உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் பட்டணங்களில் ஒன்றில் உங்கள் மத்தியில் வாழும் ஒரு ஆணோ, பெண்ணோ உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, அவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதாகக் காணப்படக்கூடும்.
அது உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படும்பொழுது, நீங்கள் அதை முற்றிலும் விசாரணை செய்யவேண்டும். அந்த அருவருப்பான செயல் உண்மையாயிருந்து அது இஸ்ரயேலில் செய்யப்பட்டது என நிரூபிக்கப்பட்டால்,
சாட்சிகளின் கைகளே அவனைக் கொலைசெய்வதில் முதலாவதாக இருக்கவேண்டும். அதன்பின்னரே மற்ற எல்லா மக்களுடைய கைகளும் நீட்டப்பட வேண்டும். இப்படியாக நீங்கள் உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்றவேண்டும்.
நீங்கள் நியாயந்தீர்க்கக் கடினமான வழக்குகள் உங்கள் நீதிமன்றங்களுக்கு வந்தால், அவை இரத்தம் சிந்துதலோ, சட்ட விவகாரமோ, தாக்குதலோ எதுவாயிருந்தாலும், அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோங்கள்.
செய்யும்படி அவர்கள் உங்களுக்குப் பணிக்கும் ஒவ்வொன்றையும் செய்யக் கவனமாயிருங்கள். அவர்கள் உங்களுக்குப் போதிக்கிற சட்டத்தின்படியேயும், அவர்கள் உங்களுக்குக் கொடுக்கிற தீர்மானங்களின்படியேயும் செயற்படுங்கள். அவர்கள் சொல்வதிலிருந்து வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகவேண்டாம்.
நீதிபதியையோ, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு ஊழியம் செய்யும் ஆசாரியனையோ அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும். இப்படியாக நீங்கள் இஸ்ரயேலில் இருந்து தீமையை அகற்றவேண்டும்.
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள்போய், அதை உரிமையாக்கிக்கொண்டு அதில் குடியிருக்கும்பொழுது, “எங்களைச் சூழ இருக்கிற மற்ற நாடுகளைப்போல் எங்களுக்கு மேலாக ஒரு அரசனை நியமிப்போம்” என்பீர்கள்.
அப்பொழுது, நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் ஒருவனையே உங்களுக்குமேல் அரசனாக நியமிக்கக் கவனமாயிருங்கள். அவன் உங்கள் சகோதரருள் ஒருவனாக இருக்கவேண்டும். உங்கள் சகோதர இஸ்ரயேலன் அல்லாத ஒரு அந்நியனை உங்களுக்கு மேலாக நியமிக்கவேண்டாம்.
மேலும், அவன் தனக்கென்று அதிக எண்ணிக்கையான குதிரைகளைச் சொந்தமாக்கிக்கொள்ளக்கூடாது. அரசன் அதிகமான குதிரைகளைப் பெறுவதற்கு மக்களைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்பவும்கூடாது. ஏனெனில், “நீங்கள் அந்த வழியாய்த் திரும்பவும் போகக்கூடாது” என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
அரசன் தனக்கு அநேக மனைவிகளை வைத்திருக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அவனுடைய இருதயம் வழிவிலகிப்போகும். அவன் பெருந்தொகையான தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்துவைக்கவும்கூடாது.
அவன் தன் அரசுக்குரிய அரியணையைப் பொறுப்பேற்கும்போது, லேவியரான ஆசாரியர்களிடம் இருக்கும் சட்டத்திலிருந்து, ஒரு பிரதியை தனக்காக ஒரு புத்தகச்சுருளில் எழுதிக்கொள்ளவேண்டும்.
அப்பிரதி அவனிடம் இருக்கவேண்டும். அவன் தன் வாழ்நாளெல்லாம் அதை வாசிக்கவேண்டும். அப்பொழுது அவன் தன் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயபக்தியாய் இருக்கவும், இந்த சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், விதிமுறைகளையும் கவனமாய்க் கைக்கொள்ளவும் கற்றுக்கொள்வான்.
அவன் தன் சகோதரரைவிடத் தான் மேலானவன் என்று எண்ணாமலும், நீதிச்சட்டத்திலிருந்து வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகாமலும் இருப்பான். அப்பொழுது அவனும், அவன் சந்ததிகளும் இஸ்ரயேலில் உள்ள அவனுடைய அரசில் நீண்டகாலமாக ஆட்சிசெய்வார்கள்.