English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Samuel Chapters

2 Samuel 24 Verses

1 யெகோவாவின் கோபம் மறுபடியும் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது, அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, “நீ போய் இஸ்ரயேலரையும், யூதாவையும் கணக்கிடு” என்றார்.
2 எனவே அரசன் யோவாபிடமும் அவனோடிருந்த தளபதிகளிடமும், “நான் சண்டையிடக்கூடிய வீரர்களின் தொகையை அறியும்படிக்குத் தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள இஸ்ரயேலரின் எல்லாக் கோத்திரங்களிடமும் சென்று தொகையைக் கணக்கிடு” என்றான்.
3 ஆனால் யோவாப் அரசனிடம், “என் தலைவனாகிய அரசர் காணும்படி, இறைவனாகிய யெகோவா இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. ஆனால் என் தலைவனாகிய அரசர் ஏன் இப்படியான செயலைச் செய்ய விரும்புகிறீர்?” என்றான்.
4 ஆனாலும், அரசனின் வார்த்தைக்கு யோவாபும், தளபதிகளும் கட்டுப்படவேண்டியதால், இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடும்படி அரசனிடமிருந்து சென்றார்கள்.
5 அவர்கள் யோர்தானைக் கடந்தபின் பள்ளத்தாக்கிலிருந்து போய் பட்டணத்துக்குத் தெற்கிலிருந்து அரோயேருக்கு அருகில் முகாமிட்டார்கள். பின் காத் வழியாகச் சென்று யாசேருக்குப் போனார்கள்.
6 அங்கிருந்து கீலேயாத்திற்கும், தாதீம் ஒத்சி என்னும் பகுதிகளுக்கும், பின் தாண்யாணுக்கும் சென்று சுற்றி சீதோனை நோக்கி வந்தார்கள்.
7 அதன்பின் தீரு என்னும் கோட்டைப் பக்கமாகவும், ஏவியர், கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் சென்றார்கள். கடைசியாக யூதாவின் நெகேவிலுள்ள பெயெர்செபாவுக்குப் போனார்கள்.
8 இப்படியாக முழு நாடெங்கும் சுற்றித்திரிந்து ஒன்பது மாதம் இருபது நாட்களுக்குபின் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.
9 யோவாப் வீரர்களின் எண்ணிக்கையை அரசனுக்கு தெரிவித்தான். இஸ்ரயேலில் வாள் ஏந்தும் வீரர்கள் எட்டு இலட்சம்பேரும், யூதாவில் ஐந்து இலட்சம்பேரும் இருந்தனர்.
10 ஆனாலும் வீரர்களைக் கணக்கிட்டபின் தாவீதின் மனசாட்சி அவனை வாட்டியது. அவன் யெகோவாவிடம், “நான் இப்படிச் செய்தபடியால், பெரும் பாவம் செய்தேன். யெகோவாவே, இப்பொழுது உமது அடியவன் செய்த குற்றத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமான செயலைச் செய்தேன்” என மன்றாடினான்.
11 மறுநாள் அதிகாலையில் தாவீது எழுந்திருப்பதற்கு முன்பு யெகோவாவின் வார்த்தை, தாவீதின் தரிசனக்காரனான காத் என்னும் இறைவாக்கு உரைப்பவனுக்கு வந்தது.
12 அவர், “நீ தாவீதிடம்போய் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா சொல்வது இதுவே: உனக்கு விரோதமாக நான் செயல்படுத்தும்படி மூன்று காரியங்களை உனக்குமுன் வைத்திருக்கிறேன்; அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்’ என்று சொல்” என்றார்.
13 எனவே காத் தாவீதிடம்போய், “உம்முடைய நாட்டில் ஏழு வருடங்கள் [*ஏழு வருடங்கள் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் மூன்று வருடங்கள் என்றுள்ளது.] பஞ்சம் வருவதா? அல்லது பகைவர் உம்மைப் பின்தொடர மூன்று மாதங்கள் நீர் அவர்களுக்கு ஒளிந்து ஓடுவதா? அல்லது உமது தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் வருவதா? எது என யோசனை செய்து, நான் இறைவனிடம் என்ன சொல்லவேண்டுமென உமது தீர்மானத்தை உடனே சொல்லும்” என்றான்.
14 தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன். யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான்.
15 எனவே யெகோவா இஸ்ரயேலில் அன்று காலை தொடங்கி குறிக்கப்பட்ட நாட்கள் முடியும்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார். இதனால் தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள மக்களில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள்.
16 தூதன் எருசலேமையும் அழிப்பதற்குத் தன் கையை ஓங்கியபோது அங்கே நடந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே அவர் மக்களை அழித்த தூதனிடம், “போதும் உன் கையை எடு” என்றார். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்தில் இருந்தார்.
17 யெகோவாவினுடைய தூதனானவர் மக்களைக் கொடிய கொள்ளைநோயினால் வாதிப்பதைத் தாவீது கண்டபோது, அவன் யெகோவாவிடம், “செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும்” என்றான்.
18 அன்றையதினம் காத் தாவீதிடம் சென்று, “நீ எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டு” என்றான்.
19 எனவே தாவீது யெகோவா தனக்கு காத் மூலமாக கட்டளையிட்டபடியே அங்கே போனான்.
20 தாவீதும் அவனுடைய மனிதரும் தன்னிடம் வருவதைக் கண்டபோது, அர்வனா அவர்களுக்கு எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து அரசனை வணங்கினான்.
21 அர்வனா அரசனிடம், “என் தலைவனாகிய அரசர் உம்முடைய அடியவனிடம் வந்த காரியம் என்ன?” எனக் கேட்டான். அதற்குத் தாவீது, “கொடிய கொள்ளைநோய் மக்களைவிட்டு நீங்கும்படிக்கு, நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டுவதற்காக உன்னுடைய சூடடிக்கும் களத்தை விலைக்கு வாங்க வந்தேன்” என்றான்.
22 அதற்கு அர்வனா தாவீதிடம், “என் தலைவனாகிய அரசன் விரும்பியவற்றை எடுத்து பலி செலுத்துவாராக. தகன காணிக்கைக்காக மாடுகளும், விறகுகளுக்காக சூடடிக்கும் பலகைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கின்றன.
23 அரசே, அர்வனாவாகிய நான் இவை எல்லாவற்றையும் உமக்குக் கொடுக்கிறேன். உமது இறைவனாகிய யெகோவா உம்மை தயவாக ஏற்றுக்கொள்வாராக” என்றான்.
24 அதற்கு அரசன் அர்வனாவிடம், “வேண்டாம். நான் இதற்குரிய பணத்தைக் கொடுக்கவேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன். என் இறைவனாகிய யெகோவாவுக்கு நான் பணம் கொடுக்காமல் இலவசமாக பெற்ற தகன காணிக்கையை செலுத்தமாட்டேன்” என்றான். எனவே தாவீது சூடடிக்கும் களத்தையும், மாடுகளையும், ஐம்பது சேக்கல் வெள்ளியைக் கொடுத்து வாங்கினான்.
25 அங்கே தாவீது யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அப்பொழுது நாட்டிற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலுக்கு யெகோவா பதிலளித்தார், இஸ்ரயேலின்மேல் வந்த கொள்ளைநோய் நின்றுபோனது.
×

Alert

×