English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Acts Chapters

Acts 11 Verses

1 யூதரல்லாதவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலரும் யூதேயா முழுவதிலுமுள்ள சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.
2 எனவே பேதுரு எருசலேமுக்குப் போனபோது, விருத்தசேதனம் செய்துகொண்ட விசுவாசிகள் அவனைக் குற்றப்படுத்தி,
3 “நீ ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களிடம் சென்று அவர்களுடன் உணவு உட்கொண்டாய்” என்றார்கள்.
4 பேதுரு ஒன்றுவிடாமல் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கத் தொடங்கினான்:
5 “நான் யோப்பா பட்டணத்தில் மன்றாடிக்கொண்டிருந்தபோது, பரவசமடைந்து ஒரு தரிசனத்தைக் கண்டேன். ஒரு பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று, அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, பரத்திலிருந்து இறக்கப்படுவதைக் கண்டேன். அது நான் இருந்த இடத்தை நோக்கி இறங்கி வந்தது.
6 நான் அதற்குள் பார்த்தபோது, பூமியிலுள்ள நான்கு கால்களையுடைய மிருகங்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.
7 அப்பொழுது ஒரு குரல் என்னிடம், ‘பேதுரு எழுந்திரு. கொன்று சாப்பிடு’ என்று சொன்னது.
8 “நானோ, ‘இல்லை ஆண்டவரே, நான் ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதுவும் என் வாய்க்குள்ளே ஒருபோதும் போனதில்லை’ என்றேன்.
9 “பரத்திலிருந்து அந்தக் குரல் இரண்டாவது முறையும் என்னுடன் பேசி, ‘இறைவன் சுத்தமாக்கிய எதையும் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே’ என்றது.
10 இப்படி மூன்று முறைகள் நடந்தது. பின்பு, அது மீண்டும் பரத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது.
11 “அதேவேளையில் நான் தங்கியிருந்த வீட்டின் வாசலில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூன்றுபேர் நின்றுகொண்டிருந்தார்கள்.
12 நான் அவர்களுடன் போகத் தயங்கக்கூடாது என்று, பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொன்னார். இந்த ஆறு சகோதரரும் என்னுடன் வந்தார்கள், நாங்கள் அந்த மனிதனுடைய வீட்டிற்குள் போனோம்.
13 அவனோ தனது வீட்டிலே, எப்படி ஒரு இறைத்தூதன் தனக்குக் காட்சியளித்ததைத் தான் கண்டதாகவும், அந்தத் தூதன் பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிவரும்படி யோப்பா பட்டணத்திற்கு ஆட்களை அனுப்பும்படி சொன்னான் என்றும் கூறினான்.
14 அத்துடன் அவன் கொண்டுவரும் செய்தியினால் நீயும், உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று இறைத்தூதன் சொன்னதாகவும் அவன் எங்களுக்கு அறிவித்தான்.
15 “நான் பேசத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் தொடக்கத்தில் நம்மேல் இறங்கியது போலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.
16 அப்பொழுது, ‘யோவான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுத்தான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்னதை, நான் நினைவுகூர்ந்தேன்.’
17 எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்களாகிய நமக்குக் கொடுத்த அதே வரத்தை அவர்களுக்கும் கொடுத்தால், இறைவனை தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணுவதற்கு நான் யார்?” என்றான்.
18 யூத விசுவாசிகள் இதைக் கேட்டபோது, தொடர்ந்து எவ்வித எதிர்ப்பும் அவர்களுக்கு இருக்கவில்லை, அவர்கள் இறைவனைத் துதித்து, “அப்படியானால் இறைவன் யூதரல்லாத மக்களுக்கும்கூட, வாழ்வு கொடுக்கும் மனந்திரும்புதலைக் கொடுத்திருக்கிறார்!” என்றார்கள்.
19 ஸ்தேவானுடைய மரணத்தின்பின் ஏற்பட்ட துன்புறுத்தலின் காரணமாக, சிதறடிக்கப்பட்டவர்கள் பெனிக்கே, சீப்புரு தீவு, அந்தியோகியாவரை சென்றார்கள். அவர்களோ யூதருக்கு மட்டுமே, இறைவார்த்தையை அறிவித்தார்கள்.
20 ஆயினும் சீப்புரு தீவு, சிரேனே ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களில் சிலர், அந்தியோகியாவுக்குப் போய் கிரேக்கருடன் பேசத்தொடங்கி, கர்த்தராகிய இயேசுவைக்குறித்த நற்செய்தியை அவர்களுக்குச் சொன்னார்கள்.
21 கர்த்தருடைய கரம் அவர்களுடன்கூட இருந்தது. பெருந்தொகையான மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடமாய் திரும்பினார்கள்.
22 இந்தச் செய்தி எருசலேமிலுள்ள திருச்சபையோரின் காதுக்கு எட்டியது; அப்பொழுது அவர்கள் பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள்.
23 அவன் அங்கேபோய்ச் சேர்ந்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இறைவனுடைய கிருபையின் செயல்களைக் கண்டான். அப்பொழுது அவன் மகிழ்ச்சியடைந்து, அவர்கள் அனைவரும் தங்கள் முழு இருதயத்தோடும், கர்த்தருக்கு உண்மையாய் இருக்கவேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தினான்.
24 பர்னபா நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும், விசுவாசத்திலும் நிறைந்தவனுமாக இருந்தான். அங்கே அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.
25 அதற்குப் பின்பு பர்னபா சவுலைத்தேடி தர்சுவிற்குப் போனான்.
26 அவன் சவுலைக் கண்டபோது, அவனை அந்தியோகியாவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தான். எனவே ஒரு வருடமாக பர்னபாவும் சவுலும் அங்குள்ள திருச்சபையுடன் சேர்ந்து, பெருந்தொகையான மக்களுக்கு போதித்தார்கள். அந்தியோகியாவிலேயே முதன்முதலில் சீடர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
27 அந்நாட்களில் சில இறைவாக்கினர் எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
28 அவர்களில் ஒருவனான அகபு என்பவன் எழுந்து நின்று, உலகம் எங்கும் ஒரு கடும் பஞ்சம் ஏற்படப்போகிறது என்று பரிசுத்த ஆவியானவராலே முன்னறிவித்தான். அப்படியே, அது ரோமப் பேரரசன் கிலவுதியுவின் ஆட்சியில் ஏற்பட்டது.
29 சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்றபடி, யூதேயாவில் வாழுகிற சகோதரருக்கு உதவிசெய்யத் தீர்மானித்தார்கள்.
30 பர்னபா, சவுல் என்பவர்கள் மூலமாக அங்குள்ள சபைத்தலைவர்களுக்கு நன்கொடையை அனுப்பி, அவர்கள் இந்த உதவியைச் செய்தார்கள்.
×

Alert

×