English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Acts Chapters

Acts 21 Verses

1 நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலம் புறப்பட்டு, நேர்திசையில் பயணம் செய்து, கோஸ்தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து பத்தாரா பட்டணத்திற்குப் போனோம்.
2 அங்கிருந்து பெனிக்கேவுக்கு ஒரு கப்பல் போவதை நாங்கள் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம்.
3 நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, அதன் தெற்குப் பக்கமாக அதைக் கடந்துசென்று, சீரியாவுக்குக் கப்பலில் பயணமானோம். தீரு பட்டணத்தில் கரை இறங்கினோம். ஏனெனில், அந்தக் கப்பல் அங்கே பொருட்களை இறக்க வேண்டியிருந்தது.
4 அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு, அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால், எருசலேமுக்குப் போகவேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள்.
5 ஆனால் நாங்களோ, அங்கே தங்கவேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பொழுது அங்கேயிருந்த சீடர்கள் அனைவரும் தங்கள் மனைவி, பிள்ளைகளுடனும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் அனைவரும் கடற்கரையில் முழங்காற்படியிட்டு மன்றாடினோம்.
6 பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
7 நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம்.
8 மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்குத் தெரிந்தெடுத்த, அந்த ஏழுபேரில் ஒருவன்.
9 அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள்.
10 அங்கே சிலநாட்கள் நாங்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான்.
11 அவன் எங்களிடம் வந்து, பவுலின் இடைக்கச்சையை எடுத்து, அதனால் தனது கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு இறைவாக்குரைத்தான். அவன் சொன்னதாவது: “இந்த இடைக்கச்சைக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்” என்றான்.
12 நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
13 அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
14 நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததினால், “கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கட்டும்” என்று சொல்லி, நாங்கள் பேசாமல் இருந்தோம்.
15 இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம்.
16 செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான்.
17 நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
18 மறுநாள் பவுலும், நாங்களும் யாக்கோபைச் சந்திக்கும்படி போனோம். எருசலேம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.
19 பவுல் அவர்களை வாழ்த்தி, தனது ஊழியத்தின் மூலம் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விவரமாய் விளக்கிச்சொன்னான்.
20 அவர்கள் இதைக் கேட்டபோது, இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம்: “சகோதரனே, யூதருக்குள் ஆயிரக்கணக்கானோர் விசுவாசித்திருக்கிறார்கள் என்று நீ காண்கிறாயே. அவர்கள் அனைவரும் மோசேயின் சட்டத்தைக்குறித்து ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
21 யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதருக்கும், அவர்கள் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிக்கிறதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக்கூடாது என்றும் நீ போதிக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
22 ஆகவே நாம் செய்யக்கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள்.
23 எனவே, நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கிற நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
24 இவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், இவர்கள் செய்யும் பாரம்பரிய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் சேர்ந்துகொள்; இவர்கள் மொட்டையடிப்பதற்கான செலவை நீ செலுத்து. அப்பொழுது அனைவரும் உன்னைப்பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கிறாய் என்றும் அறிந்துகொள்வார்கள்.
25 யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்தோ, நாங்கள் எங்கள் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதியிருக்கிறோம்; அவர்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவையும் இரத்தத்தையும் நெரிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள்.
26 மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடனே தானும் பாரம்பரிய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்பொழுது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்பொழுது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குப் போனான்.
27 அந்த ஏழு நாட்கள் முடியப்போகும் வேளையில், ஆசியா பகுதியைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டார்கள். அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டியெழுப்பி, பவுலைப் பிடித்தார்கள்.
28 அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவிசெய்யுங்கள்! நமது மக்களுக்கும், மோசேயின் சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக, எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கிறவன் இவன்தான். இவன் ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த இடத்தையும் தூய்மைக் கேடாக்கிவிட்டான்” என்றார்கள்.
29 ஏனெனில் அவர்கள் எபேசியனான துரோப்பீமும், பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
30 முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது, எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடிவந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.
31 அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது.
32 அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும், படைவீரரையும் கூட்டிக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் படைவீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.
33 படைத்தளபதி வந்து அவனைக் கைதுசெய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
34 மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். மற்றவர்கள் வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தினால், படைத்தளபதிக்கு உண்மையை அறியமுடியவில்லை. எனவே அவன் பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான்.
35 பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால், பவுலை படைவீரர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
36 பின்னாலே சென்ற மக்கள் கூட்டம், “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள்.
37 படைவீரர் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் படைத்தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
38 சிறிது காலத்துக்குமுன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைவனத்திற்கு வழிநடத்திப்போன எகிப்தியன் நீ தானா?” என்று கேட்டான்.
39 அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் நான் பேச என்னை அனுமதியும்” என்றான்.
40 படைத்தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் அனைவரும் அமைதியடைந்தபோது, அவன் எபிரெய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான்.
×

Alert

×