அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் அழகாய் செய்திருக்கிறார். மனிதருடைய இருதயங்களில் அவர் நித்திய காலத்தின் உணர்வையும் வைத்திருக்கிறார். ஆனால் இறைவன் ஆரம்பம் முதல் இறுதிவரை செய்திருப்பதை அவர்களால் அளவிடமுடியாது.
இறைவன் செய்கின்ற எதுவும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனுடன் ஒன்றையும் சேர்க்கவோ, அல்லது அதிலிருந்து எதையாவது எடுக்கவோ முடியாது. மனிதர் அவரிடத்தில் பயபக்தியாய் இருப்பதற்காகவே இறைவன் அதைச் செய்கிறார்.
நீதியுள்ளவர்களையும், கொடியவர்களையும் இறைவன் நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவார். ஏனெனில் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஒரு காலம் உண்டு; ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலம் உண்டு என என் இருதயத்தில் நான் நினைத்துக்கொண்டேன்.
மனிதர் தாங்களும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளும்படி, இறைவன் அவர்களைச் சோதனைக்கு உட்படுத்துகிறார். இதையும் நான் நினைத்துக்கொண்டேன்.
ஆகவே தனது வேலையில் சந்தோஷப்படுவதைவிட நலமானது எதுவும் ஒரு மனிதனுக்கு இல்லை என்று நான் கண்டேன். ஏனெனில் அதுவே அவன் பங்கு. அவனுக்குப் பிறகு என்ன நிகழும் என்பதைக் காணும்படி அவனைக் கொண்டுவர யாரால் முடியும்?