English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Acts Chapters

Acts 28 Verses

1 நாங்கள் பாதுகாப்பாய் கரைசேர்ந்தபின்பு அந்தத் தீவு மாலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம்.
2 அந்தத் தீவில் இருந்தவர்கள் வழக்கத்திற்கு மாறான தயவை எங்களுக்குக் காண்பித்தார்கள். அங்கு மழையும் குளிருமாய் இருந்ததினால், அவர்கள் நெருப்புமூட்டி, எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள்.
3 பவுல் ஒரு விறகுக்கட்டைச் சேர்த்துக் கொண்டுவந்து, அதை நெருப்பிலே போட்டான். அப்பொழுது விறகுக்குள் இருந்து ஒரு விரியன் பாம்பு, சூடுபட்டதனால் வெளியே வந்து, பவுலின் கையை இறுகப்பிடித்துக் கொண்டது.
4 அந்தத் தீவில் இருந்தவர்கள் பாம்பு அவனுடைய கையில் தொங்குவதைக் கண்டபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவன் ஒரு கொலை பாதகனாயிருக்கவேண்டும். இவன் கடலில் இருந்து தப்பியபோதும்கூட, நீதி இவனை உயிரோடு வாழவிடவில்லை” என்றார்கள்.
5 ஆனால் பவுலோ அந்தப் பாம்பை உதறி நெருப்பில் போட்டான். அவனுக்கு எந்தவிதத் தீங்கும் நேரிடவில்லை.
6 அந்த மக்களோ, அவன் வீங்கி திடீரென விழுந்து சாவான் என்று எதிர்பார்த்தார்கள். நீண்ட நேரமாகியும்கூட அவர்கள் எதிர்பார்த்தபடி, வழக்கத்திற்கு மாறாக அவனுக்கு எதுவும் நேரிடாததைக் கண்டு, அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். இவன் ஒரு தெய்வம் என்று அவர்கள் சொன்னார்கள்.
7 அந்தத் தீவைச் சேர்ந்தவர்களுக்குத் தலைவனாயிருந்த புபிலியு என்பவனுக்குச் சொந்தமான பெரிய தோட்டம் அருகாமையில் இருந்தது. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் அழைத்து, மூன்று நாட்களாக எங்களுக்கு விருந்து உபசாரம் செய்தான்.
8 அவனுடைய தகப்பனோ, காய்ச்சலினாலும் வயிற்று அளச்சலாலும் நோயுற்றுப் படுக்கையிலேயே கிடந்தான். பவுல் அவனைப் பார்க்கும்படி உள்ளேப் போய், மன்றாடியபின் அவன்மேல் தனது கைகளை வைத்து, அவனை குணமாக்கினான்.
9 இது நடந்தபோது, அந்தத் தீவிலிருந்த மற்ற நோயாளிகளும் வந்து, சுகம் பெற்றுக்கொண்டார்கள்.
10 அவர்கள் பலவழிகளில் எங்களுக்கு மதிப்புக் கொடுத்தார்கள். சிறிதுகாலம் கழித்து நாங்கள் புறப்பட ஆயத்தமானபோது, எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்து உதவினார்கள்.
11 மூன்று மாதங்களுக்குப் பிறகு, குளிர்க்காலத்தைக் கழிப்பதற்காக அந்தத் தீவிலே தங்கியிருந்த ஒரு கப்பலில் நாங்கள் புறப்பட்டோம். அது அலெக்சந்திரியாவைச் சேர்ந்த கப்பல். அந்தக் கப்பலின் முகப்பு, இரட்டைத் தெய்வங்களின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
12 நாங்கள் சீரகூசா பட்டணத்தைச் சென்றடைந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
13 பின் அங்கிருந்து புறப்பட்டு, ரேகியும் துறைமுகத்தை அடைந்தோம். மறுநாள் தெற்கிலிருந்து காற்று வீசியது. நாங்கள் அதற்கடுத்த நாள், புத்தேயோலி துறைமுகத்தைச் சென்றடைந்தோம்.
14 அங்கே நாங்கள் சில சகோதரர்களைச் சந்தித்தோம். அவர்கள் எங்களைத் தங்களுடன் ஒரு வாரம் தங்கும்படி அழைத்தார்கள். அதற்குப் பின்பு நாங்கள் ரோம் நகரத்துக்குப் போனோம்.
15 அங்குள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிறோம் என்று கேள்விப்பட்டதினால், அவர்கள் எங்களைச் சந்திக்கும்படி பயணமாய் புறப்பட்டு, அப்பியூ சந்தை, முச்சத்திரம் ஆகிய இடங்கள்வரை வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி, உற்சாகமடைந்தான்.
16 நாங்கள் ரோம் நகரத்தைச் சென்றடைந்தபோது, பவுல் ஒரு படைவீரனின் காவலின்கீழ், தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டான்.
17 மூன்று நாட்களுக்குபின், அவன் யூதர்களின் தலைவர்களை ஒன்றாக அழைத்தான். அவர்கள் ஒன்றுகூடி வந்தபோது, பவுல் அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நம்முடைய மக்களுக்கு விரோதமாகவோ, நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கு விரோதமாகவோ, எதையுமே நான் செய்யவில்லை. ஆனால் நான் எருசலேமிலே கைது செய்யப்பட்டு, ரோமரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன்.
18 அவர்கள் என்னை விசாரணை செய்து, மரணதண்டனையை பெறக்கூடிய குற்றம் எதையும் நான் செய்யாததனால், என்னை விடுவிக்க விரும்பினார்கள்.
19 ஆனால் யூதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, நான் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்யும்படி கேட்க நேர்ந்தது. ஆனால், என்னுடைய மக்களுக்கு விரோதமான குற்றச்சாட்டு எதுவும் என்னிடத்தில் இருந்ததில்லை.
20 இதனாலேயே நான் உங்களைக் கண்டு, உங்களிடம் பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். இஸ்ரயேலர் எதிர்பார்த்திருந்தவரின் காரணமாகவே நான் இந்தச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.
21 அதற்கு அவர்கள், “உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அங்கிருந்து வந்த சகோதரர்களில், யாரும் உன்னைக் குறித்துத் தீமையான எதையும் அறிவிக்கவோ, சொல்லவோ இல்லை.
22 ஆனால், உன்னுடைய கருத்துக்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஏனெனில், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள், இந்தப் பிரிவினை மார்க்கத்திற்கு விரோதமாக பேசுகிறதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள்.
23 அவர்கள் பவுலைச் சந்திக்க ஒருநாளை நியமித்து, பவுல் தங்கியிருந்த இடத்துக்குப் பெருங்கூட்டமாக வந்தார்கள். அவன் காலையிலிருந்து மாலைவரை, இறைவனுடைய அரசைக் குறித்து விவரமாய் அவர்களுக்கு அறிவித்தான். மோசேயினுடைய சட்டத்திலிருந்தும், இறைவாக்கினரின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப்பற்றி எடுத்துக் காண்பித்து, அவர்களை நம்பவைக்க முயற்சித்தான்.
24 சிலர் அவன் சொன்னதைச் சம்மதித்தார்கள், ஆனால் மற்றவர்களோ அதை விசுவாசிக்கவில்லை.
25 அவர்கள் தங்களுக்குள்ளேயே மனவேற்றுமைக் கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் போவதற்குமுன், பவுல் அவர்களைப் பார்த்து இறுதியாகச் சொன்னதாவது: “பரிசுத்த ஆவியானவர் இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாய் பேசியபொழுது, உங்கள் முற்பிதாக்களுடன் இதைப் பொருத்தமாகத்தான் பேசியுள்ளார்:
26 “ ‘இந்த மக்களிடத்தில் போய், “நீங்கள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள், ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள் என்று சொல்.”
27 ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’ [*ஏசா. 6:9,10 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)]
28 “ஆகையால், இறைவனுடைய இரட்சிப்பு யூதரல்லாத மக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்கள் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றான்.
29 பவுல் இதைச் சொல்லி முடித்ததும், யூதர்கள் மிகவும் கடுமையாக விவாதம் செய்துகொண்டு புறப்பட்டுப் போனார்கள். [†சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.]
30 பவுல் இரண்டு வருடங்கள் முழுவதும், தான் வாடகைக்கு எடுத்த வீட்டிலே தங்கியிருந்து, தன்னைச் சந்திக்க வந்த எல்லோரையும் வரவேற்றான்.
31 துணிச்சலுடன் தடை எதுவுமின்றி, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் போதித்தான்.
×

Alert

×