ஏனெனில் தேவையான அளவு ஆசாரியர்கள் தங்களைச் சுத்திகரிக்காமலும், எருசலேமில் மக்கள் கூடிவராமலும் இருந்ததினால், அவர்களால் வழக்கமாகப் பஸ்காவைக் கொண்டாடும் முதலாம் மாதத்தில் அதைக் கொண்டாட முடியவில்லை.
அவர்கள் இஸ்ரயேல் முழுவதிலும் பெயெர்செபா தொடங்கி தாண்வரைக்கும் உள்ள மக்களை, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட எருசலேமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கும்படித் தீர்மானித்தார்கள். நீண்டகாலமாக எழுதப்பட்டிருந்தபடி பெருந்தொகையான மக்களால் பஸ்கா கொண்டாடப்படவில்லை.
உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாயிருந்த உங்கள் முற்பிதாக்களைப் போலவும், சகோதரரைப் போலவும் நீங்களும் இருக்கவேண்டாம். அதனால் நீங்கள் காண்பதுபோல், அவர் அவர்களை பயங்கரமான காட்சிப் பொருளாக்கியிருக்கிறார்.
நீங்கள் உங்கள் முற்பிதாக்கள் இருந்ததுபோல் அடங்காதவர்களாக இருக்கவேண்டாம்; யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். என்றென்றைக்குமென அவர் பரிசுத்தப்படுத்திய பரிசுத்த இடத்திற்கு வாருங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது அவரது கடுங்கோபம் உங்களைவிட்டு நீங்கும்.
நீங்கள் யெகோவாவினிடத்திற்குத் திரும்பினால், அப்பொழுது உங்கள் சகோதரர்களும், உங்கள் பிள்ளைகளும் அவர்களைச் சிறைபிடித்தவர்களிடத்தில் தயவு பெற்று திரும்பவும் இந்த நாட்டிற்கு வருவார்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவர். நீங்கள் அவரிடம் திரும்பும்போது உங்களிடமிருந்து அவர் தன் முகத்தைத் திருப்பமாட்டார்” என எழுதப்பட்டிருந்தது.
அத்துடன் யூதாவில் யெகோவாவின் வார்த்தையைப் பின்பற்றி, அரசனும் அவன் அதிகாரிகளும் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒருமனதைக் கொடுப்பதற்காக இறைவனின் கரம் யூதாவின் மக்கள்மேல் இருந்தது.
அவர்கள் இரண்டாம் மாதம் பதினான்காம் நாளில் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டியை வெட்டினார்கள். ஆசாரியரும் லேவியர்களும் வெட்கப்பட்டு, தங்களைப் பரிசுத்தப்படுத்தி, யெகோவாவின் ஆலயத்திற்கு தகன காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.
அதன்பின் அவர்கள் இறைவனின் மனிதனான மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டபடி தங்களுக்குரிய முறையான பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். லேவியர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இரத்தத்தை ஆசாரியர்கள் தெளித்தார்கள்.
கூடியிருந்தவர்களில் அநேகர் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. சம்பிரதாயப்படி அவர்கள் சுத்தமற்றவர்களாய் இருந்ததினாலும், யெகோவாவுக்குத் தங்களுடைய செம்மறியாட்டுக் குட்டிகளை அர்ப்பணிக்க முடியாமல் இருந்ததினாலும் லேவியர்கள் அவர்களுக்காக பஸ்கா செம்மறியாட்டுக் குட்டிகளைக் கொல்ல வேண்டியதாயிருந்தது.
எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்களில் அதிகமானோர் தங்களைச் சுத்திகரிக்காமல் இருந்தார்கள். ஆனாலும், எழுதப்பட்டிருக்கிறதற்கு மாறாக அவர்கள் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். ஏனெனில் எசேக்கியா அவர்களுக்காக, “நல்லவராயிருக்கிற யெகோவா ஒவ்வொருவரையும் மன்னிப்பாராக.
பரிசுத்த இடத்திற்கேற்ப ஒருவன் சுத்தம் அடையாதிருந்தாலுங்கூட, தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவதற்கு, தங்கள் இருதயத்தைத் திருப்பும் ஒவ்வொருவனையும் மன்னிப்பாராக” என்று விண்ணப்பம் பண்ணியிருந்தான்.
யெகோவாவின் பணியில் நல்ல புரிதலைக் காண்பித்த எல்லா லேவியர்களுடனும் எசேக்கியா உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைப் பேசினான். அவர்கள் ஏழு நாட்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பங்கைச் சாப்பிட்டார்கள். அத்துடன் சமாதான காணிக்கைகளைச் செலுத்தி, அவர்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் துதித்தார்கள்.
அதன்பின் கூடியிருந்தவர்கள் எல்லோரும் இன்னும் ஏழுநாட்களுக்கு பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஒப்புக்கொண்டார்கள். எனவே இன்னும் ஏழுநாட்களும் சந்தோஷமாக கொண்டாடினார்கள்.
யூதாவின் அரசன் எசேக்கியா கூடியிருந்தவர்களுக்கு ஆயிரம் காளைகளையும், ஏழாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் கொடுத்தான். அத்துடன் அதிகாரிகளும் அவர்களுக்கு ஆயிரம் காளைகளையும், பத்தாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் கொடுத்தார்கள். பெருந்தொகையான ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள்.
யூதாவின் முழுச் சபையோரும், அவர்களுடன் லேவியர்கள், ஆசாரியர்கள், இஸ்ரயேலிலிருந்து வந்து கூடியவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருந்தனர். இஸ்ரயேலிலிருந்து வந்த அந்நியரும், யூதாவில் வாழ்ந்த அந்நியரும்கூட அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாயிருந்தனர்.
ஆசாரியரும் லேவியர்களும் எழுந்து நின்று மக்களை ஆசீர்வதித்தனர், இறைவன் அதைக் கேட்டார். ஏனெனில் அவர்களின் விண்ணப்பம் அவரின் பரிசுத்த இடமான பரலோகத்தை எட்டியது.