English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

2 Kings Chapters

2 Kings 6 Verses

1 இறைவாக்கினர் கூட்டம் எலிசாவிடம், “பாரும், உம்மோடுகூட நாங்கள் குடியிருக்கும் இந்த இடம் மிகவும் சிறியதாய் இருக்கிறது.
2 நாங்கள் யோர்தானுக்குப் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரங்களை வெட்டி, குடியிருப்பதற்கு ஒரு வசிப்பிடத்தைக் கட்டுவோம்” என்றார்கள். அப்பொழுது எலிசா, “போங்கள்” என்றான்.
3 அவர்களில் ஒருவன் எலிசாவிடம், “உமது அடியவர்களுடன் நீரும் வரமாட்டீரோ?” என்று கேட்டான். எலிசா அதற்கு, “நான் வருவேன்” என்று கூறினான்.
4 அவன் அவர்களுடன் கூடப்போனான். அவர்கள் யோர்தானுக்குப் போய் மரங்களை வெட்டத்தொடங்கினார்கள்.
5 அவர்களில் ஒருவன் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது, அவனின் இரும்புக் கோடரி, பிடி கழன்று தண்ணீருக்குள் விழுந்தது. அப்பொழுது அவன், “ஐயா, என் தலைவனே! அது இரவலாக வாங்கப்பட்டதே” என்றான்.
6 அதற்கு இறைவனுடைய மனிதன், “அது எங்கே விழுந்தது?” என்று கேட்டான். அவன் அந்த இடத்தைக் காட்டியபோது எலிசா ஒரு கொம்பை வெட்டி அங்கே எறிந்து அந்த இரும்பை மிதக்கச் செய்தான்.
7 “அதை வெளியே எடு” என்று எலிசா கூற அவன் தன் கையை நீட்டி அதை எடுத்தான்.
8 இந்த நாட்களில் சீரிய அரசன் இஸ்ரயேலுடன் யுத்தம் செய்தான். அவன் தன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, “நான் இந்தந்த இடங்களில் எனது படை முகாம்களை அமைப்பேன்” என்று சொன்னான்.
9 ஆனால் இறைவனுடைய மனிதனாகிய எலிசாவோ இஸ்ரயேல் அரசனுக்குச் செய்தி அனுப்பி, “நீர் இந்த இடங்களைக் கடக்கும்போது கவனமாயிரும். ஏனென்றால் சீரியர் இவ்விடத்துக்கு வரப்போகிறார்கள்” என்றான்.
10 அதன்படி இஸ்ரயேல் அரசன் இறைவனின் மனிதன் குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்களை அனுப்பி உளவு பார்த்தான். எலிசா பலமுறை அரசனை எச்சரித்துக்கொண்டே வந்தான். அரசனும் அந்தந்த இடங்களில் விழிப்பாக இருந்தான்.
11 இது சீரிய அரசனுக்குக் கோபமூட்டியது. அவன் தன் அதிகாரிகளை வரவழைத்து, “உங்களில் எவன் இஸ்ரயேல் அரசனுக்கு சார்பானவன் என்று எனக்குச் சொல்லமாட்டீர்களா?” என்று கேட்டான்.
12 அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன், “அரசனாகிய என் தலைவனே, அப்படியாக எங்களில் ஒருவரும் இல்லை. இஸ்ரயேலில் உள்ள இறைவாக்கினன் எலிசா தான் நீர் உமது படுக்கையறையில் பேசும் வார்த்தைகளைக்கூட இஸ்ரயேலின் அரசனுக்கு வெளிப்படுத்துகிறான்” என்றான்.
13 அதற்கு அரசன், “நான் ஆட்களை அனுப்பி அவனைப் பிடிப்பதற்காக அவன் எங்கேயிருக்கிறான் என்று போய்ப் பாருங்கள்” என்று கட்டளையிட்டான். அப்பொழுது எலிசா தோத்தானில் இருப்பதாகச் செய்தி கொண்டுவரப்பட்டது.
14 அரசன் அந்த இடத்துக்குக் குதிரைகளையும், தேர்களையும், ஒரு பலத்த இராணுவத்தையும் அனுப்பினான். இவர்கள் இரவில் வந்து பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டனர்.
15 அடுத்தநாள் இறைவனுடைய மனிதனின் வேலையாள், அதிகாலையில் எழும்பி வெளியே போனபோது, பட்டணம் குதிரைகளும் தேர்களும் கொண்ட இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உடனே அந்த வேலையாள், “ஆ, என் எஜமானே! நாங்கள் என்ன செய்வோம்?” என்றான்.
16 அதற்கு இறைவாக்கினன், “பயப்படாதே. அவர்களுடைய பக்கத்தில் இருப்பவர்களைக் காட்டிலும், நம்முடைய பக்கத்தில் இருப்பவர்கள் அநேகர்” என்றான்.
17 அத்துடன் எலிசா, “யெகோவாவே, இவன் பார்க்கத்தக்கதாக இவனுடைய கண்களைத் திறந்துவிடும்” என்று மன்றாடினான். அப்பொழுது யெகோவா அந்த வேலையாளின் கண்களைத் திறந்தார், அவன் பார்த்தான். மலைகளை மூடத்தக்கதான அநேக நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்திருப்பதை அவன் கண்டான்.
18 பகைவர் எலிசாவை நோக்கி வந்தபோது, எலிசா யெகோவாவை நோக்கி, “இந்தப் படையினரைக் குருடராக்கும்” என்று மன்றாடினான். எலிசா வேண்டிக்கொண்டபடியே யெகோவா அவர்களைக் குருடராக்கினார்.
19 எலிசா அவர்களை நோக்கி, “இது பாதையுமல்ல, நகரமுமல்ல; என்னைப் பின்பற்றி வாருங்கள். நீங்கள் தேடித்திரியும் மனிதனிடம் உங்களை வழிநடத்துவேன்” என்று கூறி அவர்களைச் சமாரியாவுக்கு வழிநடத்திக்கொண்டு போனான்.
20 அவர்கள் பட்டணத்துக்குள் போனதும் எலிசா, “யெகோவாவே இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும்” என்றான். யெகோவா அவர்களுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது தாங்கள் சமாரியாவுக்குள் இருப்பதை அவர்கள் கண்டார்கள்.
21 இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டபோது எலிசாவிடம், “என் தகப்பனே, நான் அவர்களைக் கொன்றுவிடட்டுமா?” என்று கேட்டான்.
22 அதற்கு எலிசா, “அவர்களைக் கொல்லாதே. உனது வாளாலும், வில்லாலும் சிறைப்பிடித்த கைதிகளைக் கொல்லலாமா? அவர்களுக்குச் சாப்பிட அப்பமும், குடிக்கத் தண்ணீரும் கொடுத்து அவர்களுடைய எஜமானிடம் திருப்பி அனுப்பிவிடு” என்றான்.
23 அப்படியே அரசனும் அவர்களுக்கு ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் சாப்பிட்டு, குடித்து முடித்தவுடன் அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் தங்கள் எஜமானிடம் திரும்பிப் போனார்கள். அதன்பின் சீரியப் படைப் பிரிவுகள் இஸ்ரயேலை திடீர் தாக்குதல் செய்வதை நிறுத்திவிட்டார்கள்.
24 சில நாட்களுக்குப்பின்பு சீரிய அரசனான பெனாதாத் தன் முழுப் படைகளையும் திரட்டி அணிவகுத்துச்சென்று சமாரியாவை முற்றுகையிட்டான்.
25 அப்போது சமாரியாவில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டிருந்தது. முற்றுகை நெடுநாட்களுக்கு நீடித்தபடியால், ஒரு கழுதையின் தலை எண்பது சேக்கல் வெள்ளிக்கும் காற்படி புறாத்தீனி ஐந்து சேக்கல் வெள்ளிக்கும் விற்கப்பட்டது.
26 இஸ்ரயேல் அரசன் ஒரு நாள் நகரத்தின் மதில்மேல் நடந்து போகும்போது ஒரு பெண் அவனைப் பார்த்து, “என் தலைவனாகிய அரசனே, எனக்கு உதவிசெய்யும்” என்று சத்தமிட்டுக் கெஞ்சினாள்.
27 அரசன் அதற்குப் பதிலாக, “யெகோவா உனக்கு உதவிசெய்யாவிட்டால் நான் எங்கேயிருந்து உனக்கு உதவிசெய்ய முடியும்? சூடடிக்கும் களத்திலிருந்தா அல்லது திராட்சை ஆலையிலிருந்தா?” என்று கேட்டான்.
28 பின்பும் அரசன் அவளைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று கேட்டான். அதற்கு அவள் பதிலாக, “என்னோடிருக்கும் இப்பெண் என்னிடம், ‘இன்றைக்கு சாப்பிடும்படி உன் மகனைத் தா, நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம்’ என்று கூறினாள்.
29 அப்படியே நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம். அடுத்தநாள் நான் அவளிடம், ‘நாங்கள் சாப்பிடும்படி உன் மகனைத் தா’ என்று கேட்டேன். ஆனால் அவள் அவனை ஒளித்துவிட்டாள்” என்று முறையிட்டாள்.
30 அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அரசன் தன் மேலங்கியைக் கிழித்தான். அவன் மதிலுக்கு மேலாக நடந்து கொண்டுபோகும்போது அவனுடைய உள் உடை துக்கவுடையாய் இருப்பதை மக்கள் யாவரும் கண்டனர்.
31 அப்பொழுது அரசன், “இன்று சாப்பாத்தின் மகன் எலிசாவின் தலையை நான் வெட்டாவிட்டால், இறைவன் என்னை எவ்வளவு அதிகமாகவும் தண்டிக்கட்டும்” என்றான்.
32 அந்த வேளையில் எலிசா தன் வீட்டுக்குள் தன்னைச் சந்திக்க வந்த முதியோர்களோடு உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அரசன் ஒரு தூதுவனை தனக்கு முன்னே போகும்படி அனுப்பியிருந்தான். ஆனால் அவன் அங்கு போய்ச்சேரும் முன்பே எலிசா முதியோரைப் பார்த்து, “இக்கொலைகாரன் என் தலையை வெட்டுவதற்கு ஒருவனை அனுப்புகிறதை நீங்கள் காணவில்லையா? பாருங்கள் இந்தத் தூதுவன் வரும்போது, அவன் வரும்முன் கதவைப் பூட்டிக்கொண்டு நில்லுங்கள். பின்னாலே கேட்பது அவனுடைய எஜமானின் காலடிச் சத்தமல்லவா” என்றான்.
33 இவ்வாறு எலிசா அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தத் தூதுவன் அங்கு வந்தான். அப்போது அரசன், “இந்தப் பேராபத்து யெகோவாவிடமிருந்துதான் வந்திருக்கிறது. ஆகையால் இன்னும் நான் ஏன் யெகோவாவுக்குக் காத்திருக்கவேண்டும்” என்றான்.
×

Alert

×