English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Kings Chapters

2 Kings 10 Verses

1 அப்பொழுது ஆகாபின் குடும்பத்தைச் சேர்ந்த எழுபது மகன்கள் சமாரியாவில் வாழ்ந்துவந்தார்கள். யெஸ்ரயேலிலிருந்த நகர அதிகாரிகளுக்கும், முதியோருக்கும், ஆகாபின் பிள்ளைகளின் பாதுகாவலர்களுக்கும் யெகூ கடிதங்கள் எழுதி சமாரியாவுக்கு அனுப்பினான்.
2 அவற்றிலே, “உங்கள் எஜமானின் மகன்கள் உங்களிடம் இருக்கிறார்கள். உங்களிடம் தேர்களும், குதிரைகளும், அரண்களால் பாதுகாக்கப்பட்ட நகரமும், அத்துடன் ஆயுதங்களும் இருக்கின்றன. ஆகையால் இக்கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடனே,
3 உங்கள் எஜமானின் மகன்களில் திறமைசாலியும், மிகத் தகுதிவாய்ந்தவனுமான ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனுடைய தகப்பனின் அரியணையில் அமர்த்துங்கள். அதன்பின்பு உங்கள் தலைவனுடைய குடும்பத்துக்காக யுத்தம் செய்யுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
4 ஆனால் அவர்கள் மிகவும் பயந்து, “இரண்டு அரசர்களாலேயே இவனை எதிர்க்க முடியாதபோது, நாங்கள் எப்படி எதிர்க்கமுடியும்” என்று கூறினார்கள்.
5 அப்பொழுது அரண்மனையை நிர்வகிப்பவனும், நகர ஆட்சியாளனும், முதியோர்களும், ஆகாபின் பிள்ளைகளின் பாதுகாவலர்களும் யெகூவுக்கு ஒரு செய்தி அனுப்பினார்கள்: “நாங்கள் உமது அடியவர்கள். நீர் எதைச் சொன்னாலும் அதை நாங்கள் செய்வோம். நாங்கள் யாரையும் அரசனாக நியமிக்கமாட்டோம். நீர் எது சிறந்ததென நினைக்கிறீரோ அதைச் செய்யும்” என்று அந்தச் செய்தியில் இருந்தது.
6 அப்பொழுது யெகூ அவர்களுக்கு இரண்டாம் கடிதம் எழுதினான். அதில், “நீங்கள் எனக்குச் சார்பாக இருந்து எனக்குக் கீழ்ப்படிந்தீர்களானால், உங்கள் எஜமானின் மகன்களின் தலைகளை எடுத்துக்கொண்டு நாளைக்கு இதே நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடம் வாருங்கள்” என்று எழுதியிருந்தது. அப்பொழுது எழுபது இளவரசர்கள் தங்களைப் பராமரிக்கும் பட்டணத்தின் முதன்மையான மனிதர்களில் இருந்தனர்.
7 கடிதம் அவர்களுக்குக் கிடைத்தவுடன் அந்த மனிதர் இளவரசர்களைக் கூட்டிக்கொண்டுபோய் எழுபதுபேரையும் வெட்டிக்கொன்றார்கள். அவர்களுடைய தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலில் இருந்த யெகூவிடம் அனுப்பினார்கள்.
8 தூதுவன் யெகூவிடம் வந்து, “இளவரசர்களின் தலைகளை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்று கூறினான். அதற்கு யெகூ, “நகர வாசலில் இரண்டு குவியல்களாக அவற்றைக் குவியுங்கள். காலைவரை அவ்வாறே இருக்கட்டும்” என்று கட்டளையிட்டான்.
9 அடுத்தநாள் காலையில் யெகூ வெளியே போனான். அவன் எல்லா மக்களின் முன்னிலையிலும் நின்று, “நீங்கள் குற்றமற்றவர்கள். நான்தான் எனது தலைவனுக்கு எதிராகச் சதிசெய்து அவனைக் கொன்றேன். ஆனால் இவர்களைக் கொன்றது யார்?
10 ஆகாபுடைய வீட்டுக்கு எதிராக யெகோவா சொன்ன ஒரு சொல்லாவது நிறைவேறாமல் போகமாட்டாது என்று அறிந்துகொள்ளுங்கள். எலியாவுக்கு தாம் வாக்குப்பண்ணியதை யெகோவா செய்திருக்கிறார்” என்று கூறினான்.
11 எனவே யெகூ யெஸ்ரயேலில் ஆகாபுடைய எல்லாத் தலைவர்களையும், நெருங்கிய நண்பர்களையும், அவனுடைய ஆசாரியர்களையும், ஆகாபின் குடும்பத்தில் மீதியாய் உயிரோடிருந்த யாவரையும் ஒருவரையும் தப்பவிடாமல் கொலைசெய்தான்.
12 இதன்பின்பு யெகூ சமாரியாவுக்குப் பயணமாய்ப் போனான். அவன் போய்க்கொண்டிருந்தபோது, வழியில் மேய்ப்பரின் இடமான பெதெக்கேத் என்னும் இடத்தில்,
13 யூதாவின் அரசனான அகசியாவின் உறவினர்கள் சிலரை யெகூ சந்தித்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் யார்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் அகசியாவின் உறவினர்கள். அரசன் ஆகாபினுடைய, அரசியினுடைய குடும்பங்களைச் சந்தித்து வணக்கம் தெரிவிக்க வந்தோம்” என்றார்கள்.
14 அப்பொழுது யெகூ தன்னுடன் வந்தவர்களைப் பார்த்து, “பிடியுங்கள்” என்று கட்டளையிட்டான். உடனே அவனுடைய மனிதர் அந்த நாற்பத்து இரண்டுபேரையும் உயிரோடே பிடித்துக் கொண்டுபோய் பெத் எக்கேத்தின் கிணற்றண்டையில் வெட்டிக்கொன்றார்கள். ஒருவனையாகிலும் உயிருடன் வைக்கவில்லை.
15 யெகூ அந்த இடத்தைவிட்டுப் போனபின்பு, வழியில் தன்னைச் சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்த ரேகாபின் மகன் யோனதாபைச் சந்தித்தான். யெகூ அவனுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அவனை நோக்கி, “நான் உன்னோடே இணக்கமாய் இருப்பதுபோல, நீயும் என்னோடு இணக்கமாய் இருக்கிறாயா?” என்று கேட்டான். அதற்கு யோனதாப், “ஆம்” என்றான். அப்பொழுது யெகூ, “அப்படியானால் உனது கையைத் தா” என்றான். யோனதாப் தன் கையைக் கொடுத்தபோது யெகூ அவனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டான்.
16 யெகூ அவனைப் பார்த்து, “இப்போது என்னுடன் வந்து யெகோவாவுக்காக நான் கொண்டிருக்கும் பக்தி வைராக்கியத்தைப் பாரும்” என்று கூறி தேரில் அவனைக் கூட்டிக்கொண்டு போனான்.
17 யெகூ சமாரியாவுக்குப் போனபோது அங்கே ஆகாபின் குடும்பத்தில் இன்னும் மீதியாயிருந்த எல்லோரையும் கொன்றான். யெகோவா எலியாவுக்குக் கூறிய வாக்கின்படியே அவர்களை அழித்தான்.
18 இதன்பின்பு யெகூ எல்லா மக்களையும் ஒன்றுகூடி வரும்படி அழைத்து அவர்களிடம், “ஆகாப் பாகாலுக்கு கொஞ்சமே பணிசெய்தான். யெகூவோ பாகாலுக்கு அதிகமாய் செய்யப் போகிறான்.
19 இப்போது பாகாலின் எல்லா தீர்க்கதரிசிகளையும், எல்லாப் பணி செய்பவர்களையும், எல்லாப் பூசாரிகளையும் அழைப்பியுங்கள். ஒருவராவது விடுபடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் பாகாலுக்கு நான் ஒரு பெரிய பலியை செலுத்தப்போகிறேன். யாராவது வரத்தவறினால் அவன் ஒருபோதும் உயிரோடிருக்கமாட்டான்” என்றான். ஆனால் உண்மையில் இது பாகாலுக்கு பணி செய்பவர்களை அழிப்பதற்கு யெகூ கையாண்ட ஒரு தந்திரமான முறையாயிருந்தது.
20 யெகூ மேலும், “பாகாலைக் கனப்படுத்துவதற்கு ஒரு சபையைக் கூட்டுங்கள்” என்றான். அவர்கள் அதை நியமித்தார்கள்.
21 யெகூ இஸ்ரயேல் நாடு முழுவதற்கும் செய்தியை அனுப்பினான். பாகாலுக்குப் பணிசெய்தவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தார்கள். ஒருவனாகிலும் வராமல் விடவில்லை. பாகாலின் கோயிலுக்குள் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை அவர்கள் நெருக்கமாய் கூடினார்கள்.
22 அப்பொழுது உடைகளுக்குப் பொறுப்பாயிருந்தவனை அழைத்து, “பாகாலின் பணியாளர்கள் யாவருக்கும் ஆடைகளைக் கொண்டுவா” என்றான். அப்படியே அவன் அவர்களுக்கு மேலாடைகளைக் கொண்டுவந்தான்.
23 அப்பொழுது யெகூவும் ரேகாபின் மகன் யோனதாபும் பாகாலின் கோயிலுக்குள் போனார்கள். யெகூ பாகாலின் பணியாளர்களைப் பார்த்து, “பாகாலின் பணியாளர்களைத்தவிர யெகோவாவின் அடியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை நீங்கள் சரியாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான்.
24 அதன்பின் அவர்கள் பலிகளையும், தகன காணிக்கைகளையும் செலுத்துவதற்கு உள்ளே போனார்கள். இந்த வேளையில் யெகூ எண்பது மனிதரைக் கோயிலின் வெளிப்புறத்தில் நிறுத்தி, “நான் உங்களிடம் கையளிக்கிறவர்களில் எவனையாவது தப்பவிட்டால், தப்பினவனுடைய உயிருக்காக தப்பவிட்டவனுடைய உயிர் பிணையாக இருக்கும்” என்று எச்சரித்தான்.
25 தகனபலியைச் செலுத்தி முடிந்தவுடன், யெகூ தன் வாசல்காப்போருக்கும், அதிகாரிகளுக்கும், “உள்ளே போய் ஒருவரையும் தப்பவிடாமல் எல்லோரையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டான். எனவே அவர்கள், எல்லோரையும் வாளினால் வெட்டினார்கள். காவலாளரும், அதிகாரிகளும் உடல்களை வெளியே எறிந்தார்கள். அதன்பின் பாகாலின் கோயிலின் உள் அறைக்குள் போனார்கள்.
26 பாகாலின் கோயிலின் புனிதக் கல்லை வெளியே கொண்டுவந்து அதை எரித்தார்கள்.
27 அந்தப் புனித கல்லை அழித்து, பாகாலின் கோயிலையும் உடைத்தார்கள். அதை இன்றுவரை கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள்.
28 இவ்விதமாக யெகூ இஸ்ரயேலிலிருந்து பாகால் வழிபாட்டை ஒழித்து விட்டான்.
29 அப்படியிருந்தும், தாணிலும், பெத்தேலிலும் இருந்த தங்கக் கன்றுக்குட்டிகளை இஸ்ரயேலரை வணங்கச்செய்து அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணின, நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு யெகூ விலகவில்லை.
30 யெகோவா யெகூவிடம், “என்னுடைய பார்வையில் எனக்குப் பிரியமான செயல்களைச் சரியான முறைப்படி செய்திருக்கிறாய். அத்துடன் ஆகாபின் குடும்பத்திற்கு எதிராக நான் என் மனதில் திட்டமிட்ட எல்லாவற்றையுமே நீ சாதித்துவிட்டாய். ஆகையினால் நான்கு தலைமுறைகளுக்கு உனது சந்ததிகள் இஸ்ரயேலின் அரியணையில் இருப்பார்கள்” என்று கூறினார்.
31 ஆனாலும் யெகூவோ என்றால், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் சட்டத்தைத் தன் முழு இருதயத்தோடும் கைக்கொண்டு நடக்கக் கவனமாயிருக்கவில்லை. யெரொபெயாம் இஸ்ரயேலைச் செய்யப்பண்ணின பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
32 அந்நாட்களில் யெகோவா இஸ்ரயேல் நாட்டின் பரப்பளவைக் குறைக்கத் தொடங்கினார். ஆசகேல் இஸ்ரயேலரின் பிரதேசம் முழுவதிலும் அவர்களை முறியடித்தான்.
33 காத், ரூபன், மனாசே ஆகியோரின் பிரதேசங்களான கீலேயாத் நாடு எங்குமுள்ள யோர்தான் நதியின் கிழக்குப்பகுதி முழுவதையும், அர்னோன் பள்ளத்தாக்கின் அருகே இருக்கும் அரோயேர் ஆற்றிலிருந்து கீலேயாத்தூடாக பாசான் வரைக்குமுள்ள பகுதிகளையும் ஆசகேல் வெற்றிபெற்றான்.
34 யெகூவின் ஆட்சியிலுள்ள மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
35 இதன்பின் யெகூ தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யோவாகாஸ் அவனுடைய இடத்தில் அரசனானான்.
36 சமாரியாவிலிருந்து யெகூ இஸ்ரயேலை அரசாண்ட காலம் இருபத்தெட்டு வருடங்கள்.
×

Alert

×