அவன் ஆசாவைச் சந்திக்க வெளியே போய் அவனிடம் சொன்னதாவது: “ஆசாவே, யூதா, பென்யமீன் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் யெகோவாவோடு இருக்கும்போது அவர் உங்களோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டுகொள்வீர்கள். ஆனால் நீங்கள் அவரை விட்டுவிடுவீர்களானால், அவரும் உங்களைக் விட்டுவிடுவார்.
ஆசா, ஓதேத்தின் மகனான இறைவாக்கினன் அசரியாவின் இந்த வார்த்தைகளையும் இறைவாக்கையும் கேட்டபோது தைரியமடைந்தான். அவன் யூதா முழுவதிலும், பென்யமீன் முழுவதிலும், எப்பிராயீம் மலைநாட்டில் தான் கைப்பற்றிய பட்டணங்களிலும் இருந்த அருவருப்பான விக்கிரகங்களை அகற்றிப்போட்டான். அவன் யெகோவாவின் ஆலய மண்டபத்தின் முன்பக்கமிருந்த யெகோவாவினுடைய பலிபீடத்தை திருத்தியமைத்தான்.
அதன்பின் அவன் யூதா மக்களையும், பென்யமீன் மக்களையும், அவர்களுக்குள்ளே குடியிருந்த எப்பிராயீம், மனாசே, சிமியோன் கோத்திரத்தைச் சேர்ந்த மக்களையும் கூடிவரச் செய்தான். ஏனெனில் பெரும் எண்ணிக்கையான மக்கள் ஆசாவின் இறைவனாகிய யெகோவா அவனோடிருக்கிறார் என்பதைக் கண்டபோது, இஸ்ரயேலில் இருந்து அவனிடத்திற்கு வந்திருந்தார்கள்.
அந்த நேரத்திலே அவர்கள் தாங்கள் கொள்ளையிட்டு கொண்டுவந்ததிலிருந்து எழுநூறு மாடுகளையும், ஏழாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் யெகோவாவுக்குப் பலியிட்டார்கள்.
தாங்கள் முழு இருதயத்துடனும் செய்துகொண்ட ஆணையின் நிமித்தம், யூதா மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் இறைவனை ஆர்வத்தோடு தேடியதால் அவர்கள் அவரைக் கண்டுகொண்டார்கள். எனவே யெகோவா அவர்களுக்கு எல்லாப் பக்கத்திலும் இளைப்பாறுதலைக் கொடுத்தார்.
அரசன் ஆசா தன் பாட்டி மாக்காளை, அவள் அருவருப்பான அசேரா விக்கிரக தூணைச் செய்ததினால், அரச மாதா என்ற நிலையிலிருந்து நீக்கிவிட்டான். ஆசா அந்தத் தூணை வெட்டி, முறித்து, கீதரோன் பள்ளத்தாக்கில் எரித்துவிட்டான்.