும் என் முகத்தில் விழிக்காதபடி எச்சரிக்கையாயிரு! நீ என் முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய்” என்றான்.
29 அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே இனி ஒருபோதும் நான் உமது முகத்தில் விழிக்கப்போவதில்லை” என்றான்.
×

Alert

×