ஆசாவின் ஆட்சியின் முப்பத்தாறாம் வருடத்தில், இஸ்ரயேலின் அரசனான பாஷா, யூதாவுக்கு விரோதமாகப் போய், யூதா அரசனான ஆசாவின் எல்லையிலிருந்து யாரும் வெளியே வரவோ, உள்ளே போகவோ முடியாதபடி தடுப்பதற்காக ராமாவைச் சுற்றி அரண் அமைத்தான்.
அப்பொழுது ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவிய களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனை திரவிய களஞ்சியத்திலும் இருந்து வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து தமஸ்குவை ஆட்சி செய்த சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான்.
மேலும் அவன் அவர்களிடம், “உம்முடைய தகப்பனுக்கும், என்னுடைய தகப்பனுக்குமிடையில் இருந்ததுபோல, உமக்கும் எனக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும். இதோ பாரும், நான் வெள்ளியையும், தங்கத்தையும் உமக்கு பரிசாக அனுப்புகிறேன். நீர் இஸ்ரயேலின் அரசனான பாஷாவுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை முறித்துவிடும். அப்போது அவன் என்னிடமிருந்து பின்வாங்கி விடுவான்” என்று சொல்லி அனுப்பினான்.
அப்பொழுது அரசன் ஆசா யூதாவின் எல்லா மனிதர்களையும் கொண்டுவந்தான். அவர்கள் போய் பாஷா பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் ராமாவிலிருந்து கொண்டுபோனார்கள். ஆசா அவற்றைப் பயன்படுத்தி கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான்.
அந்தக் காலத்தில் தரிசனக்காரனான அனானி என்பவன் யூதாவின் அரசன் ஆசாவிடம் வந்தான். அவன் ஆசாவிடம், “நீ இறைவனாகிய உனது யெகோவாவிடம் நம்பிக்கை வைக்காமல், சீரிய அரசனில் நம்பிக்கை வைத்தாய். அதனால் சீரிய அரசனின் படை உனது கைக்குத் தப்பித்துக் கொண்டது.
கூஷியர்களும், லிபியர்களும் எண்ணற்ற தேர்களுடனும், குதிரைவீரர்களுடனும் வலிய இராணுவவீரர்களாய் இருக்கவில்லையோ? அப்படியிருந்தும் நீ யெகோவாமேல் நம்பிக்கை வைத்தபோது, அவர் உன் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தாரே.
ஏனெனில் இருதயத்தை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுக்கிறவர்களைப் பெலப்படுத்தும்படி, யெகோவாவினுடைய கண்களோ பூமியெங்கும் உலாவுகிறது. நீ மூடத்தனமானதைச் செய்திருக்கிறாய். ஆனபடியினால் இன்றுமுதல் நீ யுத்தங்களை சந்திப்பாய்” என்று சொன்னான்.
இதனால் ஆசா தரிசனக்காரனுடன் கோபங்கொண்டான்; அவன்மேல் ஆசா மிகவும் கோபங்கொண்டதனால் அவனைச் சிறையில் அடைத்தான். அந்த நாளிலேயே ஆசா சில மக்களையும் மிகக் கொடுமையாக ஒடுக்கினான்.
அவனுடைய ஆட்சியின் முப்பத்தொன்பதாம் வருடத்தில் ஆசா தனது கால்களில் ஏற்பட்ட வியாதியினால் வேதனைப்பட்டான். அவனுடைய வியாதி கடுமையானதாய் இருந்தும், அவன் தனது வியாதியிலும்கூட யெகோவாவின் உதவியைத் தேடவில்லை. ஆனால் வைத்தியரின் உதவியை மட்டும் தேடினான்.
அவர்கள் ஆசாவை தாவீதின் நகரத்தில் தனக்கென அவன் வெட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவர்கள் நறுமணப் பொருட்களினாலும், பலவிதமான தைலங்களினாலும் நிறைந்த பாடையில் அவனைக் கிடத்தினார்கள். அவர்கள் அவனைக் கனப்படுத்துவதற்காக பெரும் நெருப்பை வளர்த்தனர்.