English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

2 Samuel Chapters

2 Samuel 17 Verses

1 அகிதோப்பேல் அப்சலோமிடம், “நான் பன்னிரண்டாயிரம்பேரைச் சேர்த்துக்கொண்டு இன்றிரவே புறப்பட்டு தாவீதைப் பிடிப்பதற்கு பின்தொடர்ந்து செல்ல என்னை விடும்.
2 அவன் களைத்து பெலனற்றிருக்கும்போது அவனை தாக்குவேன்; அவனைப் பயங்கரமாக தாக்கும்போது, அவனோடிருக்கும் மக்களனைவரும் தப்பி ஓடுவார்கள்; நான் அரசனைமட்டும் கொல்லுவேன்.
3 மக்கள் அனைவரையும் உம்மிடம் கொண்டுவருவேன். நீர் தேடும் மனிதனின் மரணத்தின் மூலமாக மக்களனைவரும் உம்மிடம் வருவார்கள். அவர்களுக்கு தீங்கு நேரிடாது” என்று சொன்னான்.
4 அவனுடைய இந்தத் திட்டம் அப்சலோமுக்கும் இஸ்ரயேலரின் முதியவர்களுக்கும் சிறந்ததாகக் காணப்பட்டது.
5 ஆனால் அப்சலோம் அவர்களிடம், “அர்கியனான ஊசாயையும் அழைத்து அவன் சொல்வதையும் கேட்போம்” என்றான்.
6 ஊசாய் அவ்விடம் வந்தபோது, அப்சலோம் அவனிடம் அகிதோப்பேல் சொன்னதைச் சொல்லி, “இதன்படி செய்யலாமா? அல்லது இதைப்பற்றி உன்னுடைய ஆலோசனை என்ன?” என்று கேட்டான்.
7 அதற்கு ஊசாய் அப்சலோமிடம் சொன்னதாவது: “அகிதோப்பேல் இம்முறை சொன்ன ஆலோசனை நல்லதல்ல.
8 நீர் உமது தகப்பனைப்பற்றியும், அவருடனிருக்கும் மனிதரைப்பற்றியும் நன்கு அறிவீர். அவர்கள் சிறந்த போர்வீரர்கள்; இப்பொழுதோ, தன் குட்டிகளைப் பறிகொடுத்த மூர்க்கமான கரடிகளைப்போல் பயங்கரமானவர்களாய் இருக்கிறார்கள். அத்துடன் உமது தகப்பன் அனுபவமிக்க போர்வீரன். அவர் படைகளுடன் இரவில் தங்கமாட்டார்.
9 இப்பொழுதும் அவர் ஒரு குகையிலோ அல்லது வேறு எங்காவது ஓரிடத்திலோ ஒளிந்திருப்பார். அவர் உங்கள் படைகளை முதலாவதாகத் தாக்கினால், அதைக் கேள்விப்படும் எவனும், ‘அப்சலோமைப் பின்பற்றிய வீரர்களுக்கு அழிவு ஏற்பட்டது’ என்பான்.
10 அப்போது சிங்கத்தின் இருதயத்தைப்போன்ற இருதயமுடைய துணிவுள்ள உமது எந்த வீரனும் பயத்தினால் தைரியமிழப்பான். ஏனெனில் உமது தந்தை மாவீரன் என்பதையும், அவரோடிருப்பவர்கள் சிறந்த வீரமுள்ளவர்கள் என்பதையும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.
11 “எனவே நான் சொல்லும் ஆலோசனை என்னவெனில், தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள கடற்கரை மணலைப்போல் திரளான இஸ்ரயேல் மக்களனைவரும் ஒன்றுகூடி உம்மிடம் வரட்டும். நீர் தலைமைதாங்கி போர்க்களத்திற்கு அவர்களை நடத்திச் செல்லவேண்டும்.
12 அப்பொழுது நாங்கள் அவரை எங்கு கண்டாலும், அவரைத் தாக்கி பனி பூமியில் விழுவதுபோல் அவர்மேல் விழுவோம். அவ்வாறு செய்தால் தாவீதோ அல்லது அவரது மனிதரில் ஒருவரோ உயிரோடு தப்பமாட்டார்கள்.
13 தாவீது பின்வாங்கி ஒரு பட்டணத்திற்குள் புகுந்தால், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் கயிறுகளைக் கொண்டுவந்து பட்டணத்தைக் கட்டி இழுத்து அதில் ஒரு துண்டும் காணப்படாமல் போகும்வரை, பள்ளத்தாக்கில் தள்ளுவோம்” என்றான்.
14 அப்பொழுது, “அப்சலோமும் இஸ்ரயேல் மக்களனைவரும் அகிதோப்பேலின் ஆலோசனையைப் பார்க்கிலும், அர்கியனாகிய ஊசாயின் ஆலோசனை சிறந்தது” என்றார்கள். யெகோவா அப்சலோமுக்குத் தீங்கு வரப்பண்ணுவதற்காக, அகிதோப்பேலின் நல்ல ஆலோசனையை பயனற்றதாகச் செய்யத் தீர்மானித்திருந்தார்.
15 அப்பொழுது ஊசாய் ஆசாரியர்களான சாதோக், அபியத்தார் என்பவர்களிடம், “அகிதோப்பேல் அப்சலோமுக்கும், இஸ்ரயேல் முதியவர்களுக்கும் இன்ன இன்னபடி செய்யவேண்டும் என ஆலோசனை கூறியிருக்கிறான். நானோ, அப்படியல்ல இப்படி செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறேன்.
16 ஆகையால் நீங்கள் தாவீதிடம், ‘இன்று இரவு பாலைவன துறைமுகத்தில் தங்காமல் அவ்விடத்தைவிட்டு தாமதிக்காமல் போய்விடுங்கள். போகத் தவறினால் அரசரும், அவரோடிருப்பவர்களும் அழிக்கப்படுவார்கள்’ என்ற செய்தியை உடனே அனுப்புங்கள்” என்றான்.
17 யோனத்தானும், அகிமாசும் தங்கள் பட்டணத்திற்குள் வந்துபோயிருந்தால், யாராவது பார்த்துவிடுவார்கள் என்று பயந்து, அவர்கள் என்ரொகேல் என்னும் இடத்திலேயே தங்கியிருந்தார்கள். ஒரு பணிப்பெண் போய் அவர்களுக்கு செய்திகளைச் சொல்ல, அவர்கள் அச்செய்திகளை அரசன் தாவீதிடம் சொல்லவேண்டும் என்பதும் திட்டமாயிருந்தது.
18 ஆனால் அவர்களை ஒரு வாலிபன் கண்டு அதை அப்சலோமுக்குப் போய்ச் சொன்னான். உடனே அவர்கள் இருவரும் அவ்விடத்தைவிட்டு புறப்பட்டு பகூரிமிலுள்ள ஒரு மனிதனுடைய வீட்டிற்குப் போனார்கள். அவன் வீட்டின் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. அதற்குள் அவர்கள் இறங்கினார்கள்.
19 அவ்வீட்டுக்காரனின் மனைவி ஒரு துணியை எடுத்துக் கிணற்றின் வாயின்மேல் விரித்து அதன்மேல் தானியத்தைக் காயவைப்பதுபோல் பரப்பி வைத்தாள். அதனால் அவர்கள் கிணற்றுக்குள் இருந்தது யாருக்கும் தெரியாதிருந்தது.
20 அப்போது அப்சலோமின் மனிதர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து, “அகிமாசும், யோனத்தானும் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “அவர்கள் ஆற்றைக் கடந்து போய்விட்டார்கள்” என்றாள். மனிதர் அவர்களைத் தேடி ஒருவரையும் காணாததால் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
21 அந்த மனிதர் போனபின் அவர்கள் இருவரும் கிணற்றை விட்டு வெளியேறி, தாவீது அரசனுக்குச் செய்தியை அறிவிக்கும்படி போனார்கள். அவர்கள் போய் தாவீதிடம், “நீங்கள் உடனே புறப்பட்டு ஆற்றைக் கடந்து அப்பக்கமாகப் போங்கள்; அகிதோப்பேல் உங்களுக்கு விரோதமாய் இந்தந்த விதமாய் ஆலோசனை கூறியிருக்கிறான்” என்றார்கள்.
22 எனவே தாவீதும் அவனோடிருந்த மக்களனைவரும் புறப்பட்டு யோர்தான் ஆற்றை இரவிலே கடந்தார்கள். பொழுது விடியும் முன்பே யோர்தானைக் கடக்காதவர்கள் ஒருவரும் இருக்கவில்லை.
23 தன் ஆலோசனையின்படி ஒன்றும் செய்யப்படாததைக் கண்ட அகிதோப்பேல் தன் கழுதைக்குச் சேணமிட்டு அதில் ஏறி தன் சொந்த பட்டணத்திலுள்ள வீட்டிற்குப் போகப் புறப்பட்டான். அங்கே தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்கு செய்தபின் தனக்குத்தானே தூக்குப் போட்டுச் செத்தான். அவனை அவன் தகப்பனின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
24 அப்பொழுது தாவீது மக்னாயீமுக்குப் போனான். அப்சலோமோ இஸ்ரயேல் மக்களனைவருடனும் யோர்தான் நதியைக் கடந்தான்.
25 அப்சலோம் யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத் தலைவனாக நியமனம் செய்தான். அமாசா இஸ்மயேலனான [*சில எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இஸ்ரயேலனான என்றுள்ளது.] எத்திரா என்பவனின் மகன்; எத்திரா நாகாஷின் மகளும், யோவாபின் தாயும், செருயாவின் சகோதரியுமான அபிகாயிலை திருமணம் செய்திருந்தான்.
26 இஸ்ரயேல் மக்களும், அப்சலோமும் கீலேயாத்தில் முகாமிட்டிருந்தார்கள்.
27 தாவீது மக்னாயீமுக்கு வந்துபோது, அம்மோனிய நாட்டு ரப்பா இராபாத் ஊரைச்சேர்ந்த நாகாஷின் மகன் சோபியும், லோதேபார் ஊரைச்சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கிலேத்தியனுமான பர்சிலாயும் தாவீதிடம் வந்தார்கள்.
28 அவர்கள் வரும்போது படுக்கைகளையும், கிண்ணங்களையும், மண்பாத்திரங்களையும் கொண்டுவந்தார்கள். மேலும் அவர்கள் கோதுமை, வாற்கோதுமை, வறுத்த தானியம், பயறுவகை, பருப்பு வகை,
29 தேன், தயிர், செம்மறியாடுகள், பசுவின் பால்கட்டிகள் ஆகியவற்றை தாவீதும், அவனுடைய மக்களும் சாப்பிடுவதற்கென கொண்டுவந்தார்கள். ஏனெனில் பாலைவனத்தில் மக்கள் பசியும், களைப்பும், தாகமும் அடைந்திருப்பார்கள் என அவர்கள் எண்ணினார்கள்.
×

Alert

×