உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிற்குள் உங்களைக் கொண்டுவருவார். அங்கே உங்களுக்கு முன்பாகப் பல நாடுகளை வெளியே துரத்துவார். உங்களைவிட எண்ணிக்கையிலும் வலிமையிலும் பெருத்தவர்களுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டவர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார்.
இவ்விதமாய் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்களிடம் ஒப்புக்கொடுத்து, நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கும்போது, நீங்கள் அவர்களை முற்றிலும் அழித்துவிடவேண்டும். அவர்களோடு உடன்படிக்கை செய்யவேண்டாம், அவர்களுக்கு இரக்கங்காட்டவேண்டாம்.
நீங்கள் அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்யவேண்டாம். உங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குத் திருமணம் செய்துகொடுக்கவேண்டாம். அவர்களுடைய மகள்களை உங்களுடைய மகன்களுக்கு எடுக்கவும் வேண்டாம்.
ஏனெனில், அவர்கள் மற்ற தெய்வங்களை வழிபடுவதற்காக உங்கள் மகன்களை என்னைப் பின்பற்றுவதிலிருந்து விலகச்செய்வார்கள். அப்பொழுது யெகோவாவின் கோபம் உங்களுக்கு எதிராக மூண்டு உங்களை விரைவாக அழித்துப்போடும்.
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது இதுவே: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி, அவர்களுடைய விக்கிரகங்களை நெருப்பில் எரித்துவிடுங்கள்.
ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குரிய பரிசுத்தமான மக்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு அருமையான உரிமைச்சொத்தாக இருக்கும்படி, அவர் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார். பூமியின் மேலுள்ள மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றிலுமிருந்து உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார்.
மற்ற மக்கள் கூட்டங்களைப் பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்பதற்காக யெகோவா உங்களில் அன்புகூர்ந்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை, நீங்கள் எல்லா மக்கள் கூட்டங்களிலும் கொஞ்சமாய் இருந்தீர்கள்.
ஆனாலும் யெகோவா உங்கள்மேல் அன்புகூர்ந்தபடியினால்தான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை உறுதிப்படுத்தவும், அவர் உங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தும் பார்வோன் அரசனின் அதிகாரத்திலிருந்தும் தமது வல்ல கரத்தினால் விடுவித்து உங்களை மீட்டுக்கொண்டார்.
ஆகையால் உங்கள் இறைவனாகிய யெகோவா மட்டுமே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள்; அவரே உண்மையுள்ள இறைவன். அவர் தன்னில் அன்புகூர்ந்து தமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, தமது அன்பின் உடன்படிக்கையை ஆயிரம் தலைமுறைக்கும் தொடர்ந்து காத்துக்கொள்கிறவர்.
நீங்கள் இந்த சட்டங்களைக் கவனித்து அதைப் பின்பற்ற எச்சரிக்கையாயிருந்தால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்குப்பண்ணியபடி, உங்களுடன் செய்துகொண்ட தமது அன்பின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்.
அவர் உங்களில் அன்புகூர்ந்து உங்களை ஆசீர்வதித்து, உங்கள் எண்ணிக்கைகளைப் பெருகச்செய்வார். உங்களுக்குக் கொடுப்பதாக, உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டில், உங்களுடைய கர்ப்பத்தின் கனியையும், உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய நிலத்தின் விளைச்சலையும், மாட்டு மந்தையிலுள்ள கன்றுகளையும், ஆட்டு மந்தையிலுள்ள குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.
மற்ற எல்லா மக்களிலும் நீங்கள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்; உங்களுக்குள்ளும் உங்கள் வளர்ப்பு மிருகங்களுக்குள்ளும் ஆணிலும் பெண்ணிலும் மலடு இருப்பதில்லை.
யெகோவா உங்களை எல்லா வியாதிகளிலிருந்தும் காத்துக்கொள்வார். எகிப்தில் நீங்கள் அறிந்திருந்த கொடிய வியாதிகளால் உங்களை வேதனைப்படுத்தமாட்டார்; ஆனால் உங்களை வெறுக்கிறவர்கள்மேல் அவற்றை வரப்பண்ணுவார்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு ஒப்புக்கொடுக்கும் எல்லா மக்கள் கூட்டங்களையும் நீங்கள் அழிக்கவேண்டும். நீங்கள் அவர்கள்மேல் அனுதாபப்பட வேண்டாம். அவர்களுடைய தெய்வங்களுக்குப் பணிசெய்யவும் வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்குக் கண்ணியாய் இருக்கும்.
உங்கள் இறைவனாகிய யெகோவா செய்த கொடிய துன்பங்களையும், அடையாளங்களையும், அதிசயங்களையும், அவருடைய வலிமையான கரத்தினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் உங்களை வெளியே கொண்டுவந்ததை நீங்கள் உங்கள் கண்களினாலேயே கண்டீர்கள். நீங்கள் பயப்படும் எந்த மக்கள் கூட்டத்துக்கும், உங்கள் இறைவனாகிய யெகோவா அப்படியே செய்வார்.
உங்கள் இறைவனாகிய யெகோவா அந்த நாடுகளை உங்களைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடுவார். நீங்கள் அவர்களை முழுவதும் உடனடியாக அழிக்கவேண்டாம். அப்படிச் செய்தால் காட்டு மிருகங்கள் உங்களுக்கிடையே பெருகிவிடும்.
அவர்களுடைய அரசர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்களுடைய பெயர்களை வானத்தின்கீழ் இல்லாதபடி அழித்துப்போடுவார். உங்களை எதிர்த்து எழுந்துநிற்க ஒருவராலும் முடியாது; நீங்கள் அவர்களை அழித்துவிடுவீர்கள்.
அவர்களுடைய தெய்வங்களின் உருவச்சிலைகளை நெருப்பினால் எரிக்கவேண்டும். அவற்றில் இருக்கும் தங்கத்தையோ வெள்ளியையோ அபகரிக்க ஆசைகொள்ளவேண்டாம். அவற்றை உங்களுக்காக எடுத்துக்கொள்ளவும் வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அது உங்களுக்குக் கண்ணியாய் இருக்கும், அது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.
அவருக்கு அருவருப்பானது எதையும் உங்கள் வீட்டிற்குள் கொண்டுவர வேண்டாம், ஏனெனில் அவைகளைப்போலவே நீங்களும் அழிவுக்கு நியமிக்கப்படுவீர்கள். அவற்றை முற்றிலுமாக வெறுத்து அருவருத்து விலக்கிவிடுங்கள், ஏனெனில் அவை அழிவுக்கே நியமிக்கப்பட்டிருக்கின்றன.