English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

2 Samuel Chapters

2 Samuel 21 Verses

1 தாவீதின் ஆட்சிக்காலத்தில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு பஞ்சம் உண்டானது. எனவே தாவீது யெகோவாவின் முகத்தைத் தேடினான். அப்பொழுது யெகோவா, “சவுல் கிபியோனியரைக் கொலைசெய்தபடியால் அவனுக்காகவும், இரத்தக்கறைபடிந்த அவன் குடும்பத்தாருக்காகவுமே இப்பஞ்சம் ஏற்பட்டது” என்றார்.
2 அப்பொழுது தாவீது அரசன் கிபியோனியரை அழைப்பித்து அவர்களோடு பேசினான். கிபியோனியர் இஸ்ரயேலைச் சேர்ந்தவர்களல்ல; ஆனால் அவர்கள் எமோரியரில் மீதமுள்ளவர்கள்; இஸ்ரயேலர் அவர்களை அழிக்காமல் விடுவதாக வாக்களித்திருந்தும், சவுல் இஸ்ரயேல்மேலும் யூதாமேலும் கொண்ட வைராக்கியத்தால் அவர்களை அழித்தொழிக்க முயற்சி செய்தான்.
3 தாவீது கிபியோனியரிடம், “உங்களுக்காக நான் என்ன செய்யவேண்டும்? யெகோவாவினுடைய உரிமைச்சொத்தான நாட்டை நீங்கள் ஆசீர்வதிக்கும்படி நான் என்ன இழப்பீடு செய்யலாம்?” என்று கேட்டான்.
4 அதற்குக் கிபியோனியர், “சவுலிடமோ, அவன் குடும்பத்தாரிடமோ வெள்ளியையும், தங்கத்தையும் கேட்பதற்கு எங்களுக்கு உரிமையில்லை. இஸ்ரயேலில் ஒருவனையும் கொலைசெய்யவும் எங்களுக்கு உரிமையில்லை” என்றார்கள். அதற்குத் தாவீது, “நான் உங்களுக்காக என்ன செய்யவேண்டும்?” என்றான்.
5 அதற்கு அவர்கள் அரசனிடம், “நாங்கள் இஸ்ரயேல் நாட்டில் எவ்விடத்திலும் நிலைத்திருக்காதபடி, சவுல் எங்களில் அதிகம் பேரைக் கொலைசெய்து எங்களுக்கு விரோதமாய் சதியாலோசனை செய்து எங்களை அழித்தான்.
6 எனவே அவனுடைய சந்ததியில் ஏழு ஆண் மக்களை எங்களுக்குக் கொடுக்கவேண்டும். நாங்கள் அவர்களைக் கொலைசெய்து யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட சவுலின் ஊரான கிபியாவிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களை வெளியே எறிவோம்” என்றார்கள். அதற்கு அரசன், “அவர்களை உங்களிடம் கொடுப்பேன்” என்றான்.
7 ஆனாலும் தாவீது தானும் சவுலின் மகன் யோனத்தானும் யெகோவா முன்னிலையில் செய்துகொண்ட ஆணையின் நிமித்தம், சவுலின் பேரனும் யோனத்தானின் மகனுமான மேவிபோசேத்தைத் தப்பவிட்டான்.
8 ஆனால் ஆயாவின் மகள் ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற மகன்களான அர்மோனி, மற்றொரு மேவிபோசேத் ஆகிய இருவரையும்; அத்துடன் சவுலின் மகள் மேராப் மேகோலாத்தியனான பர்சிலாயின் மகன் ஆதரியேலுக்கு பெற்ற ஐந்து மகன்களையும் தெரிந்தெடுத்து,
9 அவர்களைக் கிபியோனியரிடம் கொடுத்தான். கிபியோனியர் அவர்களைக் கொலைசெய்து யெகோவாவுக்குமுன் இருந்த குன்றின்மேல் எறிந்தார்கள். அந்த ஏழு பேரும் ஒரேயடியாய் விழுந்தார்கள். வாற்கோதுமை அறுவடையின் தொடக்கத்தின் முதல் நாட்களிலேயே இக்கொலை நடந்தது.
10 ஆயாவின் மகள் ரிஸ்பாள் ஒரு துக்கவுடையை தனக்கென கற்பாறையின்மேல் விரித்தாள். அவள் அறுவடை காலம் முடிந்து உடல்களின்மேல் மழை பெய்யும்வரை உடல்களை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ, இரவில் காட்டு விலங்குகளோ தொடவிடவில்லை.
11 சவுலின் மறுமனையாட்டியான ஆயாவின் மகள் ரிஸ்பாள் இப்படிச் செய்ததை தாவீதுக்கு அறிவித்தார்கள்.
12 அதை அறிந்த தாவீது கீலேயாத்திலுள்ள யாபேஸ் குடிமக்களிடம் சென்று சவுலின், அவன் மகன் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டுவந்தான். பெலிஸ்தியர் சவுலை கில்போவாவிலே வெட்டிக்கொன்று, பெத்ஷான் நகர சதுக்கத்திலே தூக்கிலிட்டிருந்தார்கள். அதை அங்கிருந்து இரகசியமாக கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார் கொண்டுபோயிருந்தார்கள்.
13 அங்கிருந்து தாவீது, சவுலின் அவன் மகன் யோனத்தானுடைய எலும்புகளையும், அத்துடன் கொலைசெய்யப்பட்டு எறியப்பட்ட ஏழு பேரின் சேர்க்கப்பட்ட எலும்புகளையும் கொண்டுவந்தான்.
14 தாவீதின் மனிதர் சவுலின், யோனத்தானின் எலும்புகளை, பென்யமீன் நாட்டு சேலா ஊரிலுள்ள சவுலின் தகப்பன் கீஷின் கல்லறையில் அடக்கம் செய்து, அரசன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்தார்கள். அதன்பின்பே இறைவன் நாட்டிற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டு அதற்கு பதிலளித்தார்.
15 பெலிஸ்தியருக்கும், இஸ்ரயேலருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. தாவீது தன் வீரர்களுடன் பெலிஸ்தியரை எதிர்த்து யுத்தம்பண்ணச் சென்றான். தாவீது மிகவும் களைப்படைந்தான்.
16 அப்பொழுது இஸ்பிபெனோப் என்னும் இராட்சத வழித்தோன்றலைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவனுடைய வெண்கல ஈட்டியின் எடை முந்நூறு சேக்கலாயிருந்தது. அவன் ஒரு புது வாளுடன், “தாவீதைக் கொல்லுவேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
17 அதைக்கண்ட செருயாவின் மகன் அபிசாய் தாவீதுக்கு உதவியாக வந்து அந்த பெலிஸ்தியனான இராட்சதனை அடித்துக் கொன்றான். இதனால் தாவீதின் மனிதர் அவனிடம், “இஸ்ரயேலின் தீபம் அணைந்து போகாதபடி நீர் இனி ஒருபோதும் எங்களோடு யுத்தத்திற்கு வரவேண்டாம்” என ஆணையிட்டுச் சொன்னார்கள்.
18 சிறிது காலத்திற்குப்பின் கோப் என்னும் இடத்தில் பெலிஸ்தியருடன் மற்றொரு யுத்தம் நடந்தது. அப்பொழுது ஊஷாத்தியனான சிபெக்காய் என்பவன் இராட்சத வழித்தோன்றலில் வந்த சாப் என்பவனைக் கொன்றான்.
19 கோப் என்ற இடத்தில் பெலிஸ்தியரோடு இன்னொருமுறை சண்டை நடந்தது. பெத்லெகேமியனான யாரெயொர்கிமின் மகன் எல்க்கானான், கித்தியனான கோலியாத்தின் சகோதரனைக் கொன்றான். அந்த எதிரியின் ஈட்டி நெசவுத்தறி மரத்தைப்போல் பெரியதாயிருந்தது.
20 காத்தில் நடந்த மற்றொரு போரில் பெருத்த சரீரமுடைய ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய கைகால்கள் ஒவ்வொன்றிலும் ஆறு ஆறு விரல்களாக இருபத்து நான்கு விரல்கள் இருந்தன. இவனும் இராட்சத வழித்தோன்றலைச் சேர்ந்தவன்.
21 இவன் இஸ்ரயேலை நிந்தித்தபோது, தாவீதின் சகோதரனான சிமெயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொலைசெய்தான்.
22 இவர்கள் நான்குபேரும் காத் ஊரிலுள்ள இராட்சத சந்ததிகள், அவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய மனிதர்களின் கைகளினாலும் கொல்லப்பட்டார்கள்.
×

Alert

×