English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

2 Kings Chapters

2 Kings 8 Verses

1 எலிசா தான் உயிரோடு எழுப்பின பையனின் தாயிடம், “நீ உன் குடும்பத்தோடு இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, வாழக்கூடிய வேரிடத்தில் போய்த் தங்கியிரு. யெகோவா இஸ்ரயேல் நாட்டில் ஒரு பஞ்சத்தை வரச்செய்வார். அது ஏழு வருடங்களுக்கு நீடித்திருக்கும்” என்று சொல்லியிருந்தான்.
2 இறைவனுடைய மனிதன் கூறியபடியே செய்ய அவள் ஆயத்தப்பட்டாள். அவளும், அவளுடைய குடும்பமும், பெலிஸ்தியருடைய நாட்டுக்குப் போய் அங்கே ஏழு வருடங்கள் தங்கியிருந்தார்கள்.
3 குறிப்பிட்ட அந்த ஏழு வருடங்கள் முடிந்தபின் பெலிஸ்தியருடைய நாட்டிலிருந்து அவள் திரும்பிவந்து தன் வீட்டையும், நிலத்தையும் மீட்டுக்கொள்வதற்காக அரசனுடன் முறையிடும்படிச் சென்றாள்.
4 இந்த நேரத்தில் அரசன் இறைவனின் மனிதனுடைய வேலைக்காரனான கேயாசியிடம் பேசிக்கொண்டிருந்தான். அவன் கேயாசியைப் பார்த்து, “எலிசா செய்த எல்லா மகிமையான காரியங்களையும் எனக்குச் சொல்லு” என்று கேட்டான்.
5 அப்பொழுது கேயாசி, இறந்த பையனை எலிசா எப்படி திரும்பவும் உயிர்ப்பித்தார் என்பதைக் கூறிக்கொண்டிருந்த அதேவேளையில், இறந்த பையனின் தாயே தன் வீட்டையும், நிலத்தையும் மீட்டுக்கொள்வதற்கு முறையிடும்படி வந்தாள். அப்பொழுது கேயாசி, “என் தலைவனாகிய அரசனே, இவள் தான் நான் சொன்ன பெண். இவளுடைய மகனைத்தான் எலிசா உயிர்ப்பித்தான்” என்றான்.
6 அரசன் அதைப்பற்றி அந்தப் பெண்ணிடம் கேட்க அவள் தன் கதையைக் கூறினாள். அப்பொழுது அரசன் தன் அதிகாரிகளில் ஒருவனிடம், “இவள் இந்த நாட்டைவிட்டுச் சென்றநாளிலிருந்து, இன்றுவரை அவளுடைய விளைநிலத்தின் வருமானம் உட்பட, அவளுடைய உடைமைகள் யாவற்றையும் திரும்பக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டான்.
7 எலிசா தமஸ்குவுக்குப் போனான். அங்கு சீரிய அரசன் பெனாதாத் வியாதியாயிருந்தான். “இறைவனுடைய மனிதன் இவ்வளவு தூரத்துக்குத் தம்மிடம் வந்திருக்கிறார்” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது.
8 அப்பொழுது அரசன், ஆசகேலை [*இவர் அரச அதிகாரிகளில் ஒருவராய் இருக்கவேண்டும்.] அழைத்து, “நீ ஒரு அன்பளிப்பை எடுத்துக்கொண்டு, இறைவனுடைய மனிதனைச் சந்திக்கப் போ. அவன்மூலம் யெகோவாவிடம் ஆலோசனை கேட்டு என்னுடைய வியாதியிலிருந்து நான் சுகமடைவேனா என்று அறிந்து வா” என்றான்.
9 அப்படியே ஆசகேல் நாற்பது ஒட்டகங்கள் சுமக்கும் பொதிகளில், தமஸ்குவில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த பொருட்களை அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு எலிசாவைச் சந்திக்கப் போனான். அவன் எலிசாவுக்கு முன்னால் போய் நின்று, “சீரிய அரசனான உம்முடைய மகன் பெனாதாத், ‘வியாதியிலிருந்து நான் சுகமாவேனா?’ என்று உம்மிடம் கேட்கும்படி என்னை அனுப்பினான்” என்றான்.
10 அதற்கு எலிசா, “நீ நிச்சயமாகச் சுகமாவாய் என்று அவனிடம் போய்ச் சொல். ஆனால் அவன் கட்டாயம் இறப்பான் என்றே யெகோவா எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று கூறினான்.
11 அதன்பின் எலிசா ஆசகேலை கண் இமைக்காமல் அவன் வெட்கமடையும்வரை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு இறைவனின் மனிதன் அழத்தொடங்கினான்.
12 அப்போது ஆசகேல், “என் தலைவனே, நீர் ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “இஸ்ரயேலருக்கு நீ செய்யப்போகும் எல்லாத் தீமைகளையும் நான் அறிவேன். அவர்களுடைய அரணான இடங்களை அழித்துவிடுவாய். அவர்களுடைய வாலிபரை வாளால் கொலைசெய்வாய். அவர்களுடைய குழந்தைகளை நிலத்தில் மோதியடிப்பாய். அவர்களுடைய கர்ப்பிணிகளைக் கிழித்து அழித்துப்போடுவாய்” என்று கூறினான்.
13 அதற்கு ஆசகேல், “நாயைப்போன்ற உமது அடியவன் இப்படியான ஒரு பெரிய காரியத்தைச் சாதிப்பது எப்படி?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “நீ சீரிய நாட்டுக்கு அரசனாவாய் என்று யெகோவா எனக்குக் காண்பித்தார்” என்றான்.
14 ஆசகேல் எலிசாவிடமிருந்து மீண்டும் தன் எஜமானிடம் போனான். அப்போது பெனாதாத் அவனிடம், “எலிசா உன்னிடம் என்ன சொன்னான்?” என்று கேட்டான். அதற்கு ஆசகேல் பதிலாக, “நீர் நிச்சயமாகச் சுகமாவீர் என்று சொன்னான்” என்றான்.
15 ஆனால் அடுத்தநாள் ஆசகேல் ஒரு தடித்த துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்து அரசனுடைய முகத்தில் போட்டதினால் அவன் இறந்துபோனான். ஆசகேல் அவனுக்குப்பின் அரசனானான்.
16 இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராம் இஸ்ரயேலை அரசாண்ட ஐந்தாம் வருடத்தில் யெகோராம் யூதாவுக்கு அரசனானான். அவன் யோசபாத்தின் மகன்.
17 அவன் அரசனானபோது முப்பத்தி இரண்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் ஆட்சிசெய்தான்.
18 அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் செய்தான். ஏனெனில் அவன் ஆகாபின் மகளைத் திருமணம் செய்திருந்தான். அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.
19 இருந்தாலும், யெகோவா தமது அடியவனாகிய தாவீதுக்காக யூதாவை அழிக்க விரும்பவில்லை. தமது சமுகத்தில் எப்பொழுதும் தாவீதுக்கும், அவன் குடும்பத்திற்கும் குலவிளக்கை அரசாட்சியில் என்றென்றைக்கும் வைத்திருப்பேன் என்று அவனுக்கு வாக்குப்பண்ணியிருந்தார்.
20 யெகோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவுக்கு எதிராகக் கலகம்செய்து தங்களுக்கென ஒரு அரசனை ஏற்படுத்திக்கொண்டனர்.
21 அதனால் யோராம் தன் எல்லா தேர்களோடும் சாயீருக்குப் போனான். ஆனால் ஏதோமியர் அவனையும், அவனுடைய தேர்ப்படைத் தளபதிகளையும் சுற்றி வளைத்துக்கொண்டனர். ஆயினும் அவன் இரவோடு இரவாக ஏதோமியரை முறியடித்து, அவர்களிடமிருந்து தப்பி ஓடினான். அவனுடைய இராணுவவீரரோ தங்கள் வீடுகளுக்கு ஓடிவிட்டனர்.
22 இன்றுவரை இருக்கிறதுபோல ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் லிப்னாவும் கலகம் செய்தது.
23 யோராமின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய எல்லாச் செயல்களும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
24 இதன்பின் யோராம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, அவர்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகனான அகசியா அவனுடைய இடத்தில் அரசனானான்.
25 இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராமின் ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தில், யூதாவில் யெகோராமின் மகன் அகசியா தன் ஆட்சியைத் தொடங்கினான்.
26 அகசியா அரசனானபோது இருபத்தி இரண்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஒரு வருடம் ஆட்சிசெய்தான். இஸ்ரயேலின் அரசன் உம்ரியின் பேத்தியான அத்தாலியாள் என்பவளே இவனது தாய்.
27 இவன் ஆகாப் வீட்டாரின் வழியில் நடந்து, யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். ஆகாபின் வீட்டாரோடு திருமணத்தின்மூலம் சம்பந்தம் கலந்ததால், அவன் ஆகாபின் வீட்டாரைப்போலவே நடந்தான்.
28 அகசியா ஆகாபின் மகனான யோராமுடன் சேர்ந்து ராமோத் கீலேயாத்தில் சீரிய அரசன் ஆசகேலுடன் யுத்தம் செய்வதற்காகப் போனான். ஆனால் சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
29 எனவே சீரிய அரசனான ஆசகேலுடன் ராமோத்தில் [†ராமோத்தில் என்பது எபிரெயத்தில் ராமாவின் மறுபெயர்] செய்த யுத்தத்தில் சீரியரினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைச் சுகப்படுத்துவதற்காக, யோராம் அரசன் யெஸ்ரயேலுக்குத் திரும்பினான். அப்பொழுது ஆகாபின் மகன் யோராம் காயப்பட்டிருந்ததால், யூதாவின் அரசனான யெகோராமின் மகன் அகசியா, அவனைப் பார்ப்பதற்கு யெஸ்ரயேலுக்குப் போனான்.
×

Alert

×