இதனாலேயே, நான் இவ்வாறு உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நான் உங்களிடம் வரும்போது, என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் நான் துக்கமடைய விரும்பவில்லை. நீங்கள் எல்லோரும் என் சந்தோஷத்தில் பங்கு கொள்வீர்கள் என்று, நான் உங்கள் எல்லோரையும் குறித்து மனவுறுதியுள்ளவனாய் இருந்தேன்.
நான் மிகுந்த துன்பத்தோடும், உள்ளத்தின் வேதனையோடும், அதிக கண்ணீரோடும் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதினேன். ஆனால், உங்களைத் துக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, நான் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே நான் அப்படி எழுதினேன்.
யாராகிலும் ஒருவன் துக்கம் உண்டாக்கி இருந்தால், அவன் என்னை மட்டுமல்ல, ஓரளவுக்கு உங்களெல்லோரையுமே துக்கப்படுத்தியிருக்கிறான். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை.
நீங்கள் யாரையாவது மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்கவேண்டியது ஏதேனும் இருந்தால், அதை நான் உங்கள் நிமித்தம் கிறிஸ்துவினுடைய சமுகத்தில் மன்னித்திருக்கிறேன்.
ஆனாலும், அங்கே என் சகோதரன் தீத்துவைக் காணாதபடியால், என் உள்ளத்தில் சமாதானம் இல்லாதிருந்தது. ஆதலால், நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனேன்.
இறைவனுக்கே நன்றி. அவர் எப்பொழுதும் எங்களைக் கரம்பிடித்து, கிறிஸ்துவின் வெற்றி பவனிக்குள் வழிநடத்துகிறார். இப்படி அவரைப்பற்றிய அறிவின் நறுமணம்போல் எங்கள் மூலமாக எல்லா இடங்களிலும் பரவச்செய்கிறார்.
அநேகர் இறைவனுடைய வார்த்தையை, மலிவான கடைச்சரக்காக கருதி இலாபம் பெற விற்கிறார்கள். நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, நாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மனிதரைப்போல், கிறிஸ்துவில் இறைவனுக்கு முன்பாக நேர்மையுடன் அதைப் பேசுகிறோம்.