நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டிற்குள் போகும்போது, சில பெரிய கற்களை நாட்டி அவற்றிற்குச் சாந்து பூசுங்கள்.
நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள், அதாவது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு வாக்குக்கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும் [*செழிப்பான நாடு.] நாட்டிற்குள் போகும்போது, இந்த சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் அந்தக் கற்களின்மேல் எழுதுங்கள்.
அதன்பின் மோசேயும், லேவிய ஆசாரியரும் எல்லா இஸ்ரயேலரிடமும் சொன்னதாவது, “இஸ்ரயேலர்கள், மவுனமாய் இருந்து செவிகொடுங்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் சொந்த மக்களாகிவிட்டீர்கள்.
ஆகவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்றார்கள்.
நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தவுடன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்கள் மக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறும்படி, கெரிசீம் மலையில் நிற்கவேண்டும்.
“யெகோவாவுக்கு அருவருப்பானதும், கைவினைக் கலைஞனின் வேலையுமான ஒரு உருவச்சிலையை செதுக்கி, ஒரு விக்கிரகத்தை வார்ப்பித்து, அதை மறைவிடத்தில் வைக்கிற மனிதன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.