எனவே மக்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் கேருபீன்களுக்கு நடுவில் அரியணையில் அமர்ந்திருக்கும் சேனைகளின் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். அங்கே ஏலியின் இரு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியோடு வந்தார்கள்.
இந்தச் சத்தத்தைக் கேட்ட பெலிஸ்தியர், “எபிரெயருடைய முகாமுக்குள் கேட்கும் இந்தக் கூக்குரலுக்குக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். யெகோவாவினுடைய பெட்டி முகாமுக்குள் கொண்டுவரப்பட்டதை அறிந்தபோது, பெலிஸ்தியர் பயமடைந்தார்கள்.
ஐயோ நமக்கு கேடு! இந்த வல்லமையுள்ள கடவுளின் கையிலிருந்து நம்மை விடுவிப்பவர் யார்? இந்த கடவுள் எகிப்தியரை பாலைவனத்தில் எல்லாவித வாதைகளினாலும் தாக்கினார் அல்லவா!
அப்படியே பெலிஸ்தியர் போரிட்டார்கள். இஸ்ரயேலர் முறியடிக்கப்பட்டு அனைவரும் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது; இஸ்ரயேலர் காலாட்படையினரில் முப்பதாயிரம்பேரை இழந்தார்கள்.
அவன் ஓடிவந்து சேரும்போது, ஏலி பாதையருகே தன் நாற்காலியில் உட்கார்ந்து வழியையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். ஏனெனில் இறைவனின் பெட்டிக்காக அவன் உள்ளம் பயமடைந்திருந்தது. அவ்வேளை நகரத்துக்குள் வந்தவன் நடந்ததைச் சொன்னபோது பட்டணத்திலுள்ளவர்கள் எல்லோரும் புலம்பி அழுதார்கள்.
அந்த மனிதன் ஏலியிடம், “நான் இப்பொழுதுதான் யுத்தகளத்திலிருந்து வந்திருக்கிறேன். இன்றுதான் அதிலிருந்து தப்பி ஓடிவந்தேன்” என்றான். அதற்கு ஏலி அவனிடம், “அங்கு என்ன நடந்தது மகனே?” என்று கேட்டான்.
அதற்குச் செய்தி கொண்டுவந்தவன் ஏலியிடம், “இஸ்ரயேலர் பெலிஸ்தியர் முன்பாக தப்பியோடிவிட்டார்கள். படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. உம்முடைய மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறந்துவிட்டார்கள். இறைவனின் பெட்டியையும் கைப்பற்றிவிட்டார்கள்” என்றான்.
இறைவனின் பெட்டிக்கு நடந்ததைப்பற்றி அவன் சொன்னவுடனே, ஏலி தன் வாசலருகேயிருந்த நாற்காலியிலிருந்து பிடரி அடிபட விழுந்தான். அவன் முதியவனும், உடல் பெருத்தவனுமாயிருந்ததால் கழுத்து முறிந்து இறந்தான். அவன் நாற்பது வருடங்கள் இஸ்ரயேலருக்கு நீதிபதியாக இருந்தான்.
பினெகாசின் மனைவியான, அவன் மருமகள் கர்ப்பவதியாயிருந்தாள். அவளுக்குப் பேறுகாலமாயிருந்தது. இறைவனின் பெட்டி கைப்பற்றப்பட்ட செய்தியையும், தன் மாமனும், கணவனும் இறந்த செய்தியையும் கேள்விப்பட்டவுடனே, பிரசவ வேதனையுண்டாகி அவள் பிள்ளை பெற்றாள். ஆனால் அவளுடைய வேதனை மரணத்துக்கேதுவாக இருந்தது.
அவள் மரணத் தருவாயில் இருந்தபோது அவளருகில் இருந்த பெண்கள் அவளிடம், “சோர்ந்து போகாதே. நீ ஒரு மகனைப் பெற்றிருக்கிறாய்” என்றார்கள். அவளோ அதற்குப் பதில் சொல்லவுமில்லை, கவனிக்கவுமில்லை.
இறைவனின் பெட்டி கைப்பற்றப்பட்டுத் தன் மாமனும், கணவனும் இறந்துபோனதால், “இஸ்ரயேலரைவிட்டு மகிமை நீங்கிற்று” என்று சொல்லி, அவனுக்கு, “இக்கபோத்” என்று பெயரிட்டாள்.