ஆனால் அரசனான யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமான யோசேபாள், கொலைசெய்யப்படப்போகிற இளவரசர் மத்தியிலிருந்து அகசியாவின் மகன் யோவாசை அத்தாலியாளிடமிருந்து களவாகக் கொண்டுபோய், அவனுடைய செவிலியத் தாயுடன் படுக்கையறையில் வைத்தாள். இதனால் அவன் கொல்லப்படவில்லை.
ஏழாம் வருடத்தில் யோய்தா கேரியரிலும், காவலாளரிலும் நூறுபேருக்குத் தளபதிகளாய் இருந்தவர்களை யெகோவாவின் ஆலயத்துக்கு வரும்படி அழைத்தான். முதலில் யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து ஒரு வாக்குறுதியும் பெற்றுக்கொண்டான். அதன்பின் அரசனுடைய மகனை அவர்களுக்குக் காட்டினான்.
மேலும் அவன் அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது, “நீங்கள் செய்யவேண்டியது இதுவே: ஓய்வுநாளில் மூன்று குழுவினராக உங்கள் கடமைகளைச் செய்யும் உங்களில், மூன்றில் ஒரு பகுதியினர் அரண்மனையைப் பாதுகாக்க வேண்டும்.
மற்ற மூன்றில் ஒரு பகுதியினர் சூர் வாசலையும், மூன்றில் ஒரு பகுதியினர் ஆலயத்தை மாறிமாறி காவல் காக்கிறவர்களுக்குப் பின்புறமாக இருக்கும் வாசலையும் காவல் காக்கவேண்டும்.
ஒவ்வொருவரும் தன்தன் கையில் ஆயுதம் பிடித்தவர்களாக அரசனைச் சுற்றி நில்லுங்கள். உங்கள் வரிசையை நெருங்குபவன் எவனும் கொல்லப்படவேண்டும். அரசன் எங்கே போனாலும், வந்தாலும் அவருக்குச் சமீபமாய் நில்லுங்கள்” என்று கூறினான்.
காவலாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஆயுதம் பிடித்தவர்களாக, தெற்குப் பக்கத்திலிருந்து வடக்குப் பக்கம்வரை ஆலயத்திற்கும், பலிபீடத்திற்கும் அருகே அரசனைச் சூழ்ந்து நின்றார்கள்.
அதன்பின் யோய்தா அரசனின் மகனை வெளியே கொண்டுவந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கையின் ஒரு பிரதியை அவனிடம் கொடுத்து, அவனை அரசனாகப் பிரகடனம் செய்தான். அவர்கள் அவனை அரசனாக அபிஷேகம்பண்ணி, தங்கள் கைகளைத் தட்டி, “அரசன் நீடூழி வாழ்க” என ஆர்ப்பரித்தார்கள்.
அவள் பார்த்தபோது, அக்கால வழக்கப்படி அரசன் தூண் அருகில் நிற்பதைக் கண்டாள். அதிகாரிகளும், எக்காளம் ஊதுபவர்களும் அரசனுக்குப் பக்கத்தில் நின்றார்கள். நாட்டு மக்கள் யாவரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அத்தாலியாள் தன் அங்கிகளைக் கிழித்துக்கொண்டு, “அரச துரோகம்! அரச துரோகம்!” எனக் கூக்குரலிட்டாள்.
அதன்பின் யோய்தா இஸ்ரயேல் மக்கள் யெகோவாவின் மக்களாயிருக்கும்படி யெகோவாவுக்கும், அரசனுக்கும், மக்களுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையைச் செய்தான். அத்துடன் அரசனுக்கும் மக்களுக்கும் இடையிலும் ஒரு உடன்படிக்கையைச் செய்தான்.
கேரியரிலும், காவலாளரிலும் நூறுபேருக்கு தளபதிகளையும், நாட்டில் இருந்த எல்லா மக்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போனான். அவர்கள் எல்லோரும் ஒருமித்து யெகோவாவின் ஆலயத்திலிருந்து காவலாளர் வாசல் வழியாக அரசனை அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே யோவாஸ் அரச அரியணையில் அமர்ந்தான்.