நீ உன் வாலிப காலத்தில் உன்னைப் படைத்தவரை நினைவில்கொள்; துன்ப நாட்கள் வராததற்குமுன்னும், “வாழ்க்கையில் எனக்கு இன்பம் இல்லை” என்று நீ சொல்லும் வருடங்கள் வரும்முன்னும் அவரை நினைவிற்கொள்.
அதாவது சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும் உங்கள் கண்களுக்கு மங்கலாய்த் தோன்றுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் திரும்பவும் தோன்றுமுன்னும் அவரை நினைவிற்கொள்.
மேடான இடங்களுக்கும், வீதியிலுள்ள ஆபத்திற்கும் பயப்படும் முன்னும், வாதுமை மரம் பூக்கும் [*தலைமுடி] முன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தளர்ந்து போகுமுன்னும், ஆசையும் அற்றுப்போகுமுன்னும், மனிதன் தன் நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியில் கடந்து செல்வதற்கு முன்னும் படைத்தவரை நினைவில்கொள்.
பிரசங்கி ஞானமுள்ளவனாய் இருந்தது மட்டுமல்ல, அவன் மக்களுக்கு அறிவையும் புகட்டினான். இதனாலேயே அவன் ஆழ்ந்து யோசித்துப் பார்த்து, அநேக நீதிமொழிகளை தொகுத்து எழுதிவைத்தான்.
ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் நல்வழிக்கு உந்தித் தள்ளும் தாற்றுக்கோல் போன்றது. தொகுக்கப்பட்ட அவர்களின் முதுமொழிகள் உறுதியாய் அடிக்கப்பட்ட ஆணிகளைப் போன்றவை. அவை ஒரே மேய்ப்பனாலேயே கொடுக்கப்பட்டன.