English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

2 Chronicles Chapters

2 Chronicles 20 Verses

1 இதற்குப் பின்பு மோவாபியரும், அம்மோனியரும், அவர்களுடன் சில மெயூனியரும் யோசபாத்துடன் யுத்தம் செய்ய வந்தார்கள்.
2 சில மனிதர்கள் யோசபாத்திடம் வந்து, “மிகப்பெரிய படை உமக்கு எதிராக சவக்கடலுக்கு அக்கரையிலுள்ள சீரியாவிலிருந்து வருகிறது. அது ஏற்கெனவே என்கேதி எனப்பட்ட அத்சாத்சோன் தாமாரில் இருக்கிறது” என்றார்கள்.
3 யோசபாத் பயந்து, யெகோவாவைத் தேடுவதற்கு தீர்மானித்து, யூதா முழுவதிலும் உபவாசத்தை அறிவித்தான்.
4 யூதா மக்கள் யெகோவாவிடம் உதவி தேடுவதற்காக ஒன்றுகூடி வந்தார்கள். யூதாவின் ஒவ்வொரு பட்டணங்களிலுமிருந்தும் யெகோவாவைத் தேடுவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.
5 அப்பொழுது யோசபாத் யெகோவாவின் ஆலயத்தில் புதிய முற்றத்திற்கு முன்னால் யூதாவிலிருந்தும், எருசலேமிலிருந்தும் வந்த மக்கள் சபையின் நடுவில் எழுந்து நின்றுகொண்டு
6 அவன், “எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவே, பரலோகத்தில் இருக்கும் இறைவன் நீரல்லவோ? நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர். அதிகாரமும் வல்லமையும் உமது கரங்களிலேயே இருக்கின்றன. உம்மை எதிர்த்துநிற்க ஒருவராலும் முடியாது.
7 எங்கள் இறைவனே, உமது மக்களான இஸ்ரயேலுக்கு முன்பாக இந்த நாட்டின் மக்களைத் துரத்தி, உமது சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததிகளுக்கு அதை என்றென்றைக்குமாகக் கொடுத்தீரல்லவா?
8 அவர்கள் இங்கேயே குடியிருந்து, உமது பெயருக்கென ஒரு பரிசுத்த இடத்தையும் கட்டினார்களே.
9 ‘நியாயத்தீர்ப்பின் வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகிய பேராபத்துக்கள் எங்கள்மேல் வந்தால், நாங்கள் உமது பெயர் விளங்கும் இந்த ஆலயத்தின் முன்பாக உமது முன்னிலையில் நின்று, எங்கள் துன்பத்தின் நிமித்தம் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, எங்கள் சத்தத்தை நீர் கேட்டு எங்களை விடுவிப்பீர்’ என்று சொன்னீரே.
10 “ஆனால் இப்பொழுது அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் இங்கே வந்திருக்கிறார்கள். இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களுடைய பிரதேசத்தின் வழியாக படையெடுக்க நீர் இஸ்ரயேலரை அனுமதிக்கவில்லை. அதனால் இஸ்ரயேலர் அவர்களைவிட்டுத் திரும்பிப் போனார்கள்; அவர்களை அழிக்கவில்லை.
11 அவர்கள் எங்களுக்கு எப்படிப் பதில் செய்கிறார்கள் என்று பாரும், இப்பொழுது நீர் எங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த எங்கள் நாட்டிலிருந்து எங்களைத் துரத்தி விடுவதற்காக வந்திருக்கிறார்கள்.
12 எங்கள் இறைவனே, நீர் அவர்களை நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களைத் தாக்க வந்திருக்கும் இந்த மிகப்பெரிய இராணுவத்தை எதிர்கொள்ள எங்களுக்கு வலிமை இல்லை. என்ன செய்வதென்றும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கியிருக்கின்றன” என்று மன்றாடினான்.
13 யூதாவின் எல்லா மனிதர்களும், அவர்களின் மனைவியர்களுடனும், குழந்தைகளுடனும், சிறியவர்களுடனும்கூட யெகோவாவுக்கு முன்பாக நின்றார்கள்.
14 அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் சபையில் நின்றுகொண்டிருந்த ஆசாப்பின் சந்ததியில் வந்த லேவியனான யகாசியேலின்மேல் வந்தார். இவன் சகரியாவின் மகன், சகரியா பெனாயாவின் மகன், பெனாயா ஏயெலின் மகன், ஏயேல் மத்தனியாவின் மகன்.
15 யகாசியேல் சொன்னதாவது: “அரசன் யோசபாத்தே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருப்பவர்களே, எல்லோரும் கேளுங்கள்; உங்களுக்கு யெகோவா சொல்வது இதுவே: இந்த மிகப்பெரிய படையின் நிமித்தம் நீங்கள் பயப்படவோ, அதைரியப்படவோ வேண்டாம். ஏனெனில் இந்த யுத்தம் உங்களுடையது அல்ல, இறைவனுடையது.
16 நாளை அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து அணிவகுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ் என்னும் மேட்டுவழியாக ஏறி வருகிறார்கள். நீங்கள் அவர்களை யெருயேல் பாலைவனத்திலுள்ள பள்ளத்தாக்கின் கடைசியில் காண்பீர்கள்.
17 இந்த யுத்தத்தில் நீங்கள் செய்ய வேண்டியிராது. யூதாவே, எருசலேமே, நீங்கள் உங்களுக்குரிய யுத்த நிலையில் உறுதியாய் நின்று யெகோவா உங்களுக்குத் தரப்போகிற விடுதலையைப் பாருங்கள். நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அதைரியப்படவும் வேண்டாம். நாளை அவர்களைச் சந்திக்க வெளியே போங்கள். யெகோவா உங்களோடுகூட இருப்பார்” என்றான்.
18 யோசபாத் முகங்குப்புற தரையில் விழுந்து வணங்கினான். எருசலேம், யூதா மக்கள் எல்லோரும்கூட யெகோவாவுக்கு முன்பாக கீழே விழுந்து அவரை வழிபட்டார்கள்.
19 அப்பொழுது கோகாத்தியர்களையும், கோராகியர்களையும் சேர்ந்த சில லேவியர்கள் எழுந்து நின்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிக உரத்த சத்தத்துடன் துதித்தார்கள்.
20 அதிகாலையில் அவர்கள் தெக்கோவா பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனபோது, யோசபாத் எழுந்து நின்று, “யூதா, எருசலேம் மக்களே! எனக்கு செவிகொடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வையுங்கள், நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்; அவரது இறைவாக்கினர்களை நம்புங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று சொன்னான்.
21 மக்களுடன் ஆலோசனை பண்ணிய பின்பு யோசாபாத் யெகோவாவுக்கு பாடல்களைப் பாடவும், அவரது பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் பாடகரை நியமித்தான். படைக்கு முன்னால் சென்று: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று பாடும்படி நியமித்தான்.
22 அவர்கள் பாடவும், துதிக்கவும் தொடங்கிய உடனே யூதாவுக்கு எதிராய் வந்திருந்த அம்மோன், மோவாப், சேயீர் மலைநாடு ஆகியவற்றைச் சேர்ந்த மனிதருக்கெதிராக யெகோவா தீடீர்த் தாக்குதல்களை ஏற்படுத்தினார். அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்.
23 அம்மோன், மோவாப் மனிதர்களும் சேயீர் மலைநாட்டு மனிதரை அழித்து நாசப்படுத்தும்படி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். சேயீர் மனிதர்களைக் கொலைசெய்து முடித்தபின்பு அவர்கள் ஒருவரையொருவர் அழித்தார்கள்.
24 யூதாவின் மக்கள் பாலைவனத்திற்கு எதிராய் இருக்கிற இடத்திற்கு வந்து இந்தப் பெரிய படையினர் பக்கமாய் பார்த்தபோது, அங்கே பிரேதங்கள் மட்டுமே தரையில் கிடப்பதைக் கண்டார்கள். ஒருவனும் தப்பியிருக்கவில்லை.
25 எனவே யோசபாத்தும், அவன் மனிதர்களும் கொள்ளைப்பொருளை எடுத்து வருவதற்காக அங்கே சென்றார்கள். அங்கே அவர்கள் பெரும் தொகையான உபகரணங்களையும், உடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கண்டார்கள். அவை எடுத்துக் கொண்டுபோக முடியாத அளவு அதிகமாயிருந்தன. கொள்ளைப்பொருள் அதிகமாயிருந்தபடியால், அவற்றைச் சேர்த்தெடுக்க மூன்றுநாள் பிடித்தது.
26 அவர்கள் நாலாம் நாளில் பெராக்கா பள்ளத்தாக்கிலே ஒன்றுகூடி அங்கே யெகோவாவைத் துதித்தார்கள். அதனால் அது இன்றுவரை பெராக்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.
27 அதன்பின் யூதா, எருசலேம் மனிதர்கள் எல்லோரும் யோசபாத்தின் தலைமையின்கீழ் மகிழ்ச்சியுடன் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஏனெனில் தங்கள் பகைவர்களை மேற்கொண்டு சந்தோஷமாயிருக்கும்படி யெகோவா செய்தார்.
28 அவர்கள் எருசலேமுக்குள் போய் யாழ்களோடும், வீணைகளோடும், எக்காளங்களோடும் யெகோவாவினுடைய ஆலயத்திற்கு போனார்கள்.
29 இஸ்ரயேலின் பகைவர்களோடு யெகோவா எப்படி யுத்தம் செய்தார் என மற்ற நாட்டு அரசுகள் கேள்விப்பட்டபோது, இறைவனைப்பற்றிய பயம் அவர்கள்மேல் வந்தது.
30 யோசபாத்தின் அரசு சமாதானத்துடன் இருந்தது. ஏனெனில் அவனுடைய இறைவன் எல்லாப் பக்கத்திலும் அவனுக்கு அமைதியைக் கொடுத்திருந்தார்.
31 யோசபாத் யூதாவின்மேல் ஆட்சிசெய்தான். அவன் யூதாவுக்கு அரசனானபோது, அவனுக்கு முப்பத்தைந்து வயதாயிருந்தது. அவன் எருசலேமில் இருபத்தைந்து வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சில்கியின் மகள் அசுபாள் என்பவள்.
32 அவன் தனது தகப்பன் ஆசாவின் வழியிலே நடந்தான். அவற்றைவிட்டு அவன் விலகவில்லை. அவன் யெகோவாவின் பார்வையில் சரியானவற்றைச் செய்தான்.
33 ஆயினும் வழிபாட்டு மேடைகள் அகற்றப்படவில்லை. மக்களும்கூட தங்கள் இருதயத்தை தங்கள் முற்பிதாக்களின் இறைவனின் பக்கமாக இன்னும் திருப்பாதிருந்தனர்.
34 யோசபாத்தின் ஆட்சியைப்பற்றிய மற்ற நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை அனானியின் மகன் யெகூவின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை இஸ்ரயேலின் அரசர்களின் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
35 கடைசியில் யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ரயேலின் அரசன் தீயவழியில் நடந்த அகசியாவுடன் சேர்ந்துகொண்டான்.
36 யோசபாத் அவனுடன் தர்ஷீசுக்குப் போக வியாபாரக் கப்பல்களைக் கட்டுவதற்கு உடன்பட்டான். இவை எசியோன் கேபேரில் கட்டப்பட்டன.
37 பின்பு மரேஷா ஊரைச்சேர்ந்த தொதாவாவின் மகன் எலியேசர் யோசபாத்திற்கு எதிராக இறைவாக்கு உரைத்தான். அவன் அவனிடம், “நீ அகசியாவுடன் நட்பு உடன்படிக்கை செய்தபடியினால் நீ செய்தவற்றையும் யெகோவா அழித்துப்போடுவார்” என்றான். கப்பல்கள் உடைந்துபோயின; அவற்றை தர்ஷீசுக்கு வியாபாரத்திற்குக் கொண்டுசெல்ல முடியாதிருந்தது.
×

Alert

×