English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

1 Samuel Chapters

1 Samuel 9 Verses

1 அந்நாட்களில் கீஷ் என்னும் பெயருடைய மதிப்புள்ள பென்யமீனியன் ஒருவன் இருந்தான். அவன் அபியேலின் மகன்; அபியேல் சேகோரின் மகன்; சேகோர் பெகோராத்தின் மகன்; பெகோராத் பென்யமீனியனான அபியாவின் மகன்.
2 கீஸ் என்பவனுக்கு சவுல் என்னும் பெயருள்ள ஒரு மகன் இருந்தான். அவன் கவர்ச்சியான தோற்றமும், இஸ்ரயேல் மக்களுக்குள் தன்னிகரற்ற இளைஞனாகவும் இருந்தான். மற்ற எல்லோரும் அவனுடைய தோளுக்குக் கீழாகவே இருந்தனர்.
3 ஒரு நாள் சவுலின் தகப்பனான கீஷின் கழுதைகள் காணாமல் போய்விட்டன. எனவே கீஷ் தன் மகன் சவுலிடம், “நீ வேலைக்காரரில் ஒருவனை உன்னோடு கூட்டிக்கொண்டுபோய்க் கழுதைகளைத் தேடிப்பார்” என்றான்.
4 அப்படியே அவர்கள் எப்பிராயீம் மலைநாட்டின் வழியாகச் சென்று சலீஷாவைச் சுற்றியுள்ள பகுதி வழியாகப்போனார்கள். ஆனால் அங்கே கழுதைகளைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து சாலீம் மாவட்டத்திற்கு போனபோது அங்கேயும் கழுதைகளில்லை. அதன்பின் பென்யமீன் பிரதேசத்தைக் கடந்து வந்தபோது அங்கேயும் அவைகளைக் காணவில்லை.
5 அவர்கள் சூப் மாவட்டத்திற்கு வந்தபோது சவுல் தன் வேலைக்காரரிடம், “என் தகப்பன் கழுதைகளுக்காகக் கவலைப்படுவதைவிட்டு எங்களுக்காகக் கவலைப்படத் தொடங்கிவிடுவார். அதனால் வீட்டுக்குத் திரும்பிப்போவோம் வா” என்றான்.
6 அதற்கு அந்த வேலையாள், “இப்பட்டணத்தில் இறைவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார். அவர் மிகவும் மதிப்புக்குரியவர்; அவர் சொல்வது அனைத்தும் உண்மையாய் நடக்கிறது. நாம் இப்பொழுது அவரிடம் போவோம். நாம் போகவேண்டிய பாதையை ஒருவேளை அவர் நமக்கு வெளிப்படுத்துவார்” என்றான்.
7 அப்பொழுது சவுல் அவனிடம், “நாம் அங்கே போவோமானால் அந்த மனிதனுக்கு எதைக் கொண்டுபோகலாம்? நம்முடைய பைகளில் இருந்த உணவு முடிந்து விட்டதே. இறைவனுடைய மனிதனுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?” என்றான்.
8 அதற்கு அந்த வேலையாள் சவுலிடம், “இதோ என்னிடம் இன்னும் கால் சேக்கல் வெள்ளி இருக்கிறது. நம் வழியை நமக்குக் காட்டும்படி இந்தப் பணத்தை இறைவனுடைய மனிதனுக்கு நான் கொடுப்பேன்” என்றான்.
9 முற்காலத்தில் இஸ்ரயேலில் இறைவனிடம் ஆலோசனை கேட்க ஒருவன் போகும்போது அவன், “வாருங்கள், தரிசனக்காரனிடம் போவோம்” என்பான். ஏனெனில் இக்காலத்து இறைவாக்கினர், அக்காலத்தில் தரிசனக்காரர் என அழைக்கப்பட்டார்கள்.
10 அப்பொழுது சவுல் தன் வேலையாளிடம், “சரி வா போவோம்” என்றான். அப்படியே அவர்கள் இறைவனின் மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்கு புறப்பட்டுப் போனார்கள்.
11 அவர்கள் குன்றின்மேல் ஏறிப் பட்டணத்திற்குப் போகும் வழியில் தண்ணீர் எடுக்க வந்த பெண்களைக் கண்டு அவர்களிடம், “இங்கு தரிசனக்காரன் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள்.
12 அதற்கு அந்தப் பெண்கள், “ஆம், இங்கே சிறிது தூரத்தில் இருக்கிறார். இன்று மக்கள் மேடையில் பலியிடப்போவதால் அவர் எங்கள் பட்டணத்திற்கு வந்திருக்கிறார். ஆகையால் நீங்கள் விரைவாக அங்கே செல்லுங்கள்.
13 நீங்கள் பட்டணத்திற்குள் சென்றவுடன் அவர் மேடைக்குச் சாப்பிடப் போகுமுன் அவரைச் சந்திக்கலாம். அவர் அங்குபோய் பலிசெலுத்தியவற்றை ஆசீர்வதிக்க வரும்வரைக்கும் மக்கள் சாப்பிடத் தொடங்கமாட்டார்கள். அதன்பின் அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள். ஆகையால் இப்பொழுது மேலே போனால் அவரை இந்த நேரத்தில் அங்கே சந்திக்கலாம்” என்றார்கள்.
14 அவர்கள் மேலே ஏறிப் பட்டணத்திற்கு வந்தபோது, சாமுயேல் மேடைக்கு வரும் வழியில் அவர்களுக்கு எதிரே வந்தான்.
15 சவுல் அவ்விடம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே யெகோவா சாமுயேலுக்கு அவன் வருகையைத் தெரியப்படுத்தினார்.
16 “நாளைக்கு இந்நேரத்தில் பென்யமீன் நாட்டிலிருந்து ஒரு மனிதனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களாகிய இஸ்ரயேலருக்குத் தலைவனாக அவனை அபிஷேகம்பண்ணு. அவன் என் மக்களைப் பெலிஸ்தியரிடமிருந்து விடுவிப்பான். என் மக்களின் அழுகுரல் என்னிடம் எட்டியதால் நான் அவர்களை நோக்கிப் பார்த்தேன்” என்றார்.
17 சாமுயேல் சவுலைக் கண்டதும் யெகோவா அவனிடம், “நான் உனக்குக் குறிப்பிட்டுச் சொன்ன மனிதன் இவனே. இவன் என் மக்களை ஆளுகை செய்வான்” என்று சொன்னார்.
18 அப்பொழுது சவுல் நுழைவுவாசலில் சாமுயேலை அணுகி அவனிடம், “தரிசனக்காரனின் வீடு எங்கே? என தயவுசெய்து எனக்குச் சொல்வீரோ” என்று கேட்டான்.
19 அதற்கு சாமுயேல், “நானே அந்த தரிசனக்காரன். நீ எனக்கு முன்னே மேடைக்குப்போ. நீ இன்று என்னுடன் சாப்பிடவேண்டும். நாளை காலையில் நான் உன்னைப் போகவிடுவேன். உன் இருதயத்தில் உள்ளவற்றை எல்லாம் உனக்குச் சொல்வேன்.
20 மூன்று நாட்களுக்குமுன் காணாமற்போன உங்கள் கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை கண்டுபிடிக்கப்பட்டது. உன்னையும், உன் தகப்பன் குடும்பத்தினர் எல்லோரையும்விட வேறு யாரை இஸ்ரயேலர் விரும்பியிருக்கிறார்கள்” என்றான்.
21 அதற்கு சவுல், “நான் இஸ்ரயேலின் மிகச்சிறிய கோத்திரமான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? என் வம்சம் பென்யமீன் கோத்திர வம்சங்கள் எல்லாவற்றிலும் சிறியது அல்லவா? அப்படியிருக்க இப்படியான காரியத்தை என்னிடம் நீர் ஏன் சொல்கிறீர்?” என்று கேட்டான்.
22 அப்பொழுது சாமுயேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் மண்டபத்தினுள் அழைத்துச்சென்று அழைக்கப்பட்ட முப்பது பேர்களுக்குள்ளே முதன்மையான இடத்தில் அவர்களை நிறுத்தினான்.
23 மேலும் சாமுயேல் சமையற்காரனிடம், “வேறாக எடுத்து வைக்கும்படி சொல்லி நான் உன்னிடம் கொடுத்த அந்த இறைச்சித் துண்டைக் கொண்டுவா” என்றான்.
24 அப்படியே சமையற்காரன் ஒரு தொடையையும், அதைச் சேர்ந்த பகுதியையும் எடுத்து சவுலுக்குமுன் வைத்தான். அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இது உனக்காகவே வைக்கப்பட்டது. இதைச் சாப்பிடு. ஏனெனில் நான் விருந்தாளிகளை அழைத்திருக்கிறேன் என்று சொன்ன நேரம் தொடக்கமுதல் இத்தருணத்திற்காக அது புறம்பாக வைக்கப்பட்டிருக்கிறது” என்றான். அன்று சவுல் சாமுயேலுடன் விருந்து சாப்பிட்டான்.
25 அதன்பின் அவர்கள் மேடையில் இருந்து நகருக்குள் வந்தபோது, சாமுயேல் தன் வீட்டின் மேல்மாடியில் சவுலோடு பேசிக்கொண்டிருந்தான்.
26 அவர்கள் இருவரும் அதிகாலையில் எழுந்தார்கள். சாமுயேல் மேல்மாடியிலிருந்த சவுலைக் கூப்பிட்டு, அவனிடம், “நான் உன்னை வழியனுப்பி வைக்கவேண்டும். ஆயத்தப்படு” என்றான். சவுல் ஆயத்தமானபின் சாமுயேலும், சவுலும் சேர்ந்து வெளியே சென்றார்கள்.
27 அவர்கள் இருவரும் பட்டணத்தின் எல்லையை அடைந்ததும், சாமுயேல் சவுலிடம், “உன் வேலையாளை உனக்கு முன்னே நடந்து போகச் சொல். ஆனால் இறைவனின் வார்த்தையை நான் உனக்குத் தெரியப்படுத்தும்வரை நீ சிறிது தாமதித்துச் செல்” என்றான். எனவே வேலையாள் அவனுக்கு முன்னே போனான்.
×

Alert

×