{#1கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்கள் } நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையெல்லாம் கடைப்பிடித்து, அவற்றின்படி நடந்தால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை இந்தப் பூமியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் மேலாக உயர்த்துவார்.
உங்கள் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படும், உங்கள் நாட்டின் பயிர்வகையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களான மாட்டு மந்தையின் கன்றுகளும், செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளும் ஆசீர்வதிக்கப்படும்.
உங்களுக்கு எதிராக வரும் பகைவர்கள் உங்களுக்கு முன்பாகத் தோல்வியடையும்படி, யெகோவா செய்வார். அவர்கள் ஒரு திசையிலிருந்து உங்களை எதிர்த்து வருவார்கள். ஆனால் உங்களைவிட்டு ஏழு திசைகளில் சிதறி ஓடுவார்கள்.
உங்கள் தானியக் களஞ்சியங்களின்மேலும், நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றின்மேலும் யெகோவா ஆசீர்வாதத்தை அனுப்புவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டில் உங்களை ஆசீர்வதிப்பார்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளையைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா ஆணையிட்டு வாக்குப்பண்ணியபடி, அவர் உங்களை பரிசுத்த மக்களாக நிலைநிறுத்துவார்.
யெகோவா உங்களுக்கு நிறைவான செழிப்பை வழங்குவார். உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்குக்கொடுத்த நாட்டில், உங்கள் கர்ப்பத்தின் கனியையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் இளமையானவற்றையும், உங்கள் நிலத்தின் விளைச்சலையும் நிறைவாகச் செழிக்கப்பண்ணுவார்.
யெகோவா தமது நிறைவான களஞ்சியமான வானத்தைத் திறந்து உங்கள் நாட்டிலே பருவகாலத்தில் மழையை அனுப்புவார். உங்கள் கைவேலைகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் அநேக நாட்டவர்களுக்குக் கடன்கொடுப்பீர்கள். ஆனால் ஒருவரிடமும் கடன் வாங்கமாட்டீர்கள்.
யெகோவா உங்களைத் தலையாக்குவார்; வாலாக்கமாட்டார். இந்த நாளில் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கவனித்து அவற்றைக் கவனமாகப் பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் மேன்மையாய் இருப்பீர்கள். கீழாயாகமாட்டீர்கள்.
வேறு தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்குப் பணிசெய்வதினால், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகள் ஒன்றிலிருந்தும் வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்பவேண்டாம்.
{#1கீழ்ப்படியாமையினால் வரும் சாபங்கள் } ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும் கவனமாய்ப் பின்பற்றாமலும்போனால், இந்த சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வந்து, உங்களை பிடித்துக்கொள்ளும்:
யெகோவா உங்கள்மேல் சாபங்களை அனுப்புவார், உங்களுடைய கையின் வேலைகள் எல்லாவற்றின்மேலும் கலகத்தையும், கண்டனத்தையும் அனுப்புவார். நீங்கள் அவரைக் கைவிட்ட அந்த தீமையான செயலின் நிமித்தம் திடீரென அழிந்து பாழாய்போகும் வரைக்கும், இவற்றை உங்கள்மேல் அனுப்புவார்.
யெகோவா உங்கள் பகைவர்களுக்கு முன்னே உங்களைத் தோல்வி அடையப்பண்ணுவார். ஒரு திசையிலிருந்து அவர்களை எதிர்த்து வருவீர்கள். ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடுவீர்கள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுக்கும் நீங்கள் ஒரு பயங்கரக் காட்சியாய் இருப்பீர்கள்.
குருடன் இரவில் தடவித்திரிவதுபோல், நீங்கள் நடுப்பகலில் தடவித்திரிவீர்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தோல்வி அடைவீர்கள். நாள்தோறும் நீங்கள் ஒடுக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்படுவீர்கள். ஒருவரும் உங்களை விடுவிக்கமாட்டார்கள்.
உங்களுக்கு ஒரு பெண் திருமணம் செய்ய நிச்சயிக்கப்படும். வேறொருவனோ அவளைக் கொண்டுபோய் கற்பழிப்பான். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுவீர்கள். அதில் வேறொருவன் குடியிருப்பான். நீங்கள் ஒரு திராட்சைத் தோட்டத்தை நாட்டுவீர்கள், அதன் பழத்தையோ சுவைக்கத் தொடங்கவும்மாட்டீர்கள்.
உங்கள் கண்களுக்கு முன்னால் உங்கள் மாடுகள் கொல்லப்படும். ஆனால் அதில் ஒன்றையும் நீங்கள் சாப்பிடமாட்டீர்கள். உங்கள் கழுதை உங்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்படும். அது திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. உங்கள் செம்மறியாடுகள் உங்கள் பகைவர்களிடம் கொடுக்கப்படும். அவற்றை யாரும் தப்புவிக்கமாட்டார்கள்.
உங்கள் மகன்களும், மகள்களும் வேறு நாட்டவர்களுக்குக் கொடுக்கப்படுவார்கள். நீங்களோ அவர்களுக்காக நாள்தோறும் காத்திருந்து கண்களை பூத்துப்போகச்செய்வீர்கள். அதைக் கை நீட்டித் தடுக்கவும் வலிமையற்றவர்களாய் இருப்பீர்கள்.
உங்கள் நிலமும், உங்கள் முயற்சியும் விளைவித்த பலனை, நீங்கள் அறியாத மக்கள் சாப்பிடுவார்கள். உங்கள் வாழ்நாளெல்லாம் கொடுமையான ஒடுக்குதலைத்தவிர, வேறொன்றும் உங்களுக்குக் கிடைக்காது.
யெகோவா உங்கள் முழங்கால்களையும், கால்களையும் குணமாக்கமுடியாதபடி வேதனை நிறைந்த கொப்புளங்களால் வாதிப்பார். அவை உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை பரவும்.
யெகோவா உங்களையும், நீங்கள் உங்களுக்கென்று ஏற்படுத்துகிற அரசனையும், நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாத ஒரு நாட்டவரிடம் துரத்துவார். அங்கே நீங்கள் மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்ட தெய்வங்களான அந்நிய தெய்வங்களை வழிபடுவீர்கள்.
யெகோவா உங்களைத் துரத்திவிடும் மக்கள் கூட்டங்களுக்குள் நீங்கள் அவர்களுக்கு பயங்கரக் காட்சியாகவும், ஏளனத்துக்கும், கேலிக்கும் உரியவர்களாகவும் இருப்பீர்கள்.
நீங்கள் திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவற்றைப் பேணி வளர்ப்பீர்கள். ஆனால் அவற்றிலிருந்து பழங்களைச் சேர்க்கவோ, இரசத்தைக் குடிக்கவோமாட்டீர்கள். ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும்.
இந்தச் சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வரும். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களைப் பின்தொடர்ந்து பற்றிப்பிடிக்கும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளாமலும் போனபடியினால் இப்படி நடக்கும்.
ஆகையால் நீங்கள் பசியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், கொடிய வறுமையோடும் யெகோவா உங்களுக்கு எதிராக அனுப்பும் பகைவருக்குப் பணிசெய்வீர்கள். அவர் உங்களை அழித்தொழிக்கும் வரைக்கும் உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தை வைப்பார்.
யெகோவா உங்களுக்கு எதிராகப் பூமியின் கடைசியான தூரத்திலிருந்து ஒரு நாட்டைக் கொண்டுவருவார். அவர்கள் ஒரு கழுகு பறக்கும் வேகத்துடன் வருவார்கள். அந்த நாட்டவர்களின் மொழி உங்களுக்கு விளங்காது.
நீங்கள் அழியும்வரை அவர்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளையும், நிலத்தின் பலனையும் விழுங்கிவிடுவார்கள். நீங்கள் பாழாய்ப்போகும்வரை உங்களுக்காக தானியத்தையோ, புது திராட்சை இரசத்தையோ, ஒலிவ எண்ணெயையோ, மாட்டு மந்தையின் கன்றுகளையோ, செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளையோ விட்டுவைக்கமாட்டார்கள்.
நீங்கள் நம்பியிருக்கும் அரண்செய்யப்பட்ட உயர்ந்த மதில்கள் விழும்வரை, உங்கள் நாட்டிலுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாடு முழுவதிலுமுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள்.
உங்கள் மத்தியில் மிகுந்த சாதுவாகவும், மென்மையாகவும் இருக்கும் மனிதன்கூட, தன் சொந்த சகோரனிடத்திலோ, தான் அன்பு செலுத்துகிற மனைவியினிடத்திலோ, தப்பிப்பிழைத்த தன் பிள்ளைகளினிடத்திலோ கருணை காட்டமாட்டான்.
அவர்களில் ஒருவனுக்காவது தான் சாப்பிடும் தன் பிள்ளைகளின் சதையை அவன் கொடுக்கமாட்டான். உங்கள் பட்டணங்களையெல்லாம் உங்கள் பகைவர் முற்றுகையிடும்போதும், உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போதும் அவனுக்குச் சாப்பிடுவதற்கு அந்தப் பிள்ளையின் சதையைவிட வேறு எதுவும் கிடைக்காது.
தன் பாதங்களை நிலத்தில் வைத்து நடக்கத் துணியாமல் மிகவும் சாதுவாகவும், மென்மையாகவும் உங்கள் மத்தியில் இருக்கும் பெண்ணும்கூட, தான் அன்பு செலுத்தும் கணவனுக்கோ, தன் சொந்த மகனுக்கோ, மகளுக்கோ
தன் கர்ப்பப்பையிலிருந்து வெளிப்படும் நச்சுக்கொடியையும், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளையும்கூட கொடுத்துச் சாப்பிடமாட்டாள். ஏனெனில் உங்கள் பட்டணங்களில் உங்கள் பகைவர் உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போது, அந்த முற்றுகை வேளையில் அவற்றை இரகசியமாகவே தான் சாப்பிடுவது அவளின் நோக்கமாயிருக்கும்.
இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் நீங்கள் கவனமாகப் பின்பற்றாமலும், உங்கள் இறைவனாகிய யெகோவாவின் மகிமையும், பயங்கரமுமான பெயரைக்குறித்து பயபக்தி உள்ளவர்களாய் இராமலும் போனால்,
அப்பொழுது வானத்து நட்சத்திரங்களைப்போல எண்ணிக்கையில் அதிகமாய் இருந்த நீங்கள், எண்ணிக்கையில் ஒரு சிலராய் குறைந்துபோவீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை.
யெகோவா உங்களை செழிக்கப்பண்ணி, உங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விருப்பம் கொண்டதுபோலவே, உங்களைப் பாழாக்கி அழிக்கவும் விருப்பம்கொள்வார். நீங்கள் உரிமையாக்கப்போகும் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்கப்படுவீர்கள்.
யெகோவா உங்களைப் பூமியின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்குமுள்ள எல்லா நாடுகள் மத்தியிலும் சிதறடிப்பார். அங்கே நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாததும், மரத்தினாலும், கல்லினாலும் செய்யப்பட்டதுமான தெய்வங்களை வணங்குவீர்கள்.
அந்த நாடுகள் மத்தியில் அங்கே உங்களுக்கு ஆறுதல் இருக்காது. உங்களுக்குக் காலூன்றி இளைப்பாற இடமும் கிடைக்காது. யெகோவா அங்கே உங்களுக்கு அமைதியற்ற மனதையும், ஏக்கத்தால் சோர்வுற்ற கண்களையும், நம்பிக்கை இழந்த இருதயத்தையும் கொடுப்பார்.
உங்கள் இருதயங்களை நிரப்பும் திகிலினாலும், உங்கள் கண்கள் காணும் காட்சிகளினாலும் காலையில், “மாலை வராதோ?” என்றும் மாலையில், “காலை வராதோ?” என்றும் நீங்கள் சொல்வீர்கள்.
“இனி எகிப்திற்கு ஒருபோதும் பயணமாய் போகக்கூடாது” என நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனாலும் யெகோவா உங்களைத் திரும்பவும் எகிப்திற்குக் கப்பல்களில் அனுப்புவார். நீங்கள் அங்கே உங்கள் பகைவர்களிடம் ஆண் அடிமைகளாகவும், பெண் அடிமைகளாகவும் உங்களை விற்கும்படி முயற்சிப்பீர்கள். ஆனால் ஒருவரும் உங்களை வாங்கமாட்டார்கள்.