English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

2 Kings Chapters

2 Kings 7 Verses

1 எலிசா அவனைப் பார்த்து, “யெகோவாவின் வார்த்தையைக் கவனமாகக் கேளுங்கள். யெகோவா சொல்வது இதுவே: நாளைக்கு இதே நேரத்திலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் சமாரியாவின் வாசலில் குறைந்த விலைக்குத் தாராளமாகக் கிடைக்கும் என்கிறார்” என்றான்.
2 அப்பொழுது அரசனைத் தன் கையில் தாங்கிக்கொண்டிருந்த அதிகாரி எலிசாவிடம், “யெகோவா வானத்தின் மதகுகளைத் திறந்தாலும் இது நடக்கக்கூடிய செயலா?” என்று கேட்டான். எலிசா அதற்குப் பதிலாக, “நீ உன் கண்களினாலே அதைக் காண்பாய். ஆனால், அதில் எதையும் சாப்பிடமாட்டாய்” என்று கூறினான்.
3 அந்த வேளையில் நகரத்தின் நுழைவாசலில் நான்கு குஷ்டரோகிகள் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணம்வரை ஏன் இங்கேயே இருக்கவேண்டும்.
4 நாங்கள் நகரத்துக்குள் போனாலும் அங்கும் பஞ்சம் இருப்பதால் அங்கேயும் சாவோம். இங்கேயிருந்தாலும் நாம் இறப்போம். ஆகவே நாம் சீரியருடைய முகாமுக்குப்போய் சரணடைவோம். அவர்கள் நம்மைத் தப்பவிட்டால் நாம் வாழ்வோம். நம்மைக் கொல்வார்களானால் நாம் சாவோம்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
5 அப்படியே அன்று மாலை பொழுது மறையும் நேரத்தில் எழுந்து, சீரியருடைய முகாமை நோக்கிப் போனார்கள். அவர்கள் முகாமின் எல்லையை நெருங்கியபோது ஒரு மனிதனும் அங்கு இருக்கவில்லை.
6 ஏனென்றால் முகாமிலிருந்த சீரிய இராணுவத்தினருக்கு, யெகோவா குதிரைகள், தேர்களின் சத்தத்தையும், ஒரு பெரிய இராணுவத்தின் சத்தத்தையும் கேட்கப்பண்ணினார். அதனால் சீரிய இராணுவத்தினர் ஒருவரையொருவர் பார்த்து, “கேளுங்கள், இஸ்ரயேல் அரசன் எங்களைத் தாக்குவதற்கு எங்களுக்கு எதிராக ஏத்தியரையும், எகிப்திய அரசர்களையும் கூலிக்கு அமர்த்தியிருக்கிறான்” என்றார்கள்.
7 எனவே பொழுது மறையும் நேரத்தில் தங்கள் கூடாரங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும், அப்படியே விட்டுவிட்டு தங்கள் உயிர்களைக் காப்பாற்ற முகாம்களைவிட்டு ஓடிவிட்டார்கள்.
8 குஷ்டரோகிகள் முகாமின் எல்லைக்கு வந்துசேர்ந்து ஒரு கூடாரத்துக்குள் போனார்கள். அங்கே சாப்பிட்டுக் குடித்து அங்கிருந்த வெள்ளியையும், தங்கத்தையும், உடைகளையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தார்கள். பின் திரும்பிவந்து வேறொரு கூடாரத்துக்குள் போனார்கள். அங்கிருந்தும் சில பொருட்களை எடுத்துக்கொண்டுபோய் அவற்றையும் ஒளித்துவைத்தார்கள்.
9 அதன்பின்பு ஒருவரையொருவர் நோக்கி, “நாம் செய்வது பிழை. இது ஒரு நல்ல செய்திக்குரிய நாளாயிருந்தும், இதை நாம் நமக்குள்ளேயே வைத்திருக்கிறோமே. பொழுது விடியும்வரை காத்திருந்தால் நிச்சயம் தண்டனை நம்மேல் வரும். நாம் உடனேயே போய் இந்தச் செய்தியை அரண்மனைக்கு அறிவிப்போம்” என்று பேசிக்கொண்டார்கள்.
10 அவ்வாறே அவர்கள் போய் நகர வாசல் காவலாளரைக் கூப்பிட்டு, “நாங்கள் சீரியருடைய முகாமுக்குப் போயிருந்தோம். அங்கு ஒருவரும் இல்லை. ஒரு மனித சத்தமும் கேட்கப்படவுமில்லை. குதிரைகளும், கழுதைகளும் கட்டப்பட்டபடியே இருந்தன. கூடாரங்களும் இருந்தபடியே விடப்பட்டிருந்தன” என்றார்கள்.
11 இதைக் கேட்ட வாசல் காவலாளர்கள் இச்செய்தியை அரண்மனையில் உள்ளோரிடம் அறிவித்தார்கள்.
12 இரவிலே அரசன் எழுந்து தன் அதிகாரிகளிடம், “சீரியர் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் பட்டினியாக இருப்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் முகாமைவிட்டு, பதுங்கித் தாக்குவதற்காக வெளியே சென்றிருக்க வேண்டும். மேலும், ‘இஸ்ரயேலர் நகரத்துக்கு வெளியே நிச்சயமாய் வருவார்கள். அப்போது அவர்களை உயிரோடு பிடித்து, நகரத்துக்குள்ளே போவோம்’ என்றும் நினைத்திருப்பார்கள்” என்று கூறினான்.
13 அரசனுடைய அதிகாரிகளில் ஒருவன் அதற்குப் பதிலாக, “நகரத்தில் மீதியாயுள்ள ஐந்து குதிரைகளையும் சிலர் எடுத்துக்கொண்டு அங்கே போகட்டும். அவர்கள் இறந்தாலும் என்ன? இங்கிருந்து மீந்திருக்கும் இஸ்ரயேலருக்கு நடப்பது தான் அவர்களுக்கும் நடக்கும். ஆகவே என்ன நடந்ததென்பதை அறிந்துவரும்படி நாம் அவர்களை அனுப்புவோம்” என்றான்.
14 அவ்வாறே அவர்கள் இரண்டு தேர்களையும், குதிரைகளையும் தெரிந்தெடுத்தார்கள். அரசன் தேரோட்டிகளிடம், “நீங்கள் போய் என்ன நடந்தது என்று பார்த்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். அவர்களைச் சீரிய இராணுவத்தைப் பின்தொடரும்படி அனுப்பினான்.
15 அவர்கள் யோர்தான்வரை பின்தொடர்ந்து சென்றார்கள். சீரியர் பயந்து தலைதெறிக்க ஓடியபோது, அவர்களுடைய உடைகளும், மற்றும் ஆயுதங்களும், வழியெல்லாம் வீசப்பட்டுக் கிடந்ததைக் கண்டார்கள். அதைத் தூதுவர்கள் திரும்பிவந்து அரசனுக்கு அறிவித்தார்கள்.
16 அப்பொழுது மக்கள் போய் சீரியரின் முகாமைக் கொள்ளையிட்டார்கள். அதனால் யெகோவா வாக்களித்தபடியே ஒரு மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.
17 அரசன் தன்னை தன் கைகளில் தாங்கிக்கொண்டுவந்த அதிகாரியை நகர வாசலுக்குப் பொறுப்பாக வைத்தான். உணவுக்காக ஓடிய மக்கள் கூட்டம் வாசலில் இருந்த அந்த அதிகாரியை மிதித்ததினால் அவன் இறந்துபோனான். அரசன் இறைவாக்கு உரைப்போனின் வீட்டுக்கு வந்தபோது அவன் முன்னுரைத்தபடியே நடந்தது.
18 அத்துடன், சமாரியாவின் வாசலில் நாளைக்கு இதே நேரத்தில் ஒரு மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்றும் அந்த இறைவாக்கினன் சொன்னபடியேயும் நடந்தது.
19 அப்பொழுது அந்த அதிகாரி இறைவனுடைய மனிதனிடம்: “யெகோவா வானத்தில் மதகுகளை உண்டாக்கினாலும் இது உண்மையாக நடக்குமோ?” என்று எதிர்த்துக் கேட்டான். அதற்கு இறைவனின் மனிதன், “நீ உன் கண்களினால் அதைப் பார்ப்பாய். ஆனால் அதில் ஒன்றையாகிலும் சாப்பிடமாட்டாய்” என்று சொல்லியிருந்தான்.
20 உண்மையில் இறைவாக்கினன் சொன்னபடியே அவனுக்கும் நடந்தது. மக்கள் அவனை வாசலில் மிதித்தபடியினால் அவன் இறந்தான்.
×

Alert

×