English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Acts Chapters

Acts 10 Verses

1 {#1பேதுருவை கொர்நேலியு அழைத்தல் } செசரியாவில் கொர்நேலியு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் இத்தாலியா இராணுவப்படைப் பிரிவில் நூற்றுக்குத் தலைவன்.
2 அவனும், அவன் குடும்பத்தினர் அனைவரும் பக்தியுள்ளவர்களும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவர்களுமாய் இருந்தார்கள். அவன் ஏழைகளுக்குத் தாராளமாய் கொடுக்கிறவனாகவும், ஒழுங்காக இறைவனிடம் மன்றாடுகிறவனாகவும் இருந்தான்.
3 ஒரு நாள் பிற்பகல் மூன்றுமணியளவில், அவன் ஒரு தரிசனம் கண்டான். அவன் அதிலே இறைத்தூதன் ஒருவனை மிகத் தெளிவாகக் கண்டான். அந்தத் தூதன், “கொர்நேலியு!” என்றான்.
4 கொர்நேலியு அவனைப் பயத்துடன் உற்றுப்பார்த்து, “ஆண்டவரே இது என்ன?” என்றான். இறைத்தூதன் பதிலாக, “உனது மன்றாட்டுகளும், ஏழைகளுக்கு நீ கொடுத்த நன்கொடைகளும், இறைவனுக்கு முன்பாக ஒரு நினைப்பூட்டும் காணிக்கையாக வந்திருக்கின்றன.
5 ஆகவே இப்பொழுது சிலரை யோப்பாவுக்கு அனுப்பி, பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கூட்டிவரும்படி சொல்.
6 அவன் தோல் பதனிடும் சீமோனுடன் தங்கியிருக்கிறான், அவனுடைய வீடு கடலோரமாய் இருக்கிறது” என்றான்.
7 தன்னோடு பேசிய இறைவனுடைய தூதன் போனபின்பு, கொர்நேலியு தனது வேலையாட்களில் இருவரையும், தனது ஏவலாட்களில் ஒருவனான பக்தியுள்ள ஒரு படை வீரனையும் அழைத்தான்.
8 அவன் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லி, அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினான்.
9 {#1பேதுருவின் தரிசனம் } அவர்கள் பயணம் செய்து மறுநாள் ஏறத்தாழ மத்தியான வேளையில் யோப்பா பட்டணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பேதுரு வீட்டின் மேல்பகுதிக்கு மன்றாடும்படி போனான்.
10 அவனுக்குப் பசியாய் இருந்தது. அதனால் அவன் எதையாவது சாப்பிட விரும்பினான். ஆனால் உணவு தயாராகிக் கொண்டிருக்கையில் அவன் ஒரு பரவச நிலைக்குள்ளானான்.
11 அப்பொழுது வானம் திறந்திருப்பதையும், பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, பூமியை நோக்கி இறங்கி வருவதையும் அவன் கண்டான்.
12 அதற்குள் எல்லா விதமான நான்கு கால்களையுடைய மிருகங்களும், பூமியிலுள்ள ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருந்தன.
13 அப்பொழுது ஒரு குரல், “பேதுருவே, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது.
14 அதற்குப் பேதுரு, “இல்லை ஆண்டவரே! ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் நான் சாப்பிட்டதில்லை” என்றான்.
15 இரண்டாம் முறையும் அந்தக் குரல் அவனுடன் பேசி, “இறைவன் சுத்தமாக்கியதைத் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே” என்றது.
16 இவ்விதம் மூன்று முறைகள் நடந்தன. பின்பு உடனே அந்த விரிப்புத் துணி மீண்டும் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
17 பேதுரு இந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கொர்நேலியுவினால் அனுப்பப்பட்டவர்கள், சீமோனுடைய வீட்டைத் தேடிவந்து, அதன் கதவருகில் நின்றார்கள்.
18 அவர்கள், “பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரோ?” என்று கேட்டார்கள்.
19 பேதுரு இன்னும் அந்தத் தரிசனத்தைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவனிடம், “சீமோனே, இதோ மூவர் உன்னைத் தேடுகிறார்கள்.
20 எனவே நீ எழுந்து கீழே இறங்கிப்போ. நீ அவர்களுடன் போகத் தயங்காதே, ஏனெனில், நானே அவர்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார்.
21 எனவே பேதுரு இறங்கிப்போய் அவர்களிடம், “நீங்கள் தேடுகிற அந்த மனிதன் நான்தான். நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
22 அதற்கு அவர்கள், “நாங்கள் நூற்றுக்குத் தலைவனான கொர்நேலியுவிடமிருந்து வந்திருக்கிறோம். அவர் நீதிமானும் இறைவனுக்குப் பயந்து நடக்கிற ஒருவர். அவர் எல்லா யூத மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நீர் சொல்வதைக் கேட்கும்படி உம்மை அவர் தன்னுடைய வீட்டிற்கு அழைக்க வேண்டுமென்று ஒரு இறைவனுடைய பரிசுத்த தூதன் அவருக்குச் சொல்லியிருக்கிறார்” என்றார்கள்.
23 அப்பொழுது பேதுரு அவர்களைத் தனது விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்தான். {#1கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு } மறுநாள் பேதுரு அவர்களுடன் யோப்பாவைச் சேர்ந்த சில சகோதரரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போனான்.
24 அடுத்தநாள் அவன் செசரியாவைச் சென்றடைந்தான். கொர்நேலியு அவர்களை எதிர்பார்த்து, தனது உறவினர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஒன்றாய் கூட்டி வைத்திருந்தான்.
25 பேதுரு வீட்டிற்குள் போனதும், கொர்நேலியு அவனைச் சந்தித்து, பயபக்தியுடன் அவனுடைய கால்களில் விழுந்தான்.
26 ஆனால், பேதுரு அவனை எழுந்திருக்கப்பண்ணி, “எழுந்திரு, நானும் ஒரு மனிதனே” என்றான்.
27 அவனுடன் பேசிக்கொண்டே பேதுரு உள்ளே போனபோது, அங்கே மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்ததைக் கண்டான்.
28 பேதுரு அவர்களிடம்: “யூதனொருவன் யூதரல்லாதவருடன் கூடிப்பழகுவதோ, அல்லது அவர்களின் வீட்டிற்குப் போவதோ, எங்கள் யூத சட்டத்திற்கு முரணானது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாரையும் தூய்மையற்றவன் என்றோ, அசுத்தமானவன் என்றோ நான் அழைக்கக் கூடாது என்று இறைவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
29 எனவேதான் நான் அழைக்கப்பட்டபோது, எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இங்கே வந்தேன். என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று நான் இப்பொழுது தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டான்.
30 அப்பொழுது கொர்நேலியு: “நான்கு நாட்களுக்கு முன்பு நான் எனது வீட்டிலே, மாலை மூன்றுமணியளவில் இதே நேரத்தில் மன்றாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று பிரகாசிக்கின்ற உடைகள் உடுத்திய ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான்.
31 அவன் என்னிடம், ‘கொர்நேலியுவே, இறைவன் உன் மன்றாட்டைக் கேட்டார். நீ ஏழைகளுக்குக் கொடுத்த நன்கொடைகளையும் அவர் நினைவில்கொண்டார்.
32 பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிவர, ஆட்களை யோப்பாவுக்கு அனுப்பு. பேதுரு கடலோரமாய் வாழுகிற, தோல் பதனிடும் சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்’ என்றார்.
33 எனவேதான் நான் உடனே உம்மை அழைத்துவர ஆட்களை அனுப்பினேன். நீங்களும் வந்திருப்பது நல்லதே. இங்கே கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படி உமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கேட்கவே இப்பொழுது நாங்கள் அனைவரும் இறைவனுக்கு முன்பாகக் கூடிவந்திருக்கிறோம்” என்றான்.
34 அப்பொழுது பேதுரு பேசத் தொடங்கினான்: “இறைவன் பட்சபாதம் காண்பிக்கிறவர் அல்ல என்பது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது அறிந்திருக்கிறேன்.
35 எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், அவர்கள் இறைவனுக்குப் பயந்து, சரியானதைச் செய்யும்போது, அவர் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்.
36 இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பிய செய்தியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் ஆண்டவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய்ச் சமாதானத்தின் நற்செய்தியை அவர் அறிவித்தார்.
37 யோவான் திருமுழுக்கைப்பற்றிப் பிரசங்கித்தபின், கலிலேயா தொடங்கி யூதேயா முழுவதிலும் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.
38 இறைவன் எவ்விதம் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையாலும் அபிஷேகம் செய்தார் என்பதையும், அவர் எவ்விதம் எங்கும் போய் நன்மை செய்தார் என்பதையும் இறைவன் தம்முடன் இருந்ததால், பிசாசின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருந்த எல்லோரையும் அவர் குணமாக்கினார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
39 “யூதருடைய நாட்டிலும், எருசலேமிலும் இயேசுகிறிஸ்து செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். அவர்கள் இயேசுவை ஒரு மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்தார்கள்.
40 ஆனால் இறைவனோ மூன்றாம் நாளிலே அவரை இறந்தோரிலிருந்து எழுப்பி, எங்களுக்கு உயிருடன் காணப்படச் செய்தார்.
41 அவர் எல்லோருக்கும் காணப்படவில்லை, ஆனால் இறைவனால் ஏற்கெனவே தெரிந்துகொள்ளப்பட்ட சாட்சிகளாகிய நாங்களே அவரைக் கண்டோம். அவர் இறந்தோரில் இருந்து எழுந்தபின்பு, அவருடனே உணவருந்திய நாங்களே அந்த சாட்சிகள்.
42 உயிரோடிருக்கிறவர்களுக்கும் இறந்தோருக்கும் நீதிபதியாகத் தம்மையே இறைவன் நியமித்தார் என்று மக்களுக்குப் பிரசங்கித்து சாட்சி கூறும்படி, இயேசுகிறிஸ்து எங்களுக்குக் கட்டளையிட்டார்.
43 அவரிடம் விசுவாசமாய் இருக்கும் ஒவ்வொருவனும் அவருடைய பெயரினால் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறான் என்று எல்லா இறைவாக்கினரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கிறார்கள்” என்றான்.
44 பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், அந்தச் செய்தியைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
45 பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம் பெற்ற விசுவாசிகள், யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் நன்கொடையாக ஊற்றப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்கள்.
46 ஏனெனில், அவர்கள் வேறு மொழிகளில் பேசுவதையும், இறைவனைத் துதிக்கிறதையும் இவர்கள் கேட்டார்கள். அப்பொழுது பேதுரு அவர்களிடம்,
47 “இவர்கள் தண்ணீரில் திருமுழுக்கு பெறுவதை யாராவது தடைசெய்யலாமா? நாம் பெற்றிருப்பது போலவே, இவர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறார்களே” என்று சொன்னான்.
48 எனவே, இயேசுகிறிஸ்துவின் பெயரிலே அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கும்படி பேதுரு உத்தரவிட்டான். அப்பொழுது அவர்கள் சிலநாட்கள் தங்களுடன் தங்கியிருக்கவேண்டும் என்று பேதுருவைக் கேட்டுக்கொண்டார்கள்.
×

Alert

×