English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Chronicles Chapters

2 Chronicles 18 Verses

1 யோசபாத் பெரும் செல்வமும் கனமும் உள்ளவனாய் இருந்தான். அவன் ஆகாபுடன் திருமணத்தின்மூலம் உறவுமுறை கொண்டிருந்தான்.
2 சில வருடங்களுக்குப் பின்பு யோசபாத் சமாரியாவுக்கு ஆகாபினிடத்திற்கு போனான்; ஆகாப் அவனுக்கும் அவனுடன் வந்த மக்களுக்குமாக ஆடுமாடுகளை வெட்டினான். ஆகாப் ராமோத் கீலேயாத்தைத் தாக்குவதற்கு யோசபாத்தைத் தூண்டினான்.
3 இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யூதாவின் அரசன் யோசபாத்திடம், “நீ கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராகப் போக என்னுடன் வருவாயா?” எனக் கேட்டான். அதற்கு யோசபாத், “உம்மைப் போலவே நானும் ஆயத்தமாயிருக்கிறேன். என்னுடைய மக்கள் உம்முடைய மக்களைப் போலவும் இருக்கிறோம். நாங்கள் உன்னுடன் யுத்தத்தில் இணைவோம்” என்றான்.
4 மேலும் யோசபாத் இஸ்ரயேல் அரசனிடம், “முதலில் யெகோவாவின் ஆலோசனையைத் தேடுங்கள்” என்று சொன்னான்.
5 எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது போகக்கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நீர் போகலாம், இறைவன் அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள்.
6 ஆனால் யோசபாத், “நாம் விசாரிப்பதற்கு யெகோவாவின் இறைவாக்கினன் யாராவது இங்கே இல்லையா?” என்று கேட்டான்.
7 அதற்கு இஸ்ரயேலின் அரசன் ஆகாப் யோசபாத்திடம், “யெகோவாவிடம் விசாரிக்கும்படி இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் அவன் எப்போதும் என்னைப்பற்றி நன்மையாக அல்ல தீமையாகவே இறைவாக்கு சொல்லுவான். இம்லாவின் மகன் மிகாயாவே அவன்” என்றான். அப்பொழுது யோசபாத், “அரசனாகிய நீர் அவ்விதமாகக் கூறக்கூடாது” என்றான்.
8 எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் தனது அதிகாரிகளில் ஒருவனை அழைத்து, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனடியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான்.
9 இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர்.
10 அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா இரும்பினால் கொம்புகளைச் செய்து அவர்களைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: இந்த இரும்புக் கொம்புகளால் சீரியர் முழுவதுமாக அழியும்வரைக்கும் அவர்களைக் குத்திக் கொல்வீர்கள்” என்றான்.
11 மற்ற எல்லா இறைவாக்கினர்களும் அதையே வாக்காக உரைத்து, “கீலேயாத்திலுள்ள ராமோத்தை தாக்கி வெற்றிகொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா அதை அரசராகிய உமது கையில் தருவார்” என்றார்கள்.
12 மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம், “எல்லா இறைவாக்கினர்களும் ஒரேவிதமாகவே வாக்கு உரைத்து அரசனுக்கு வெற்றியையே அறிவிக்கிறார்கள். நீயும் அப்படியே பேசி அரசனுக்குச் சாதகமானதையே சொல்” என்றான்.
13 ஆனால் மிகாயா அவனிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் எனது இறைவன் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
14 அவன் வந்து சேர்ந்தபோது ஆகாப் அரசன் அவனிடம், “மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்கு போகலாமா அல்லது போகக்கூடாதா?” என்று கேட்டான். மிகாயா அதற்குப் பதிலாக, “போய்த் தாக்கி வெற்றிபெறுங்கள்; அவர்கள் உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்” என்று சொன்னான்.
15 அரசன் அவனிடம், “யெகோவாவின் பெயரில் உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல வேண்டாமென எத்தனை தடவை உன்னை நான் ஆணையிட வைக்கவேண்டும்?” எனக் கேட்டான்.
16 அப்பொழுது மிகாயா, “இஸ்ரயேலர் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு சமாதானத்துடன் போகட்டும்’ என்று யெகோவா சொன்னார்” என்றான்.
17 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யோசபாத் அரசனிடம், “அவன் எப்போதும் எனக்கு நன்மையானதையல்ல தீமையானதையே இறைவாக்காகச் சொல்வான் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றான்.
18 தொடர்ந்து மிகாயா, “ஆகவே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா தமது அரியணையில் அமர்ந்திருப்பதையும், அவரது வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் வானத்தின் எல்லா சேனைகளும் நிற்பதையும் நான் கண்டேன்.
19 அப்பொழுது யெகோவா அந்த சேனையிடம், ‘இஸ்ரயேலின் அரசன் ஆகாபை, கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் தாக்குவதற்கும், அங்கே அவன் சாகும்படி போவதற்கும் அவனைத் தூண்டிவிடுகிறவன் யார்?’ எனக் கேட்டார். “அதற்கு ஒரு ஆவி ஒருவிதமாகவும், இன்னொரு ஆவி இன்னொரு விதமாகவும் வித்தியாசமான யோசனை கூறின.
20 கடைசியாக ஒரு ஆவி முன்னேவந்து யெகோவாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனைத் தூண்டுவேன்’ என்றது. “ ‘எவ்விதமாக?’ என்று யெகோவா கேட்டார்.
21 “ ‘நான் போய் அவனுடைய எல்லா இறைவாக்கினர்களின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்’ என்றது. “ ‘போய் அவ்வாறே செய், நீ அவனைத் தூண்டி வெற்றிபெறுவாய்’ என யெகோவா கூறினார்.
22 “அவ்வாறே இப்பொழுதும் யெகோவா உனது இறைவாக்கினர்களின் வாய்களில் பொய்யின் ஆவியை வைத்திருக்கிறார். யெகோவா உனக்குப் பேரழிவையே நியமித்திருக்கிறார்” என்றான்.
23 அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா முன்பாகப் போய் மிகாயாவின் முகத்தில் அறைந்தான். பின் அவனிடம், “யெகோவாவின் ஆவியானவர் என்னைவிட்டு உன்னுடன் பேச வரும்போது, எந்த வழியாக வந்தார்” என்றும் மிகாயாவைக் கேட்டான்.
24 அதற்கு மிகாயா, “நீ ஒளிப்பதற்கு ஒரு உள் அறையினுள் போகும்நாளில் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றான்.
25 அப்பொழுது இஸ்ரயேலின் அரசனான ஆகாப், “மிகாயாவைப் பிடித்து நகர ஆளுநனான ஆமோனிடமும், அரசனின் மகனான யோவாஸினிடமும் கொண்டுபோய்,
26 அவர்களிடம், ‘அரசன் கூறுவது இதுவே: நான் பாதுகாப்பாக திரும்பி வரும்வரையும் இவனைச் சிறையில் போடுங்கள். அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறொன்றையும் கொடுக்கக்கூடாது’ ” என்று கூறினான்.
27 அதற்கு மிகாயா, “நீ பாதுகாப்பாகத் திரும்பி வந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை” என்று சொல்லி, “மக்களே, நீங்கள் எல்லோரும் எனது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்!” என்றும் சொன்னான்.
28 எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போனார்கள்.
29 இஸ்ரயேலின் அரசன் யோசபாத்திடம், “நான் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்கு வருகிறேன். நீர் உமது அரச உடைகளை உடுத்திக்கொள்ளும்” என்றான். அப்படியே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்குப் போனான்.
30 இப்பொழுது சீரிய அரசனோ தனது தேர்ப்படைத் தளபதிகளிடம், “நீங்கள் இஸ்ரயேலின் அரசனைத் தவிர சிறியவனோ, பெரியவனோ வேறு யாருடனும் சண்டையிட வேண்டாம்” எனக் கட்டளையிட்டிருந்தான்.
31 தேர்ப்படை தளபதிகள் யோசபாத்தைக் கண்டபோது, “நிச்சயமாக இவன்தான் இஸ்ரயேலின் அரசன்” என்று நினைத்து அவனைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் கதறினான். யெகோவா அவனுக்கு உதவி செய்தார். இறைவன் அவர்களை அவனிடமிருந்து விலகிப்போகச் செய்தார்.
32 தேர்ப்படைத் தளபதிகள் அவன் இஸ்ரயேலின் அரசன் ஆகாப் அல்ல என்பதைக் கண்டபோது, அவனைப் பின்தொடர்வதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.
33 ஆனால் ஒருவன் தனது வில்லை உருவி குறிபார்க்காமல் எய்தபோது, இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் ஆயுதக் கவசங்களின் இடைவெளி வழியாக அது அவனைத் தாக்கியது. அரசன் ஆகாப் தேரோட்டியிடம், “தேரைத் திருப்பிக்கொண்டு என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ. நான் காயப்பட்டு விட்டேன்” என்றான்.
34 அந்த நாள்முழுவதும் கடும் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப் சாயங்காலம்வரை சீரியரின் பக்கம் பார்த்தபடி, தேரில் சாய்ந்துகொண்டு நின்றான். பின் சூரியன் மறையும் வேளையில் அவன் இறந்தான்.
×

Alert

×